தேடுதல்

Kalksburg கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் Kalksburg கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  

Kalksburg கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் குழும உணர்வு

Kalksburg கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்திடம் திருத்தந்தை பிரான்சிஸ் – குழும வாழ்கின்ற சூழல்களில் நற்செய்திக்கு மகிழ்வோடு சான்றுபகருங்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

படைப்பின் காலம், “சூழலியல் மனமாற்றத்திற்கு” நம்மையே தயாரிப்பதற்கு வாய்ப்பாக உள்ளது, இம்மனமாற்றம், 1970ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் முன்னறிவித்த சூழலியல் பேரிடருக்குப் பதிலளிக்கும் விதமாக, திருத்தந்தை  புனித 2ம் யோவான் பவுல்  அவர்கள் ஊக்கப்படுத்தியதாகும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 02, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

செப்டம்பர் 1, இவ்வியாழனன்று தொடங்கப்பட்டுள்ள படைப்பின் காலத்தை மையப்படுத்தி, படைப்பின் காலம் (#SeasonofCreation) என்ற ஹாஷ்டாக்குடன் இவ்வெள்ளியன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சூழலியல் மனமாற்றத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். 

Kalksburg முன்னாள் மாணவர்கள்

மேலும், செப்டம்பர் 02, இவ்வெள்ளியன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், வியன்னா நகரிலுள்ள Kalksburg கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்தின் 68 பேரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்லூரியில் படிக்கும் காலத்தில் அனுபவித்த குழும உணர்வை, மீண்டும் மீண்டும் சந்திக்கும்போதெல்லாம் தொடர்ந்து அனுபவிக்கின்றீர்கள் என்று அவர்களிடம் கூறினார்.

உலகளாவியத் திருஅவையில் ஒன்றிப்பை ஊக்குவிக்கும் திருத்தந்தையர் வாழ்கின்ற உரோம் நகருக்கு மேற்கொண்டுள்ள இத்திருப்பயணம், திருஅவையோடு இருக்கின்ற பிணைப்பைப் புதுப்பிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பாக உள்ளது என்று, அக்கழகத்தினரிடம் திருத்தந்தை தெரிவித்தார்.

வாழ்கின்ற சூழல்களில் நற்செய்திக்கு மகிழ்வோடு சான்றுபகருமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, Kalksburg கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்திற்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தனது ஆசிரை அளிப்பதாகவும் தெரிவித்தார்.  

Kalksburg கல்லூரி

18ம் நூற்றாண்டில் வியன்னாவில் கட்டப்பட்ட Mon Pérou மாளிகை, இளவரசி கரோலின் அவர்களின் தங்குமிடமாக இருந்து பின்னர் அவ்விடத்தில் Kalksburg கல்லூரி தொடங்கப்பட்டது. அமல மரி கல்லூரி எனவும் அழைக்கப்படுகின்ற, இக்கல்லூரி அமைந்துள்ள இடத்தை பேரரசர் Franz Joseph அவர்களின் நிதி உதவியோடு, 1856ஆம் ஆண்டில் இயேசு சபையினர் வாங்கினர். இயேசு சபையினரால் நிறுவப்பட்ட Kalksburg கல்வி நிறுவனம், ஆஸ்ட்ரியாவில் பல ஆண்டுகளாக முக்கிய கல்வி நிறுவனமாக விளங்கியது. தற்போது அது அரசின் கலை நிறுவனமாக உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2022, 15:56