தேடுதல்

மனாமா இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் வழிபாடு மனாமா இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் வழிபாடு 

மனாமா இயேசுவின் திருஇருதய ஆலயம்

மனாமாவிலுள்ள இயேசுவின் திருஇருதய ஆலயம், பஹ்ரைன் அரசர் Sheikh Hamad bin Isa bin Salman Al Khalifa அவர்கள் நன்கொடையாக வழங்கிய நிலத்தில், 1939ஆம் ஆண்டில் வளைகுடாப் பகுதியில் கட்டப்பட்ட முதல் கத்தோலிக்க ஆலயம்

மேரி தெரேசா: வத்திக்கான்

மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள பெரும்பாலான நாடுகளைப் போன்று பஹ்ரைன் முடியாட்சி நாடும் ஓர் இஸ்லாமிய நாடாகும். அந்நாட்டிலுள்ள மக்களில் பெரும்பான்மையினோர் முஸ்லிம்கள். ஆயினும், இந்நாட்டில் வாழ்கின்ற மற்ற மதத்தவரும் தங்களின் மத நம்பிக்கையின்படி வழிபாடுகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு முக்கிய சான்று பஹ்ரைனிலுள்ள இரு கத்தோலிக்க ஆலயங்கள். அவற்றில் ஒன்று அவாலியிலுள்ள அரேபியாவின் நமதன்னை பேராலயம். இன்னொன்று மனாமா நகரிலுள்ள இயேசுவின் திருஇருதய ஆலயம். இந்த இயேசுவின் திருஇருதய ஆலயமே, பாரசீக வளைகுடாப் பகுதியில் முதன்முதலாக கட்டப்பட்ட கத்தோலிக்க ஆலயமாகும். அதனால் இது "அன்னை ஆலயம்" எனவும் அழைக்கப்படுகிறது. அப்போதைய பஹ்ரைன் அரசர் Sheikh Hamad bin Isa bin Salman Al Khalifa அவர்கள் நன்கொடையாக வழங்கிய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அவ்வாலயத்திற்கு 1939ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இரவு 11 மணிக்கு அக்கத்தோலிக்க ஆலயத்தில் ஒலித்த மணியே, பாரசீக வளைகுடாப் பகுதியில் ஒலித்த முதல் ஆலய மணியாகும். அன்று அங்கு கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. ஆயினும் அவ்வாலயம், 1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி அப்போதைய திருத்தூது தலைமை நிர்வாகி ஆயர் Giovanni Battista Tirinnanzi அவர்களால் முறைப்படி அர்ச்சிக்கப்பட்டது.

மேலும், கப்புச்சின் துறவு சபையின் அருள்பணியாளர் லூயிஜி அவர்களின் உதவியால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் அருகில் அருள்பணியாளர் இல்லம் மற்றும், பள்ளிக்கூடம் அமைப்பதற்காக, 1940ஆம் ஆண்டு மார்ச் 3ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பஹ்ரைனில் எண்ணெய்வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அந்நாட்டில் வேலைசெய்வதற்காக இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து அந்நாட்டில் மக்கள் குடியேறத் தொடங்கியதால் கத்தோலிக்கரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதனால், மனாமாவின் இயேசுவின் திருஇருதய ஆலயமும் புதுப்பிக்கப்பட்டது. தற்போதைய இயேசுவின் திருஇருதய ஆலயம், 1991ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, அப்போதைய திருத்தூது தலைமை நிர்வாகி ஆயர் Bernard Giovanni Gremoli அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இப்போது இப்புதிய ஆலயம், ஏறத்தாழ ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கத்தோலிக்கரின் ஆன்மிக மையமாக விளங்குகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஏழு மணி முதல், மாலை 4.15 மணி வரை பல்வேறு மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. வார நாள்களிலும் திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. அதோடு மாதத்திற்கு இருமுறை ஆங்கிலத்திலும், ஒவ்வொரு மாதத்தின் நான்காவது சனிக்கிழமையன்று தகாலோவிலும் விவிலிய வகுப்புகள், மற்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறைக்கல்வியும் நடத்தப்படுகின்றன. மேலும், பஹ்ரைனில் கத்தோலிக்கர் திருமணம் புரிந்து, தங்களின் பிள்ளைகளுக்கு ஆலயத்தில் திருமுழுக்கு அளிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2022, 16:30