பூர்வீக இனத்தவர் மத்தியில் மறைப்பணியாற்றுவோருக்கு வாழ்த்து
மேரி தெரேசா: வத்திக்கான்
மறைப்பணி என்பது, ஒருவர் தனது கவலைகள், வேதனைகள் போன்றவற்றை மறந்து, தன்னிடமுள்ள மற்றும், கடவுள் வழங்கும் சிறந்தவற்றை அளிப்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைப்பணியாளர் குழு ஒன்றுக்கு, ஆகஸ்ட் 10, இப்புதனன்று அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.
தனது தாயகமான அர்ஜென்டீனா நாட்டு Rio Cuarto நகரின் விண்ணேற்பு அன்னை மரியா பங்குத்தளத்தில் நடைபெறும் ஒருமைப்பாட்டு மறைப்பணி நிகழ்வையொட்டி அதில் பங்குபெறும் மறைப்பணியாளர்கள், இளையோர், வயதுவந்தோர் என எல்லாருக்கும் அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“கனவுகள் ஒன்றிணைந்து கட்டப்படுகின்றன” என்ற தலைப்பை, தங்களது மறைப்பணியின் இலக்காகக் கொண்டு, அந்நாட்டின் Orán மறைமாவட்டத்திலுள்ள Victoria Este பகுதியில், Salt பூர்வீக இன மக்கள் மத்தியில் இவர்கள் ஆற்றிவரும் மறைப்பணிக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, அதனைத் தொடர்ந்து ஆற்றுமாறு ஊக்கப்படுத்தியுள்ளார்.
நம்மிடமிருக்கின்ற சிறந்தவற்றையும், கடவுள் நமக்கு அளித்துள்ள சிறந்தவற்றையும் மற்றவருக்கு வழங்குவது, மிக அழகான செயல் என்றுரைத்துள்ள திருத்தந்தை, இம்மறைப்பணியாளர்களோடு உடனிருக்கும் அருள்பணி மரியானோ அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
எனக்காக இறைவேண்டல் எழுப்புங்கள் எனவும் அச்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைப்பணியை நீங்கள் தொடர்ந்து ஆற்றுவதற்கு உதவியாக, உங்களுக்காக நானும் கடவுளை வேண்டுகிறேன் என்றும், அவர் உங்களை ஆசிர்வதிப்பாராக என்றும், தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்