தேடுதல்

நைஜீரியாவில் பெருவெள்ளம் நைஜீரியாவில் பெருவெள்ளம்  

நைஜீரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக திருத்தந்தை செபம்

நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், ஏறத்தாழ 13 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர், மற்றும், இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான்

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உலகளாவிய சமுதாயத்தின் ஆதரவு கிடைக்கவேண்டும் என்று, அக்டோபர் 19, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் இடம்பெற்ற புதன் பொது மறைக்கல்வியுரையில் ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளை வாழ்த்தியபோது, நைஜீரியாவில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் செபித்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களுக்கு உலகளாவிய உதவிகள் கிடைக்கவேண்டும் என்றும் விண்ணப்பித்தார்.

இந்நாள்களில் அந்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பல உயிரிழப்புகளும், பெருமளவில் சேதங்களும் ஏற்பட்டுள்ளன என்றும், இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்கள், மற்றும், பாதிக்கப்பட்டுள்ள எல்லாருக்காகவும் செபிப்போம். என்றும் திருத்தந்தை கூறினார்.

கடுந்துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நம் சகோதரர், சகோதரிகள் நமது ஒருமைப்பாட்டுணர்வையும், உலகளாவிய சமுதாயத்தின் ஆதரவையும் அனுபவிப்பார்களாக என்றும் உரைத்த திருத்தந்தை, அம்மக்களுக்காக அனைவரும் செபிப்போம் என்று கேட்டுக்கொண்டார்.

நைஜீரியாவின் 36 மாநிலங்களில் 33ல் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், ஏறத்தாழ 13 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர், மற்றும், இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் அதிக அளவில் அந்நாட்டில் பெய்துவரும் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம், வருகிற நவம்பர் வரை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2022, 10:56