பஹ்ரைனின் Riffaவிலுள்ள தேசிய அரங்கத்தில் திருப்பலி
மேரி தெரேசா: வத்திக்கான்
எப்பொழுதும் அன்புகூருங்கள், எல்லாரையும் அன்புகூருங்கள். வன்முறைச் சக்திகளின் கை ஓங்கியிருக்கும் இக்காலக்கட்டத்தில், பகைவரை அன்புகூர்தல் ஒரு சவாலே. அதிகாரத்தை ஒருவர் எவ்வளவுக்கு அதிகமாகத் தேடுகிறாரோ அவ்வளவுக்கு அதிகமாக அமைதி அச்சுறுத்தப்படுகிறது. இவ்வாறு இன்றைய உலகு ஆழமாகச் சிந்திக்கவேண்டிய வாழ்வியல் கூறுகளோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 05, இச்சனிக்கிழமையன்று, பஹ்ரைன் நாட்டில் தனது மூன்றாவது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளார். இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7.40 மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம் காலை 10.10 மணிக்கு, பஹ்ரைனின் திருத்தூது நிர்வாகத் தலைமையகத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அந்நாட்டின் தேசிய அரங்கத்திற்குக் காரில் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பஹ்ரைனின் Riffaவிலுள்ள தேசிய அரங்கம்
பஹ்ரைனின் Riffa நகரிலுள்ள தேசிய அரங்கம், பொதுவாக கால்பந்து விளையாட்டுக்கெனப் பயன்படுத்தப்படுகிறது. 24 ஆயிரம் பேர் அமரக்கூடிய இவ்வரங்கம் 1982ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பின்னர், 21வது அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டிக்காக, 2012ஆம் ஆண்டு டிசம்பரில் புதுப்பிக்கப்பட்டது. இந்த அரங்கம் அமைந்துள்ள Riffa நகர், பரப்பளவில் பஹ்ரைன் முடியாட்சி நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும், வேகமாக வளர்ந்துவரும் நகரமுமாகும். இது கிழக்கு Riffa, மேற்கு Riffa, வடக்கு Riffa என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு Riffaவில் அரசர், பிரதமர், தொழில்முனைவோர் போன்றோரின் குடும்பத்தினர் பொதுவாக வாழ்கின்றனர். தற்போது மேற்கு Riffaவில், பஹ்ரைன் அரசர் Hamad bin Isa Al Khalifa அவர்களும், பிரதமர் Salman bin Hamad Al Khalifa அவர்களும் வாழ்ந்து வருகின்றனர். மேற்கு Riffaவின் மத்தியில் புகழ்பெற்ற கடிகாரக் கோபுரமும் உள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 39 வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் மூன்றாவது நாளான. நவம்பர் 5, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு, பஹ்ரைன் தேசிய அரங்கில் திருப்பலியைத் தொடங்கினார். வட அரேபியாவின் திருத்தூது நிர்வாகத்தைச் சேர்ந்த பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்தும், ஏனைய வளைகுடாப் பகுதி, மற்றும், பிற பகுதிகளிலிருந்தும் ஏறத்தாழ முப்பதாயிரம் பேர் இத்திருப்பலியில் பங்குகொள்ள வந்திருந்தனர். ஆங்கில மொழியில் நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில், அவர் வலிமை மிகுந்தவராய், இருப்பார், மற்றும், அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கு முடிவு இராது என, ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்த பகுதி, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து (எச.9,1-6) முதல் வாசகமாக அரபுமொழியில் வாசிக்கப்பட்டது. பழிவாங்குதல் மற்றும், பகைவரிடம் அன்பாயிருத்தல் என்ற மத்தேயு (5,38-48) நற்செய்திப் பகுதி, நற்செய்தி வாசகமாக ஆங்கில மொழியில் வாசிக்கப்பட்டது. இத்திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பானியத்தில் ஆற்றிய மறையுரையாற்றினார். கிறிஸ்துவின் மிகப்பெரும் வல்லமை, வன்முறையின் சக்தியிலிருந்து வருவதல்ல, மாறாக, அன்பிலிருந்து பிறக்கின்றது என, எப்பொழுதும் அன்புகூர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி திருத்தந்தை ஆற்றிய மறையுரைக்குப்பின்னர், தமிழ், மலயாளம், கொன்கனி, தகாலோ, ஆங்கிலம், சுவாகிலி ஆகிய மொழிகளில் நம்பிக்கையாளர் மன்றாட்டு இடம்பெற்றது. இத்திருப்பலியின் இறுதியில் வட அரேபியாவின் திருத்தூது தலைமை நிர்வாகி ஆயர் பவுல் ஹின்டர் அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார்.
ஆயர் ஹின்டர் அவர்களின் நன்றியுரை
திருத்தந்தையே, இத்திருப்பலியில் நேரிடையாகவும், தொலைக்காட்சி வழியாகவும் பங்குபெற்றோர் அனைவர் சார்பாக, தாங்கள் பஹ்ரைனில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கிறேன். இச்சிறிய நாட்டில், சிறிய திருஅவை, அதேநேரம் உயிர்த்துடிப்புள்ள திருஅவை மீது தாங்கள் வைத்திருக்கும் மேய்ப்புப்பணி அக்கறையையே இத்திருத்தூதுப் பயணம் வெளிப்படுத்துகிறது. தங்களின் பாதுகாவலரான அசிசி நகர் புனித பிரான்சிஸ் போன்று, முஸ்லிம் உலகோடு உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்பவும், கலாச்சாரம், மதம் என்ற வேறுபாடில்லாமல் நன்மனம்கொண்ட அனைவரோடும் உடன்பிறந்த உணர்வை வெளிப்படுத்தவும் தாங்கள் அஞ்சவில்லை. மத்தியக் கிழக்குப் பகுதியிலுள்ள கிறிஸ்தவர்களாகிய நாங்கள், பழங்கால கிழக்கு மரபுகளைக் கொண்டிருப்போராகவும், உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களாகவும் இருக்கின்றோம். முஸ்லிம்கள் மத்தியில் ஆன்மிக முறையில் நல்லிணக்கத்தோடு வாழவேண்டுமென்ற தங்களின் அழைப்பைச் செயல்படுத்த முனைகின்றோம். திருத்தந்தையே, தங்கள் மீது எங்களுக்குள்ள அன்பு, மற்றும், தங்களுக்காக நாங்கள் இறைவேண்டல் செய்வதை மீண்டும் உறுதி கூறுகிறோம். தங்களின் ஆசிரை வேண்டுகிறோம். இவ்வேளையில், இத்திருப்பலி பொதுவான இடத்தில் நடைபெறுவதை இயலக்கூடியதாக ஆக்கிய பஹ்ரைன் அரசர் Sheikh Hamad bin Isa bin Salman Al Khalifa அவர்களுக்கும், அரச குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு ஆயர் பவுல் ஹின்டர் அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி கூறியபின்னர், திருத்தந்தையும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அந்நாட்டு மக்களுக்கு அளித்தார். பஹ்ரைன் தேசிய அரங்கத்தில் இத்திருப்பலியை நிறைவேற்றியபின்னர், திருத்தூது நிர்வாகத் தலைமையகம் சென்று மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வும் எடுத்துக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்