திருத்தந்தை: உலகம் அணு ஆயுதப் போரின் ஆபத்தை எதிர்கொள்கிறது
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தையின் பிரதிநிதிகள், துயர்நிறைந்த இக்காலக்கட்டத்தில், துன்புறும் மக்களோடும், தலத்திருஅவைகளோடும் தான் கொண்டிருக்கும் அருகாமையை வெளிப்படுத்தி வருவதற்கும், அவர்கள் தங்கள் பணித்தளங்களில் ஆற்றிவரும் பணிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் பல்வேறு நாடுகள், மற்றும், பன்னாட்டு நிறுவனங்களில் திருத்தந்தையின் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் திருப்பீடத் தூதர்கள், நிரந்தரப் பார்வையாளர்கள், திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றுவோர் என 110 பேரை, செப்டம்பர் 08, இவ்வியாழன் காலை 9 மணிக்கு வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இன்றைய உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கவலையோடு எடுத்துரைத்தார்.
வத்திக்கானில் திருத்தந்தையின் பிரதிநிதிகளோடு மூன்று நாள் கூட்டத்தை நடத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் துண்டு துண்டாய் இடம்பெற்றுவரும் மூன்றாம் உலகப் போருக்கு மத்தியில், அமைதியைக் கொணர திருப்பீடம் எடுத்துவரும் முயற்சிகள் குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
உலகம் போரினால் நிலைகுலைந்துள்ளது
செப்டம்பர் 10, வருகிற சனிக்கிழமையன்று நிறைவுபெறும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் இப்பிரதிநிதிகளுக்கு, உலகில் நாடுகளையும், திருஅவையையும் பாதிக்கின்ற பல்வேறு உலகளாவிய விவகாரங்கள் குறித்து உரையாற்றிய திருத்தந்தை, உலகம் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சூழலில் இக்கூட்டம் நடைபெறுவதைக் குறிப்பிட்டார்.
கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய கடுமையான நெருக்கடிகள், நம் தினசரி வாழ்வு மற்றும், மேய்ப்புப்பணி நடவடிக்கைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கட்டாயமாகத் திணித்திருந்தன என்றும் கூறியுள்ள திருத்தந்தை, அப்பெருந்தொற்றின் பின்விளைவு மோசமானதாக இருக்கும் எனத்தெரிகின்ற நிலையிலும், நமது இந்த சந்திப்பதை இயலக்கூடியதாக ஆக்கியுள்ள கடவுளுக்கு நன்றி கூறுவோம் என்று கூறியுள்ளார்.
இருந்தபோதிலும், போரில் அணு ஆயுதப் பரவலின் அச்சுறுத்தல் மற்றும், உலகளாவிய சட்டம் மீறப்படுவதால் ஐரோப்பாவும், உலகம் முழுவதும் நிலைகுலைந்துள்ளன என்றும், இதனால் உலகம் கடுமையான பொருளாதார மற்றும், சமுதாய நெருக்கடிகளின் எதிர்விளைவுகளைச் சந்திக்கின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
துண்டு துண்டாக இடம்பெறும் மூன்றாம் உலகப் போரால் உலகம் முடங்கிப் போயுள்ளது எனவும், பல்வேறு ஆயுத மோதல்கள் இடம்பெறும் நாடுகளில் திருத்தந்தையின் பிரதிநிதிகள் பணியாற்றுகின்றனர் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, துன்புறும் மக்களோடு தான் கொண்டிருக்கும் அருகாமையைத் தெரிவித்து வருவதற்காக, அப்பிரதிநிதிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.
மறைப்பணியில் கவனம்
ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் திருஅவையில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு தயாரிப்புகள் இடம்பெற்றுவரும்வேளை, Praedicate Evangelium என்ற புதிய திருத்தூது கொள்கைத் திரட்டை திருப்பீடத் தலைமையகத்தில் நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்தும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
தங்களின் பணிக்காலத்திலேயே இறைபதம் சேர்ந்த திருப்பீடத் தூதர்களாகிய பேராயர்கள் Joseph Chennoth, Aldo Giordano ஆகிய இருவரையும் திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.
91 திருப்பீடத் தூதர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் திருத்தந்தையின் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் 6 நிரந்தரப் பார்வையாளர்கள் ஆகியோர் இவ்வியாழனன்று திருத்தந்தையைச் சந்தித்த குழுவில் இருந்தனர். உடல்நிலை மற்றும், வேறு சில தடைகளால், திருத்தந்தையின் 5 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை.
தற்போது நாடுகளின் திருப்பீடத் தூதரகங்கள் மற்றும், திருப்பீடச் செயலகத்தின் தூதரகப் பணிகளில் 167 பேர், திருத்தந்தையின் உடன்உழைப்பாளர்களாக உள்ளனர். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறையின் திருஅவை கல்வி நிறுவனத்தில் படித்த நான்கு பேரை, மறைப்பணி ஆண்டில் வெளியிடங்களில் பணியாற்ற அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்