ஸ்டெல்லா மாரிஸ் திருத்தூதுப் பணியாளர்களுக்கு வாழ்த்து.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
கப்பலில் பணியாற்றுவோர், மற்றும், கடல்தொழிலாளர்களின் நலனுக்காகப் பணியாற்றிவரும், Stella Maris அதாவது கடலின் விண்மீன் என்ற திருத்தூது அமைப்பினர் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் அக்டோபர் 02, இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள 25வது உலக கடலின் திருத்தூது மாநாட்டிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கடல்தொழிலாளர்களைப் பாதிக்கின்ற விவகாரங்களை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கு, இந்த அமைப்பினர் ஒருபோதும் தயக்கம் காட்டுவதில்லை என்று அச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, அத்தொழிலாளர் சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 5, வருகிற புதன் வரை நடைபெறும் இவ்வுலக மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில், கோவிட் 19 பெருந்தொற்று பரவலால் சிறப்பிக்கப்படாமல் இருந்த, அந்த அமைப்பின் நூறாம் ஆண்டு நிறைவு, மற்றும், இந்த அமைப்பிற்குரிய விதிமுறைகளை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 'Stella Maris' என்ற தலைப்பில் வெளியிட்ட Motu Proprio அறிக்கையின் 25ம் ஆண்டு நிறைவு ஆகிய இரண்டும் தற்போது சிறப்பிக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மகிழ்வான தருணத்தில், Stella Maris அமைப்போடு தொடர்புடைய அனைவரோடும் நானும் இணைகின்றேன் என்றும், கடல் தொழிலாளர்களுக்காக உழைத்த ஆன்மிக அருள்பணியாளர்கள், தன்னார்வலர்கள் என எல்லாருக்காகவும் கடவுளுக்கு நன்றி தெரிவிப்போம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
நல்ல கனிகளை வளமையாக அறுவடை செய்யட்டும் என்று, 1922ஆம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், இந்த அமைப்பிற்குத் தன் நல்வாழ்த்தைத் தெரிவித்ததையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்போது இந்த அமைப்பில் இத்தகைய கனிகள் அபரிவிதாமக இருப்பதற்கு நாமும் கடவுளுக்கு நன்றிசொல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
தாழ்மையான தொடக்கத்திலிருந்து வளர்ச்சி
Stella Maris அமைப்பு, சிறிய மற்றும், தாழ்மையான தொடக்கத்திலிருந்து, பல்வேறு நாட்டினர் மற்றும், மதத்தினரைக்கொண்டு பெரியதொரு அமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது என்று பாராட்டிய திருத்தந்தை, இந்த அமைப்பினர் தனியாக இல்லை, மற்றும் அவர்கள் மறக்கப்படவில்லை என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.
வாழ்வு, வர்த்தகம் மற்றும், சுற்றுலாவுக்கு, தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, உலகின் ஏறத்தாழ 90 விழுக்காடு பொருள்கள் கப்பல்கள் வழியாக கொண்டுசெல்லப்படுகின்றன, இது 15 இலட்சம் பேர் தினமும் பணியாற்றுவதால் நடைபெறுகின்றது என்றும், இவர்களில் பலர் தங்களின் குடும்பங்களிலிருந்து மாதக்கணக்காய் பிரிந்து வாழ்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்