தேடுதல்

திருத்தந்தையின் முவேளை செபவுரை 091022 திருத்தந்தையின் முவேளை செபவுரை 091022 

அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் நிறுத்தப்பட திருத்தந்தை செபம்

போர்களும், பெருமளவான பதட்டநிலைகளும் இருந்த அக்காலக்கட்டத்திலும்கூட அமைதிக்கான பாதை தேர்ந்துகொள்ளப்பட்டது – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

அக்டோபர் 09, இஞ்ஞாயிறன்று வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் அருளாளர்கள் ஜொவான்னி பத்திஸ்தா ஸ்கலாபிரினி, ஆர்த்தேமிதே சாத்தி ஆகிய இருவரையும் புனிதர்களாக அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பலியின் இறுதியில் மூவேளை செபத்தைச் செபிப்பதற்கு முன்னர், இக்காலக்கட்டத்தில் உலகை அச்சுறுத்தும் அணு ஆயுதப் போரின் ஆபத்து குறித்து நாம் மறக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

வரலாற்றிலிருந்து நாம் ஏன் பாடம் கற்றுக்கொள்ளக்கூடாது? என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, போர்களும், பெருமளவான பதட்டநிலைகளும் இருந்த அக்காலக்கட்டத்திலும்கூட அமைதிக்கான பாதை தேர்ந்துகொள்ளப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்துக்காக செபம்

அறுபது ஆண்டுகளுக்குமுன்னர் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கப்பட்டதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, மூன்று நாள்களுக்குமுன் தாய்லாந்தில் இடம்பெற்ற அறிவற்றதனமான வன்முறைச் செயல் குறித்தும் குறிப்பிட்டார்.

தாய்லாந்தின் வடகிழக்கிலுள்ள Uthai Sawan சிறார் பராமரிப்பு மையத்தில், ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தியோடு நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர், இவர்களில் அதிகமானோர் சிறார்.

இவ்வன்முறை குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாகத் தெரிவித்த திருத்தந்தை, இதில் இறந்தவர்கள், குறிப்பாக சிறார் மற்றும், அவர்களின் குடும்பங்களை இறைத்தந்தையிடம் அர்ப்பணிக்கின்றேன் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2022, 13:15