திருத்தந்தை: மறைப்பணியாளர்களுக்காக இறைவேண்டல் செய்வோம்
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள மறைப்பணியாளர்களுக்காக இறைவேண்டல் செய்வோம் என, அக்டோபர் மறைப்பணி மாதம் என்ற ஹாஷ்டாக்குடன் அக்டோபர் 20, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மறைப்பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இம்மாதத்தில், மறைப்பணியை மையப்படுத்தி திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நற்செய்திக்குப் பணியாற்றுவதில், தங்களின் சொந்த வாழ்வோடு அன்பின் கதையை எழுதுகின்ற மறைப்பணியாளர்களுக்காகச் செபிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.
உலக மறைப்பரப்பு ஞாயிறு உலகளாவியத் திருஅவைக்கு
அக்டோபர் 23, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 96வது உலக மறைபரப்பு ஞாயிறன்று வழங்கப்படும் நிதியுதவி, உலக அளவில் தேவையில் இருப்போர், வலுவற்றவர்கள், சித்ரவதைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொள்வோர் போன்றோருக்கு உதவுவதற்கு வெளிப்படையாக ஆற்றும் பணியாக உள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருப்பீடத் தூதர் பேராயர் Christophe Pierre அவர்கள் கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் உலக மறைபரப்பு ஞாயிறன்று வழங்கப்படும் நிதியுதவி, மறைப்பணித்தளங்களிலுள்ள மறைமாவட்டங்கள், பள்ளிகள், கருணை இல்லங்கள், வயதுமுதிர்ந்தோர், மற்றும், நோயாளிகள் பராமரிப்பு மையங்களுக்கும், சிற்றாலயங்கள் மற்றும் ஆலயங்கள் கட்டுவதற்கும், பழுதுபார்ப்பதற்கும், துறவற மற்றும், குருத்துவக் கல்லூரிகளின் பயிற்சிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கின்றது என்று பேராயர் Pierre அவர்கள் கூறியுள்ளார்.
"நீங்களே என் சாட்சிகள்" (தி.ப. 1:8) என்ற தலைப்பில் இவ்வுலக மறைபரப்பு ஞாயிறுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி குறித்தும் குறிப்பிட்டுள்ள பேராயர் Pierre அவர்கள், ஒவ்வொரு கிறிஸ்தவரும் மறைப்பணியாளராக இருக்கவேண்டும் மற்றும், கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாய் விளங்கவேண்டும் என அழைப்புப் பெறுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருஅவை, தன்னிலே மறைப்பணி இயல்பைக் கொண்டது, இப்பணியில் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்கவேண்டும் என்று, திருமுழுக்கு அருளடையாளத்தால் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்ற திருத்தந்தையின் கூற்றையும் பேராயர் நினைவுகூர்ந்துள்ளார்.
உலக மறைபரப்பு ஞாயிறு
திருத்தந்தையின் ஆன்மிக மற்றும், நிதிசார்ந்த ஆதரவுக்காக, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையில் ஒவ்வோர் ஆண்டும், உலக மறைபரப்பு ஞாயிறன்று வழங்கப்படும் நிதியுதவி, மறைப்பணித்தளங்களின் வளர்ச்சி மற்றும், வெளி நாடுகளில் மறைப்பணியாற்றுவோருக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிதியுதவியைக் கொண்டு, ஆசியா, ஆப்ரிக்கா, பசிபிக் தீவுகள், இலத்தீன் அமெரிக்கா மற்றும், ஐரோப்பாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் ஆலயங்கள் கட்டுவதற்குத் திருஅவை உதவி வருகிறது.
உலக மறைபரப்பு ஞாயிறு, 1926ஆம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது. அஞ்ஞாயிறன்று நிதி திரட்டும் வழக்கம் அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து உலக அளவில் தொடங்கப்பட்டது. தற்போது, திருஅவை, 1,100க்கும் மேற்பட்ட மறைமாவட்டங்களுக்கு உதவி வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்