தேடுதல்

நூர்-சுல்தான் சுதந்திர மாளிகையில் உலக மதங்களின் கருத்தரங்கு

உலக அளவில் கலாச்சாரங்களிடையே கலந்துரையாடலை ஊக்குவிக்கும் ஒரு கருத்தரங்காக, கஜகஸ்தான் நாடு மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே ஒரு பாலத்தைக் கட்டியெழுப்பும் நாடாக மாறியுள்ளது. கஜகஸ்தான் அரசுத்தலைவர் Tokayev

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நூர்-சுல்தான் சுதந்திர மாளிகையில் இடம்பெறும், உலகப் பெரிய மற்றும் பூர்வீக மதங்களின்  இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மாளிகையை உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு சென்றடைந்தார், அப்போது இந்திய இலங்கை நேரம் காலை 9 மணி 30 நிமிடங்கள். பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் குழுமியிருக்க, முதலில் ஒரு நிமிட செப நேரம் அனைத்துப் பிரதிநிதிகளாலும் அனுசரிக்கப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கைத் துவக்கிவைத்து முதலில் உரையாற்றினார் கஜகஸ்தான் அரசுத்தலைவர் Tokayev.  உலக அளவில் கலாச்சாரங்களிடையே கலந்துரையாடலை ஊக்குவிக்கும் ஒரு கருத்தரங்காக இது மாறியுள்ளது என்ற அரசுத்தலைவர், கஜகஸ்தான் நாடு மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே ஒரு பாலத்தைக் கட்டியெழுப்பும் நாடாக மாறியுள்ளது என்பதையும் குறிப்பிட்டார். இந்தக்கருத்தரங்கின் வரலாற்று முக்கியத்துவம் அதிகரித்துவருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் அரசுத்தலைவர். உலக நாடுகளிடையேயே நம்பிக்கையின்மைகள், மோதல்கள், பதட்டநிலைகள் மீண்டும் திரும்பிவந்துள்ளது வருத்தத்துக்குரியது என்பதை கவலையுடன் வெளியிட்ட கஜகஸ்தான் அரசுத்தலைவர், இதற்கான தீர்வு, நல்மனம், கலந்துரையாடல், ஒத்துழைப்பு என்பதையும் தன் துவக்க உரையில் எடுத்தியம்பினார். பேச்சுவார்த்தைகளின் வழியாகத்தான் எந்தவொரு முரண்பாட்டிற்கும் தீர்வுகாணமுடியும் என்பதை கஜகஸ்தான் நாடு எப்போதும் வலியுறுத்துவருகின்றது என்பதையும் எடுத்துரைத்து தன் உரையை நிறைவுச்செய்தார் அரசுத்தலைவர். அதன்பின் திருத்தந்தையும் தன் உரையை மதப்பிரதிநிதிகளுக்கு வழங்கினார்.

சில பிரதிநிதிகளின் உரைக்குப்பின் அதில் பங்குபெற்ற அனைத்துப் பிரதிநிதிகளின் குழுவுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதன்பின் சில முக்கியத் தலைவர்கள் திருத்தந்தையை தனித்தனியே சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினர்.  கஜகஸ்தான் பாராளுமன்ற செனட் அவையின் தலைவரும், உலக பெரிய மற்றும் பூர்விக மதங்களின் பேரவைச் செயலகத்தின் செயலருமான Maulen Sagathanuly Ashimbayev,  Al-Azhar இஸ்லாமிய தலைமைக்குரு Ahmad Muhammad Almad al-Tayyeb, கஜகஸ்தான் இஸ்லாமியத் தலைவர், இஸ்ராயேலின் இரு யூதமத தலைமைக் குருக்கள், உலக லூத்தரன் கூட்டமைப்பு பிரதிகள் குழுவின் தலைவர், அமைதிக்கான மதங்கள் என்ற அமைப்பின் பொதுச்செயலர், இரஷ்ய கூட்டமைப்பின் இஸ்லாமியத்தலைவர், எருசலேம் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை, மாஸ்கோ முதுபெரும் தந்தையின் வெளியுறவுத்துறைத் தலைவர், ஐநா பொதுச்செயலரின் கலாச்சார உறவுகளுக்கான துறையின் பிரதிநிதி ஆகியோர் திருத்தந்தையை சந்தித்து உரையாடினர்.

சுதந்தர மாளிகையில் உரையாற்றி, அதன்பின் பல்வேறு மதத்தலைவர்களையும் சந்தித்து உள்ளூர் நேரம் நண்பகல் 1 மணிக்கு, நூர்-சுல்தான் திருப்பீடத்தூதரகம் நோக்கிச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். சுதந்திர மாளிகைக்கும் திருப்பீடத்தூதரகத்துக்கும் இடையேயுள்ள 4.3 கிலோமீட்டர் தூரத்தை 15 நிமிடத்தில் கடந்து, 1 மணி 15 நிமிடங்களுக்கு திருப்பீடத்தூதரகம் வந்தடைந்த திருத்தந்தை, அங்கேயே மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வும் எடுத்துக்கொண்டார். கஜகஸ்தான் நாட்டு மக்களுக்கான திருப்பலிக்கென அவர் தயாரிக்கவும் ஓரளவு நேரமும் இருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2022, 15:06