தேடுதல்

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற நிகழ்வு “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற நிகழ்வு  

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” நிகழ்வில் ஆசிய இளையோர்

நியாயமான மற்றும், நிலையான ஒரு வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய செயல்பாடுகளை ஊக்குவிக்க எனது பங்குத்தளத்தில் ஒரு குழுவை உருவாக்கியிருக்கிறேன் – இலங்கையின் பொருளாதார ஆசிரியர் பேட்ரிக்

மேரி தெரேசா: வத்திக்கான்

இலங்கையின் பொருளாதாரம், இக்காலத்திற்கு மட்டுமன்றி, வருங்காலத்தை உருவாக்கும் முறையிலும் அமைக்கப்படவேண்டும் என்று, அசிசியில் “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கையில் நிதி சார்ந்த கல்வியை கற்பிக்கும் இளம் ஆசிரியர் சோகன் பேட்ரிக் அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 22, இவ்வியாழன் முதல், 24, இச்சனிக்கிழமை வரை இத்தாலியின் அசிசியில் நடைபெற்ற “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற நிகழ்வில், இளம் பொருளாதார வல்லுனர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் என, 100க்கும் மேற்பட்ட  நாடுகளிலிருந்து ஏறத்தாழ ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து வத்திக்கான் செய்திகளிடம் மகிழ்வுடன் பேசிய பேட்ரிக் அவர்கள், ஒழுங்குமுறையற்ற வளர்ச்சித்திட்ட நடவடிக்கையால், மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் இலங்கைக்கு பிரான்செஸ்கோவின் பொருளாதாரம் என்ற நிகழ்வு, எவ்வாறு உதவும் என்பது குறித்து விளக்கியுள்ளார்.

நியாயமான, நீடித்த, மற்றும், நிலையான ஒரு வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு தெளிவான செயல்பாடுகளை ஊக்குவிக்க, தனது பங்குத்தளத்தில் ஒரு குழுவை உருவாக்கியிருப்பதாகவும் பேட்ரிக் அவர்கள் கூறியுள்ளார்.

பெரும்பாலான நவீனப் பொருளாதாரங்கள், ஏதாவது ஒன்றை உற்பத்தி செய்வது மற்றும், செல்வத்தை அதிகரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன, அதற்கு மாறாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பிற்கிணங்கி அசிசி வந்துள்ள இளையோர் பொருளாதாரத்தின் ஒரு புதிய வடிவம் பற்றி உரையாடி வருகின்றனர், தங்கள் இடங்களுக்குச் சென்றபின்னர், இதனைச் செயல்படுத்துவார்கள் என திருத்தந்தையும் நம்புகிறார் என பேட்ரிக் அவர்கள் கூறியுள்ளார்.

பிலிப்பீன்சின் Jena Espelita

மேலும், பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து இந்நிகழ்வில் கலந்துகொண்ட Jena Espelita அவர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் நன்கு பயன்படுத்தப்பட்டால், இது ஏழைகளின் முன்னேற்றத்திற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் முதல் நாளிலேயே இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோரைச் சந்தித்ததும், வயதுவந்தோர், இளையோர் குறித்து திறந்தமனம் கொண்டிருப்பதும் மகிழ்வைத் தந்தன என Jena Espelita அவர்கள் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் இளம் பொருளாதார மற்றும், தொழில்முனைவோருக்கு விடுத்த அழைப்பை ஏற்று, இலங்கையிலிருந்து அசிசிக்கு வந்து அந்நிகழ்வில் கலந்துகொண்ட பேட்ரிக் அவர்கள், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளவர். பிலிப்பீன்சின் Baguio நகரைச் சேர்ந்த Jena Espelita அவர்களும், பொருளாதாரம் மற்றும், மேலாண்மையியலில் பட்டம் பெற்றிருப்பவர் (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2022, 15:01