தேடுதல்

திருத்தந்தையின் நேப்பிள்ஸ் திருப்பயணம் திருத்தந்தையின் நேப்பிள்ஸ் திருப்பயணம் 

மனித சமுதாயத்தின் வாழ்வுமுறை மாறவேண்டிய காலம் இது

சகோதரர், சகோதரிகளாக நம்மையெல்லாம் ஒன்றிணைக்கும் அம்சம் எது என்பதை கண்டுணர்ந்தால் மட்டுமே, நாம் எதிர்கொள்கின்ற நெருக்கடியிலிருந்து வெளிவர முடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

போர், பெருந்தொற்று, ஏழ்மை ஆகியவற்றால் உருவாகியுள்ள பிரச்சனைகள், பொது நலனுக்கு ஒன்றிணைந்து உழைப்பதன் வழியாகத் தீர்க்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் இத்தாலிய தினத்தாள் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் இத்தாலி உட்பட உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், போர், சுற்றுச்சூழல் சீர்கேடு, திட்டமிட்ட குற்றக்கும்பல்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் மார்க்கே பகுதி என பல்வேறு தலைப்புக்களில், தென் இத்தாலியின் நேப்பிள்ஸ் பகுதியில் பிரசுரமாகும் “Il Mattino” என்ற தினத்தாளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்துள்ள நீண்டதொரு பேட்டி செப்டம்பர் 18, இஞ்ஞாயிறன்று வெளியானது.

“Il Mattino” நாளிதழின் 130ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருத்தந்தை வழங்கியுள்ள இப்பேட்டியில், நேப்பிள்ஸ் மற்றும், தென் இத்தாலி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அவர் அதிகம் கவனம் செலுத்தியிருந்தாலும், உலகம் முழுவதன் வருங்காலத்தைப் பாதிக்கின்ற உலகளாவிய விவகாரங்கள் பற்றியும் தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.

சகோதரர், சகோதரிகளாக நம்மையெல்லாம் ஒன்றிணைக்கும் அம்சம் எது என்பதை கண்டுணர்ந்தால்மட்டுமே, நாம் எல்லாரும் எதிர்கொள்கின்ற நெருக்கடியிலிருந்து வெளிவர முடியும் என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்நெருக்கடி இன்று தொடங்கியது அல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பூமிக்கோளத்திற்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும், போர்கள் குறித்து நாம் விழிப்புணர்வு கொள்ளவில்லை என்றும், ஏழைகள் மற்றும், மிகக்கடுமையாய் நோய்வாய்பட்டுள்ள பூமிக்கோளத்தின் அழுகுரலுக்கு நாம் செவிமடுக்கவில்லை  என்றும் கவலையோடு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மாறவேண்டிய காலம் 

வாழ்வுமுறையை சீரமைப்பதற்கு, குறிப்பாக, நீடித்த, நிலையான மற்றும், ஒருங்கிணைந்த வளரச்சிக்கும், பொருளாதாரம் மற்றும், முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வதற்குரிய புதிய வழிகளுக்கும் வாழ்வுப் பாதையை மீள்கட்டமைக்க இதுவே காலம் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

வளரும் நாடுகளின் வெளிநாட்டுக் கடன் மன்னிக்கப்படவும், இப்பூமி சுரண்டப்படல், ஆயுதப் போட்டி, மக்கள், குறிப்பாக சிறார் முறைகேடாக நடத்தப்படல் போன்றவை முற்றிலும் நிறுத்தப்படவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இத்தகைய பிரச்சனைகள் களையப்பட பொது நலனில் அக்கறை காட்டப்படவேண்டியது மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

நீதியும், மன்னிப்பும், உண்மையான அமைதியின் தூண்கள்

இக்காலத்தில், உக்ரைனிலும், மற்ற பல பகுதிகளிலும் இடம்பெறும் போர்களால் நாம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம் எனவும், நியுயார்க் இரட்டைக்கோபுரம் பயங்கரவாதத்தால் தாக்கப்பட்டபோது, நீதியும், மன்னிப்பும் ஒன்றாக இணையும்வரை சீர்குலைந்த நிலையை முழுவதும் சீர்செய்ய இயலாது என திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கூறியதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதியும், மன்னிப்பும், உண்மையான அமைதியின் தூண்கள் என்று கூறியுள்ளார்.

நீதியும், மன்னிப்பும், அன்பின் ஒரு குறிப்பிட்ட வடிவம் என்றும், எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உள்ளது என்றும், மன்னிப்புக்குமுன்பு தீமை கண்டிக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, போரை வளர்க்காமல், அமைதியை ஏற்படுத்த, அமைதியை விதைக்க நாம் முயற்சிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அர்ப்பணம்

நேப்பிள்ஸ் நகருக்கு அருகில் உள்ள “நெருப்பின் நிலப்” (Terra dei Fuochi) பகுதியின் நிலைமை, இத்தாலியின் மார்க்கே மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை, உலக சமுதாயம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தன்னையே அர்ப்பணிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

அரசியலில் திருஅவையின் பங்கு, சந்திப்புக் கலாச்சாரம், பிறரன்பின் மிகச்சிறந்த வடிவம், திட்டமிட்டக் குற்றக்கும்பலின் தொல்லைகள், உலகின் தெற்கிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை, நேரம், வரலாறு, நிலம் ஆகியவற்றோடு உலகின் தெற்கு கொண்டிருக்கும் உறவு போன்ற தலைப்புக்களிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2022, 14:30