தேடுதல்

'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற நிகழ்வில்  திருத்தந்தை பிரான்சிஸ் 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் 

புனித பிரான்சிஸ் வழியில் புதியதொரு பொருளாதாரத்தை வடிவமையுங்கள்

புனித பிரான்சிஸ் செய்தது போல, ஏழ்மையை நாம் ஏற்கவேண்டும் என்பதல்ல, மாறாக, ஏழைகளின் துயரங்களை அகற்றும்வண்ணம் பொருளாதாரத்தை மாற்றியமைக்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஏழைகள் மற்றும், இப்பூமியின் அழுகுரலுக்குச் செவிசாய்த்து, புதியதொரு பொருளாதாரத்திற்குப் பணியாற்றுங்கள் என்று, 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற நிகழ்வில் பங்குபெற்ற பல்வேறு நாடுகளின் இளம் தொழில்முனைவோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 24, இச்சனிக்கிழமையன்று அசிசி நகரில் நிறைவடைந்த 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற மூன்று நாள் நிகழ்வில் பங்குபெற்ற, நூற்றுக்கும் மேற்பட்ட  நாடுகளின் ஏறத்தாழ ஆயிரம் இளம் பொருளாதார வல்லுனர்கள் மற்றும், தொழில்முனைவோருக்கு உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

இச்சனிக்கிழமை இத்தாலி நேரம் காலை பத்து மணியளவில் அசிசியின் தூதர்களின் புனித மரியா பசிலிக்கா (Basilica di Santa Maria degli Angeli) வளாகத்திற்கு அருகிலுள்ள அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலில் பல நாடுகளின் இளம் பொருளாதார வல்லுனர்கள் பகிர்ந்த சாட்சியங்களைக் கேட்டபோது, உங்களிடம் எதுவும் இல்லையெனினும், குரலை உயர்த்துங்கள் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஓர் இளைஞர், தன்னைப் போலவே அழைப்புப்பெற்ற மற்றோர் இளைஞரைப் பார்க்கும்போது, அந்த அனுபவம் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான இளையோருக்கும் கிடைக்கும் எனவும், அதனால் மாபெரும் காரியங்கள் இயலக்கூடியதாய் மாறும் எனவும் கூறித் தன் உரையைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வில் பங்குபெற்ற இளையோர் உலகைச் சிறந்ததாக மாற்றும் சக்தியைக் கொண்டிருப்பதை நினைவுபடுத்தினார்.

இளையோராகிய நீங்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்ய முடியும் என்பதை கடவுளின் துணையால் அறிந்திருக்கிறீர்கள், இதேமாதிரி இளையோர் வரலாற்றில் உங்களுக்கு முன்னதாகவே ஆற்றியிருக்கின்றனர் என்று திருத்தந்தை கூறினார்.

முந்தைய தலைமுறைகள் இக்கால இளையோருக்கு பல வளங்களை விட்டுச்சென்றுள்ளன, ஆயினும் இளையோர் இப்பூமிக்கோளத்தையும், அமைதியையும் பாதுகாக்கும் முறை குறித்து அறியாதிருக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தின் கைவினைஞர்கள் மற்றும், அதனைக் கட்டியெழுப்புவர்களாகச் செயல்பட அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல், மற்றும், பூமி குறித்த புதிய கண்ணோட்டம்

'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' நிகழ்வில்  திருத்தந்தை பிரான்சிஸ்
'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ்

பொருளாதாரத்தின் புதிய வடிவம் குறித்த முன்னறிவு கண்ணோட்டத்தை மையப்படுத்தி தன் கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை, சுற்றுச்சூழல், மற்றும், பூமி குறித்த புதிய கண்ணோட்டம் அவசியம் என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளார்.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சமுதாய, உறவுசார்ந்த மற்றும், ஆன்மிகக் கூறுகளுக்கு கவனம் செலுத்த அழைப்புவிடுக்கின்றது என்றும், இது, ஏழைகள், மற்றும், இப்பூமியின் அழுகுரலை ஏற்பதை உள்ளடக்கியது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஏழைகளை எப்போதும் மனதில் இருத்தி, நவீன உலகில் மகிழ்வின் பஞ்சத்தை அகற்றுவதற்கு உறவுகளைக் கட்டியெழுப்பவேண்டும் எனவும், பொருளாதார மூலதனத்தைவிட, ஆன்மிக மூலதனம் முதலும் முக்கியமுமானது என்பது ஏற்கப்படவேண்டும் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்

மதிப்பு, அன்பு, ஏழைகள் பராமரிப்பு

'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' நிகழ்வில்  திருத்தந்தை பிரான்சிஸ்
'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ்

அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஏழைகள் மீது கொண்டிருந்த அன்பை நினைவுபடுத்திய திருத்தந்தை, 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்', ஏழைகள், நலிந்தோர், வாய்ப்பிழந்தோர் என எல்லாரையும் மதிக்கவும், அன்புகூரவும், பராமரிக்கவும் வேண்டும்

என்றும், இது ஏழைகளுக்காகப் பணியாற்றுவது மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் மாற்றுவதாகும் என்றும் கூறியுள்ளார்.

புனித பிரான்சிஸ் செய்தது போல, ஏழ்மையை நாம் ஏற்கவேண்டும் என்பதல்ல, மாறாக, ஏழைகளின் துயரங்களை அகற்றும்வண்ணம் பொருளாதாரத்தை மாற்றியமைக்கவேண்டும் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

ஏழையரில் மிக ஏழையரின் கண்களோடு உலகை நோக்குதல், கடினவேலைசெய்வோர் மற்றும், உழைப்பின் முக்கியத்துவத்தை நினைவுகூர்தல், கருத்தியல்களைச் செயல்களில் காட்டுதல் ஆகிய மூன்று அம்சங்களை இளம் பொருளாதார நிபுணர்களுக்கு எடுத்துரைத்து, சிறு செபத்தோடு தன் உரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2022, 14:46