தேடுதல்

அருள்பணியாளர்கள் மற்றும், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள் சந்திப்பு அருள்பணியாளர்கள் மற்றும், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள் சந்திப்பு  

அருள்பணியாளர்கள் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்

அருள்பணியாளர் ஒருவர் படிப்பிலோ அல்லது, தலைமையகப் பணியிலோ ஈடுபட்டிருந்தாலும், அவற்றில் சிறந்து விளங்கினாலும், அவர் இறைமக்களோடு தொடர்பில் இருப்பது முக்கியம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள்பணியாளர்களின் வாழ்வுமுறை, மக்களுக்கு நெருக்கமாக இருந்து பரிவன்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மாநகரில் படிக்கின்ற அருள்பணியாளர்கள் மற்றும், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்களிடம் கூறியுள்ளார்.

அக்டோபர் 24, இத்திங்களன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், அருள்பணியாளர்கள் மற்றும், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்களோடு நீண்டநேரம் கலந்துரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நல்ல அருள்பணியாளரின் பண்புகள், ஆன்மிக வழிகாட்டல், உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு தலைப்புக்களில், அவர்கள் தன்னிடம் கேட்ட பத்து கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார்.

நல்ல அருள்பணியாளரின் குணநலன்

பரிவன்பின் வெளிப்படையான அடையாளம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, உடனிருப்பு மற்றும், கனிவன்பை வெளிப்படுத்தும் அடையாள மொழிகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், மறையுரைகளை ஆற்றும்போதும், இந்த அடையாள மொழிகள் முழுமையாக இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.   

அறிவின் மொழி, இதயத்தின் மொழி, கரங்களின் மொழி ஆகிய மூன்றும், ஒரு மனிதரின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றன எனவும், இம்மூன்று மொழிகளிலும் வெளிப்படுவதைக் கற்றுக்கொள்ளவும், அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறை மக்களோடு தொடர்பில் இருக்க..

அருள்பணித்துவ திருப்பணிக்குத் தகுதியானதாகிய, "ஆடுகளின் வாசனையை இழக்காமல்" அருள்பணித்துவ வாழ்வை வாழும் முறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, அருள்பணியாளர் ஒருவர் படிப்பிலோ அல்லது, தலைமையகப் பணியிலோ ஈடுபட்டிருந்தாலும், வேறு எந்தவிதமான பணியிலே சிறந்து விளங்கினாலும், கடவுளின் மக்களோடு தொடர்பில் இருப்பது முக்கியம், ஏனென்றால், ஆடுகளாகிய இறைமக்களின் திருப்பொழிவு அங்கே இருக்கின்றது என்று விளக்கினார்.

ஆடுகளின் வாசனையை இழப்பது என்பது, இறைமக்களாகிய ஆடுகளிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்வதாகும் எனவும், அருள்பணியாளர்கள், இறைமக்களோடு நெருக்கமாக இல்லையெனில், அவர்கள், நல்ல அருள்பணியாளராக இருக்க இயலாது எனவும் தெளிவுபடுத்திய திருத்தந்தை, இறைவேண்டல் வழியாக கடவுளோடும், ஆயரோடும், மற்ற அருள்பணியாளர்களோடும், இறைமக்களோடும் நெருக்கமாக இருக்குமாறு வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அருள்பணியாளர்கள் மற்றும், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள்
அருள்பணியாளர்கள் மற்றும், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள்

அருள்பணித்துவம் வர்த்தகப்பொருள் அல்ல

அருள்பணித்துவத்தை, மணிநேரம் குறித்து ஓர் அலுவலக வேலையாக நோக்குவது குறித்து எச்சரிக்கை விடுத்த திருத்தந்தை, அருள்பணித்துவம், கடவுளுக்கு ஆற்றும் புனிதப் பணியாகும் என்றும், திருநற்கருணை கொண்டாட்டம், இதன் உச்சகட்டம் எனவும், இது, குழுமத்திற்குப் பணியாற்றுவதாகும் எனவும் எடுத்துரைத்தார்.

அருள்பணித்துவ வாழ்வில் பதவி உயர்வை விரும்புகிறவர்கள், இறுதியில் பணிபுரிபவராய் இருக்கமாட்டார், மற்றவருக்கு எதுவும் செய்யாமல், தனது சொந்த நலனையே நாடுவார், இறுதியில், அவ்வாழ்வுக்குத் துரோகம் செய்பவராக இருப்பார், எனவே, அத்தகைய சிந்தனையில் இருப்போர் அதனைக் கைவிடவேண்டும் என்றும்   திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஆன்மிக வழிகாட்டல்

ஆன்மிக வழிகாட்டலின் முக்கியத்துவம் குறித்தும் இந்நீண்ட நேர உரையாடலில் விளக்கிய திருத்தந்தை, ஒருவரின் ஆன்மிகப் பயணத்தில் உடன்பயணித்தல், கட்டாயமானது அல்ல, ஆனால், ஒப்புரவு அருளடையாளத்தைக் கேட்பவரைவிட, இதில் ஒருவரின் நம்பிக்கையைப் பெறுவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குவார், ஆனால் ஆன்மிக வழிகாட்டுனரிடம் செல்லும்போது அவரிடம், ஒருவர் தன் ஆன்மீக உணர்ச்சிகள், மகிழ்வு, கோபம் போன்ற இதயத்திற்குள் நடப்பவற்றை கூறுவார் என்று திருத்தந்தை விளக்கினார்.

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடையாது

அறிவியலுக்கும், நம்பிக்கைக்கும் இடையே உரையாடல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கமுடியாது எனவும், வல்லுநர்களின் கேள்விகள், மக்கள்  மற்றும், பல்கலைக்கழக மாணவர்களின் ஏக்கங்களுக்குத் திறந்த மனதாய் இருந்து அவற்றை மனத்தாழ்மையோடு உற்றுக்கேட்கவேண்டும் என அருள்பணியாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

பல்வேறு சூழல்களில் சமத்துவநிலையை காப்பது குறித்தும், கடவுளால் ஆட்கொள்ளப்படும் உயிர்த்துடிப்புள்ள சமத்துவநிலையைக் காத்துக்கொள்வது குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, இணையதளத்தின் ஆபத்துக்கள் குறித்தும் எச்சரிக்கைவிடுத்தார்.

இணையதளத்தின் ஆபத்து

அருள்பணியாளர்கள் மற்றும், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள் சந்திப்பு
அருள்பணியாளர்கள் மற்றும், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள் சந்திப்பு

தொழில்நுட்பம் மற்றும், நவீன டிஜிட்டல் கருவிகளோடு தனக்குள்ள உறவு குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, அர்ஜென்டீனாவில் தான் ஆயராகத் திருப்பொழிவுசெய்யப்பட்டபோது தனக்கு ஒருவர் கைபேசி ஒன்றை பரிசாகக் கொடுத்தார், அதை தனது சகோதரிக்கு மட்டும் ஒரே ஒரு தடவை பேசியதற்குப் பயன்படுத்தியபின்னர், அதை உடனடியாகத் திருப்பிக் கொடுத்துவிட்டேன் எனவும் பகிர்ந்துகொண்டுள்ளார்.  

நவீன தொழில்நுட்பம் எனது உலகம் அல்ல, ஆனால் நீங்கள் அதை, மிகுந்த எச்சரிக்கையோடு பயன்படுத்தவேண்டும் என்றும், டிஜிட்டல் உலகில் வெளியாகும் பாலியலைத் தூண்டுகின்ற பதிவுகள் குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்றும், இது ஆன்மாவைப் பலவீனப்படுத்தும், சாத்தான் நுழைவான், மற்றும், அருள்பணித்துவ இதயத்தைப் பலவீனப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

போரினால் திருஅவை

உக்ரைன் போர் குறித்த அந்நாட்டு இளம் அருள்பணியாளரின் கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, திருஅவை, ஓர் அன்னையைப் போல போர்களினால் துயருறுகிறது, ஏனெனில் போர், அதன் பிள்ளைகளை அழிக்கின்றது என்று கவலையோடு கூறியதோடு, அதற்காக திருஅவை கண்ணீர் சிந்துகின்றது, செபிக்கின்றது, மற்றும், பாதிக்கப்பட்டோருக்கு நெருக்கமாக இருந்து உதவுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் இதயத்தின் காயங்களை நீங்கள் பார்க்க முடியாது, எனவே விரைவில் அமைதி நிலவச் செபிப்போம், இதற்கு ஆண்டவர் மனங்களை மாற்றுவாராக என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் மற்றும், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்களிடம் கூறியுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2022, 14:36