தேடுதல்

செயோலில் Halloween விபத்து செயோலில் Halloween விபத்து  

செயோலில் Halloween நிகழ்வில் இறந்தவர்களுக்காக திருத்தந்தை செபம்

Halloween திருவிழாவில் இடம்பெற்றுள்ள துயர நிகழ்வுக்கான காரணம் குறித்து விரிவான புலன்விசாரணை இடம்பெறவேண்டும் - தென் கொரிய கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்தல்

மேரி தெரேசா: வத்திக்கான்

தென் கொரியத் தலைநகர் செயோலில், அக்டோபர் 29, இச்சனிக்கிழமை இரவில் நடைபெற்ற Halloween நிகழ்வில் திடீரென்று ஏற்பட்ட கூட்டநெருசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தோருக்காகச் செபிப்போம் என்று இஞ்ஞாயிறன்று அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 30, இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர் செயோல் நகரில் இடம்பெற்ற இத்துயர நிகழ்வு குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளையோர் என்றும், இறந்த எல்லாருக்காகவும் உயிர்த்த கிறிஸ்துவிடம் செபிப்போம் என்றும் கூறினார்.

மேலும், தென் கொரிய கத்தோலிக்க ஆயர்களும், இத்துயர நிகழ்வுக்கான காரணம் குறித்து விரிவான புலன்விசாரணை இடம்பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

தென் கொரியாவில் ஹாலோவீன் விபத்து
தென் கொரியாவில் ஹாலோவீன் விபத்து

செயோலின் Itaewon பகுதியில் இச்சனிக்கிழமை இரவில் நடைபெற்ற Halloween திருவிழா நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது, மற்றும், இதில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

Itaewon பகுதியில் குறுகலான தெருவில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் நுழைந்ததால்  இவ்விபத்து நேரிட்டது எனவும் சொல்லப்படுகிறது.

இக்கடுந்துயர் நிகழ்வு நடந்திருக்கவே கூடாது என்று  கவலையோடு கூறியுள்ள தென் கொரிய அரசுத்தலைவர் Yoon Suk Yeol அவர்கள், நாடு முழுவதும் ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2022, 12:40