தேடுதல்

மனாமா, திருஇருதயப் பள்ளியில் இளையோர் சந்திப்பு மனாமா, திருஇருதயப் பள்ளியில் இளையோர் சந்திப்பு 

அவாலியில் திருஇருதயப் பள்ளியில் இளையோர் சந்திப்பு

பஹ்ரைனில் பன்மையில் ஒற்றுமை என்ற உயரிய கோட்பாடு கடைப்பிடிக்கப்படுவதே, இந்த அழகான நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் – திருத்தந்தையிடம் முஸ்லிம் மாணவர் சையத்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 05, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.45 மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம் இரவு 7.15 மணிக்கு,  பஹ்ரைனின் திருஇதயப் பள்ளியில் இளையோரைச் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 1953ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இப்பள்ளி, பிரித்தானிய கல்விமுறையில் இருபாலாருக்குமென நடத்தப்படுகிறது. அவ்வாண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை கொம்போனி மறைப்பணி அருள்சகோதரிகள் இப்பள்ளியை நடத்தி வந்தனர். அதற்குப்பின்னர் அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருள்சகோதரிகள் அப்பள்ளியை நடத்தி வருகின்றனர். ஏறத்தாழ 800 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பள்ளியில் ஆங்கிலம் தவிர, அராபியம், பிரெஞ்சு, இந்தி, தகாலோ போன்ற மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இத்திருஇருதயப் பள்ளிக்குச் சென்ற திருத்தந்தையை, இளையோர், ஆடல் பாடல்களோடு வரவேற்றனர். இச்சந்திப்பில் முதலில் அப்பள்ளியின் இயக்குனர் அருள்சகோதரி ரோஸ்லின் தாமஸ் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசியவுடன், ABDULLA ATIYA SAYED என்ற முஸ்லிம் மாணவர் தனது சாட்சியத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இளையோரின் பகிர்வு

திருத்தந்தையிடம் முஸ்லிம் மாணவர் சையத்
திருத்தந்தையிடம் முஸ்லிம் மாணவர் சையத்

இப்பள்ளி, ஒற்றுமை மற்றும், ஒருவரையொருவர் மதித்தலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. தனது 16 ஆண்டுகால மாணவப்பருவ அனுபவத்தில் நிறைய பதக்கங்களைப் பெற்றுள்ளேன். கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றுள்ளேன். பஹ்ரைனில் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், இந்துக்கள், இஸ்லாமியர், யூதர்கள் என பல்வேறு மதத்தினர் வாழ்ந்து வருகிறோம். அனைவரும் சம எண்ணிக்கையில் இல்லாவிடினும், எல்லாரும் சமமாக மதிக்கப்படுகின்றனர். பன்மையில் ஒற்றுமை என்ற உயரிய கோட்பாடு கடைப்பிடிக்கப்படுவதே, இந்த அழகான நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இவ்வாறு முஸ்லிம் மாணவர் சையத் அவர்கள், திருத்தந்தையிடம்  பகிர்ந்துகொண்டபின்னர், மெரினா ஜோசப் மோத்தா என்ற கத்தோலிக்க மாணவியும், திருஇருதய பங்குத்தளத்தைச் சேர்ந்த நெவின் வர்க்கீஸ் பெர்னான்டெசும் தங்களின் எண்ணங்களை திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர். இளையோரின் இப்பகிர்வுகளைக் கேட்டபின்னர் திருத்தந்தையும் தன் உரையைத் தொடங்கினார்.

திருஇருதயப் பள்ளியில் இளையோர் சந்திப்பு
திருஇருதயப் பள்ளியில் இளையோர் சந்திப்பு

இவ்விளையோரைச் சந்தித்து அவர்களை ஆசிர்வதித்த திருத்தந்தை, இளையோருக்கு கல்வி கற்றுக்கொடுக்க ஆர்வம் கொள்வதும், அதற்காக நேரத்தைச் செலவழிப்பதும் அமைதியைக் கட்டியெழுப்புவதற்காகவே. இந்தப் பள்ளியும், எல்லாப் பள்ளிகளும் நம்பிக்கையின் உடன்பிறந்த உணர்வைக் கட்டியெழுப்பும் இடங்களாக அமைவதாக. அவ்விடங்களில், சிறியோரின் பெரிய கனவுகள் உண்மைவடிவம்பெற நாம் பணியாற்றுகிறோம் என்று, அப்பள்ளியில் தங்கப் புத்தகம் எனப்படும் விருந்தினர் நோட்டிலும் கையெழுத்திட்டார். இச்சந்திப்புதான் திருத்தந்தை இச்சனிக்கிழமை பங்குபெற்ற இரண்டாவதும், கடைசி நிகழ்வும் ஆகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2022, 15:44