இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் ஆயர் பவுல் ஹின்டர் வரவேற்புரை
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தையே, பஹ்ரைன் அமீரகத்தின் தலைவரான Sheikh Hamad bin Isa bin Salman Al Khalifa அவர்கள், தனது நாட்டிற்கு கத்தோலிக்க சமுதாயத்தை வரவேற்று, அரேபிய வளைகுடாக் கடற்கரையில் முதல் கத்தோலிக்க ஆலயம் கட்டுவதற்கு தானமாக வழங்கிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மனாமாவின் திருஇருதய ஆலயத்திற்கு தங்களை வரவேற்கிறேன். பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா ஆகிய வட அரேபிய நாடுகள் தவிர, அரேபியத் தீபகற்பத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் வந்துள்ள “புலம்பெயர்ந்தோர் திருஅவை”யின் பிரதிநிதிகளை இப்போது தாங்கள் சந்திக்கின்றீர்கள், இத்திருஅவை பல்வேறு கலாச்சார மற்றும், இனங்களைப் பிரதிபலிக்கின்றது. இத்திருஅவையிலுள்ள பலர், தங்களின் அன்றாட வாழ்வில் போராட்டங்களை எதிர்கொண்டாலும், நம் இறைத்தந்தை மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். வட அரேபியாவின் நான்கு நாடுகளில் வாழ்கின்ற ஏறத்தாழ இருபது இலட்சம் கத்தோலிக்கருக்கு அறுபது அருள்பணியாளர்களும், 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறாருக்கு ஏறத்தாழ 1,300 மறைக்கல்வி ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினோர் தன்னார்வலர்கள். மேலும், சமய சுதந்திரம், வேலையில் அனுமதி, தங்குவதற்கு அனுமதி போன்றவற்றில் சில நாடுகளில் நிலவும் பிரச்சனைகளால் இத்தன்னார்வலர்கள், சிலவேளைகளில் கடினமான சூழல்களைச் சந்திக்கின்றனர். நாங்கள், பாலைநிலத்தில் புலம்பெயர்ந்தோர் திருஅவையாக இருந்தபோதிலும், எதிர்பாராத இடங்களில் நடைபெறும் சந்திப்புகள், மற்றும், அனுபவங்கள் ஆண்டவரின் இருத்தலை உணரச்செய்கின்றது. திருத்தந்தையே, இப்போது மேய்ப்புப் பணியாளர்கள் பகிர்ந்துகொள்ளவிருப்பதைக் கேட்கும்போது அதை அறிவீர்கள், Shukran, என அராபியத்தில் நன்றி சொல்லி தன் வரவேற்புரையை நிறைவுசெய்தார், ஆயர் ஹின்டர். மேய்ப்புப் பணியாளர்கள் CHRIS NORONHA, அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் அருள்சகோதரி ரோஸ் செலின் ஆகிய இருவரும் தங்களின் அனுபவங்களைத் திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்