தேடுதல்

கஜகஸ்தானுக்கு புறப்பட்டார் திருத்தந்தை

2013ம் ஆண்டு மார்ச் மாதம் திருஅவையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவரை 37 திருத்தூதுப்பயணங்களை இத்தாலிக்கு வெளியே மேற்கொண்டுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

செப்டம்பர் 13 இச்செவ்வாய்க்கிழமை காலை, தான் தங்கியிருக்கும், வத்திக்கானிலுள்ள சந்தா மார்த்தா இல்லத்திலிருந்து கிளம்பி, உரோம் நகரின் Fiumicino விமான நிலையம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நேரம் 7.36 மணிக்கு அதாவது, இந்திய இலங்கை நேரம் காலை 11மணி 6 நிமிடங்களுக்கு  A 330/ITA Airways என்ற விமானத்தில் கஜகஸ்தான் தலைநகர் நோக்கித் தன் திருத்தூதுப் பயணத்தைத் துவக்கினார். விமானத்தில் ஏறத்தாழ 80 செய்தித் தொடர்பாளர்களும் உடன் பயணிக்க, இத்தாலிய மக்களுக்கு வாழ்த்தையும் செப உறுதியையும் வெளியிட்டு அரசுத்தலைவர் Sergio Mattarella அவர்களுக்குத் தந்திச்செய்தி ஒன்றையும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறத்தாழ 1 கோடியே 90 இலட்சம் மக்களைக் கொண்ட கஜகஸ்தானில் 70 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகவும், 26 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களாகவும், 3 விழுக்காட்டினர் மத நம்பிக்கையற்றவர்களாகவும் உள்ளனர். இரஷ்யா,  கனடா, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரேசில், ஆஸ்திரேலியா, இந்தியா, அர்ஜென்டினா என்ற வரிசையில் நிலப்பரப்பில் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாக இருக்கும் கஜகஸ்தான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினர் கத்தோலிக்கர். உலகப் பெரிய மற்றும் பூர்வீக மதங்களின் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பயணத்தில் கத்தோலிக்கர்களையும் அவர்களின் விசுவாசத்தில் உறுதிப்படுத்தச் செல்கிறார். புதன்கிழமை நூர்-சுல்தான் நகரின் பொருட்காட்சி மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றுவதும், வியாழன் காலை சகாய அன்னைப் பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள், ஆண் பெண் துறவறத்தார் ஆகியோரைச் சந்தித்து உரையாடுவதும் அவரின் திருப்பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

2013ம் ஆண்டு மார்ச் மாதம் திருஅவையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவரை 37 திருத்தூதுப்பயணங்களை இத்தாலிக்கு வெளியே மேற்கொண்டுள்ளார். இந்த 38வது திருத்தூதுப் பயணத்தில் செப்டம்பர் 13, செவ்வாய்க்கிழமையன்று, கஜகஸ்தான் நேரம் மாலை 5.45 மணிக்கு அந்நாட்டு தலைநகரைச் சென்றடைந்தார் திருத்தந்தை. அப்போது இந்திய இலங்கை நேரம் மாலை 5 மணி 15 நிமிடங்கள். திருத்தந்தையின் விமானம் நூர்-சூல்தான் விமானத்தளத்தை அடைந்தவுடன் விமானத்திற்குள் சென்ற அந்நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் பிரான்சிஸ் அசிசி சுள்ளிக்காட் அவர்கள், திருத்தந்தையை வரவேற்று அழைத்து வந்தார். விமானத்திலிருந்து இறங்கிய திருத்தந்தையை அரசுத்தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள், திருஅவைத்தலைவர்கள் வரவேற்றனர். ஒவ்வொருவரும் திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டபின், திருத்தந்தை அங்கிருந்து 13.6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்கு காரில் பயணமானார். AK Orda என அழைக்கப்படும் இந்த மாளிகையை திருத்தந்தை உள்ளூர் நேரம் மாலை 6.45 மணிக்கு வந்தடைந்தார். அரசுத்தலைவர் Kassym-Jomart Tokayev  அவர்களுடன் அரசுத்தலைவர் மாளிகையில் ஏறத்தாழ 45 நிமிடங்களை செலவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 500 மீட்டர் தொலைவில் உள்ள Qazaq இசை அரங்கிற்கு அரசு அதிகாரிகள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் தூதுவர்கள் அடங்கிய குழுவைச் சந்திக்கச் சென்றார். உள்ளூர் நேரம் மாலை 7.30 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம் மாலை 7 மணிக்கு அரசுத்தலைவரின் உரையோடு இச்சந்திப்புத் துவங்கியது. திருத்தந்தையை அரசுத்தலைவர் வரவேற்றுப் பேசியத்தைத் தொடர்ந்து, திருத்தந்தையும் அந்நாட்டிற்கான தன் முதல் உரையை வழங்கினார்..

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2022, 15:32