தேடுதல்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், 

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல், மக்கள் பணியாளர்

ஓர் அருள்பணியாளர் தூயவராக இருத்தல் என்பது, அவர், மக்களால் உண்ணப்படும் ரொட்டி போன்று இருக்கவேண்டும் - ஆயர் அல்பினோ லூச்சியானி

மேரி தெரேசா: வத்திக்கான்

Albino Luciani என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், செப்டம்பர் 4, இஞ்ஞாயிறன்று அருளாளராக அறிவிக்கப்படுவதையொட்டி, அவர் ஆயராகப் பணியாற்றியபோது, எவ்வாறு மக்கள் பணியாளராக இருந்தார் என்பது பற்றிய புதிய ஒலிப்பேழை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீ அருள்பணியாளர் வாழ்வை ஏற்றுக்கொள் என, எனது தாய் என்னிடம் ஒருபோதும் கூறியதில்லை, ஆயினும் அவர் மிகவும் நல்லவர், அவர் ஆண்டவரை எவ்வளவு அன்புகூர்ந்தார் என்றால், நான் ஆண்டவர் அழைப்பை ஏற்றுச் சென்றபோது தடையேதும் சொல்லவில்லை என, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் கூறிய வார்த்தைகள், இன்னும் பல கத்தோலிக்கரின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளன.

1968ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி, வித்தோரியோ வெனெத்தோ மறைமாவட்டத்தின் பியாவே புனித மரியா பங்குத்தள ஆலயத்தில் Giuseppe Nadal என்பவரை அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்த திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் ஆயர் Albino Luciani அவர்கள், தனது அழைப்பு குறித்து இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், அருளாளராக அறிவிக்கப்படுவதையொட்டி வெளியாகியுள்ள ஒலிப்பேழையில், அத்திருத்தந்தை ஆற்றிய 11 நிமிட மறையுரை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் இல்லம்
திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் இல்லம்

இந்த ஒலிப்பேழையின் அடிப்படையில், தன் சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ள திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் இத்திருத்தந்தை கூறிய வார்த்தைகள் இக்காலத்திற்கு மிகவும் ஏற்றதாக உள்ளன என்று கூறியுள்ளார்.

தன் ஆடுகளின் மணத்தை அறிந்த ஆயர்கள் பற்றிப் பேசுகின்ற அத்திருத்தந்தையின் வார்த்தைகள், அருளாளராக அறிவிக்கப்படவுள்ள அவரை, அதிகம் அன்புகூர உதவுகின்றன என்று, தொர்னியெல்லி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அன்னையர், கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முன்மாதிரிகையாய் இருக்கவேண்டும் என்று ஆயர் அல்பினோ அவர்கள் தன் குடும்பத்தாரிடம் கூறியதாகவும் அருள்பணி ஜூசப்பே அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஓர் அருள்பணியாளர் தூயவராக இருத்தல் என்பது, அவர், மக்களால் உண்ணப்படும் ரொட்டி போன்று இருக்கவேண்டும் என ஆயர் அல்பினோ அவர்கள் கூறியதாக, பின்னாளில் அருளாளராக அறிவிக்கப்படவுள்ள அருள்பணி Francesco Mottola அவர்களும் தன் பதிவு ஒன்றில் குரிப்பிட்டுள்ளார்.

தனது அருள்பணித்துவ வாழ்வு திருப்பொழிவு திருப்பலியில் ஆயர் அல்பினோ அவர்கல் ஆற்றிய மறையுரையை பதிவுசெய்து வெளியிட்டுள்ள 79 வயது நிரம்பிய அருள்பணியாளர் ஜூசப்பே அவர்கள், வத்திக்கான் ஊடகத்திற்கு அந்த ஒலிப்பேழையை வழங்கியுள்ளார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் “Fidei donum” என்ற மறைப்பணி அமைப்பில் புருண்டி நாட்டில் மறைப்பணியாற்றியபின், தற்போது Pieve di Soligo என்ற கிராமத்தில் பங்குத்தளப் பொறுப்பாளராக உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2022, 15:34