தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  

திருஅவையில் இடம்பெறும் முறைகேடுகள், ஒன்றிப்புக்கு இடையூறு

தினமும் திருப்புகழ்மாலை மற்றும், செபமாலை செபிக்கின்றேன், தினமும் விவிலியத்தின் அடிப்படையில் தியானம் செய்கிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருஅவையின் சில ஆண்கள், மற்றும் பெண்களால் இடம்பெறும் அதிகார அத்துமீறல்,  பாலியல் முறைகேடுகள் போன்றவற்றால், திருஅவை துன்புறுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

போர்த்துக்கல் நாட்டு தொலைக்காட்சியின் CNN அலைவரிசைக்கு அளித்துள்ள பேட்டியில், அந்நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள், உரையாடலின் முக்கியத்துவம், ஒன்றிணைந்து பயணம் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றம், திருஅவையில் சில மனிதர்களின் பாலியல் முறைகேடுகள், உக்ரைனில் அமைதி போன்ற தலைப்புகளில், தன் எண்ணங்களை எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சில அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள், ஒருபோதும் சகித்துக்கொள்ளவே முடியாதவை என்றும், திருஅவையின் ஆண்களும், பெண்களும், அவர்கள் அருள்பணியாளராகவோ, இருபால் துறவறத்தாராகவோ, பொதுநிலையினராகவோ யாராக இருந்தாலும், அதிகார வரம்பு மீறல், கொடியதீமை என்பதை தெளிவாகக் கூற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும் பணிபுரியவும், ஒன்றிப்பை உருவாக்கி அதை வளர்க்கவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றுரைத்துள்ள திருத்தந்தை, திருஅவையில் இடம்பெறும் முறைகேடுகள் அனைத்தும், இவ்வொன்றிப்பை எப்போதும் அழிக்கின்றன என்று கூறியுள்ளார்.

மகிழ்ச்சி பெருக்கில் இ\ளையோர்
மகிழ்ச்சி பெருக்கில் இ\ளையோர்

உலக இளையோர் நாள்

போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் நகரில் 2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக இளையோர் நாள் பற்றியும் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கும் வாழ்கின்ற இளையோரை ஒன்றிணைத்து, அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி, அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில் இவ்வுலக இளையோர் நாளை உருவாக்கிய திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களுக்கே அனைத்துப் பெருமையும் சாரும்  என்றார்.

இளையோரிடம் விளங்குகின்ற படைப்பாற்றல், அவர்கள் நிகழ்காலத்தில் வேரூன்றி, வருங்காலத்தை நோக்குவதன் அடையாளமாக உள்ளது என்றும் கூறிய திருத்தந்தை, 2023ஆம் ஆண்டு உலக இளையோர் நாளுக்கு ஒரு திருத்தந்தை செல்வார், அவர் பிரான்சிசாகவோ, 24ம் யோவானாகவோ இருக்கலாம், அந்நிகழ்வு நடைபெறும்போது ஒரு திருத்தந்தை இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக நகைச்சுவையோடு கூறியுள்ளார்.

தங்களின் கலாச்சாரத்திலிருந்து வருகின்ற இளையோரிடம் அவர்களின் தாய் மொழியில் பேசவேண்டியது முக்கியம், இதனால் அவர்கள் காரியங்களை விளக்கும் முறைகளை அவர்கள் பாணியில் புரிந்துகொண்டு, அவர்களுக்குப் புரியும்முறையில் பதிலளிக்க முடியும் என்பதையும் திருத்தந்தை வலியுறுத்திக் குறிப்பிட்டார்.

செபிக்கும் முறை

தான் செபிக்கும் முறை, உரையாடலின் முக்கியத்துவம் போன்றவை குறித்தும் அப்பேட்டியில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, தினமும் திருப்புகழ்மாலை மற்றும், செபமாலை செபிக்கின்றேன், விவிலியத்தின் அடிப்படையில் தியானம் செய்கிறேன் என்று கூறினார்.

கடவுள் திருமுன் என்னை வைக்கின்றேன், சிலநேரங்களில் திசைதிருப்பப்படுவேன், ஆயினும், கடவுள் அவ்வாறு இல்லாமல், என்னைத் தேற்றுகிறார் என திருத்தந்தை தன் செப வாழ்வு குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் 11ம் தேதி போர்த்துக்கல் நாட்டு தொலைக்காட்சியின் CNN அலைவரிசைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்த பேட்டியின் இரண்டாவது பகுதி, செப்டம்பர் 05, இத்திங்கள் இரவில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2022, 14:51