பொருளாதார வெற்றி, மற்றும் தனித்திறன் கடவுளின் பரிசு- திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
பொருளாதார வெற்றியும் அதை அடைவதற்காகப் பெற்ற தனித்திறன்களும் கடவுளிடமிருந்து நாம் பெற்ற பரிசு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும், புதிய வேலை வாய்ப்புக்கள் வழியாக இளையோர்க்கு வாய்ப்பளித்து இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் UNIAPAC உலக மாநாட்டு உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் .
அக்டோபர் 20 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 22 ஆம் தேதி சனிக்கிழமை வரை உரோம் நகரில் நடைபேறும் UNIAPAC என்னும் ஐக்கிய நாடுகளின் கிறிஸ்தவ பொருளாதர நிர்வாகிகளுக்கான 27 வது உலக மாநாட்டில் பங்கேற்கும் உறுப்பினர்களை வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
இறைவனிடமிருந்து நாம் பெற்ற அனைத்தும் நம்மை வளப்படுத்த அல்ல மாறாக, உடன் பிறந்த உறவை, சமூக ஒற்றுமையை அனைவரிடத்திலும் வளர்க்க பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், அனைவரையும் உள்ளடக்கிய, மனிதாபிமானமுள்ள, சுற்றுச்சூழலுக்கு நன்மை தரக்கூடிய, உயிருள்ள மாற்றுப் பொருளாதாரத்தை உலகம் எதிர்பார்க்கின்றது எனவும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
வறுமை ஒழிப்பு, மற்றவர்களின் வளர்ச்சி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு புதிய படைப்பாற்றல் மிக்க வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்டவர்கள், விளிம்புநிலை மனிதர்கள் என யாரையும் பின் தள்ளாமல் அனைவரின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் பொதுநன்மைக்கான புதிய பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.
மனித மாண்பின் வாயிலாக இருக்கும் வேலை வாய்ப்பு, கடவுள் தன் உருவில் விரும்பிப் படைத்த படைப்பான தொழிலாளர்களுக்கும் முறையாக கொடுக்கப்பட வேண்டும் எனவும், தினக்கூலி, புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், மற்றும் முறைசாரா அமைப்புகளில் கீழ்நிலையில் பணியாற்றுபவர்கள் என அனைவரின் வேலை தரம் உயர்த்தப்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
பொருளாதர வகைகள்
அமைதிப் பொருளாதாரம், உருவாக்கும் பொருளாதாரம், எல்லாருக்குமான பொருளாதாரம், அனைவரின் பாதுகாப்பு மற்றும் மரியாதை தரும் பொருளாதாரம், தொழிலாளர்களை நண்பர்களாகப் பார்க்கும் பொருளாதாரம் உருவாக்கப்பட அனைவரும் இணைந்து உழைக்கக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இளையோர் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர் எனவும் அவர்களிடம்தான் புதிய சிந்தனை படைப்பாற்றல் நிறைந்து இருக்கின்றது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, தொழில் முனைவோர் மற்றும் பொருளாதார தலைவர்கள் இளையோரை ஒதுக்காமல் அவர்களுடன் உடன்நடந்து, அவர்களுக்குக் கற்பிக்கவும் அவர்களிடமிருந்து கற்கவும் அழைக்கப்படுகின்றீர்கள் எனவும் எடுத்துரைத்தார். .
ஒவ்வொருவரும் அவரவர் திறனுக்கு ஏற்ப, தனது சொந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஒட்டுமொத்த மனிதக் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கின்றக் கடமையும் உண்டு எனவும், ஒற்றுமை மற்றும் நீதிக்கான இக்கடமை, மனிதகுலம் அனைத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்