தேடுதல்

இளையோரே, திருஅவை உங்களுடன் இருக்கின்றது : திருத்தந்தை

கடவுளின் உண்மையுள்ள படைப்பாற்றல் மற்றும் நல்ல ஆலோசகர்களால் வழிநடத்தப்படுவதன் வழியாக வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளுங்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் 5, இச்சனிக்கிழமையன்று, அவாலியிலுள்ள இயேசுவின் திருஇதயப் பள்ளியில் இளையோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை. பஹ்ரைன் அரசில் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகளுக்கு இடையே சந்திப்பு மற்றும் உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் கண்டு நான் பெரிதும் மகிழ்வடைகிறேன். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த நீங்கள் துணிவுடன் ஒன்றித்திருப்பதைப் பார்க்கும்போது, நீங்கள் இல்லாமல் இதற்கு சாத்தியம் இல்லை என்பதை நான் உணர்கின்றேன். நாம் வாழும் சிக்கலான மற்றும் மாறுபட்ட சூழ்நிலைகளில் உரையாடல் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. நாம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், மக்கள் சார்ந்த மற்றும் உடன்பிறந்த உணர்வுநிலை கொண்ட ஒரு உலகத்தை உருவாக்க சில தடைகளைத் தகர்த்தெறிவது நமக்கு அவசியமாகிறது. இவற்றைக் கருத்தில்கொண்டு, ஒரு ஆசிரியராக அல்ல, உங்கள்மீது அக்கறை கொண்டவராக, உங்களை உற்சாகப்படுத்துபவராக மூன்றுவிதமான அழைப்புகளை உங்கள்முன் வைக்க விரும்புகின்றேன்.

கரிசனைகொண்ட ஒரு கலாச்சாரத்தைத் தழுவிக்கொள்ளுங்கள்

முதலாவதாக, கரிசனைகொண்ட ஒரு கலாச்சாரத்தைத் தழுவிக்கொள்ள உங்களை அழைக்கிறேன். கரிசனை என்பது பரிவுள்ளம் கொண்ட ஒரு மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது மற்றும், நம்மிடம் நிலவும் அக்கறையற்ற போக்கை நீக்கி மற்றவர்கள்மீது அக்கறைகொண்ட மனநிலையை உருவாக்கிக்கொள்வதைக் குறிக்கிறது. ஒரு கிறிஸ்தவராக நான் இயேசுவைப் பார்க்கும்போது, அவர் தான் சந்தித்த அனைத்து மக்கள்மீதும் மிகுந்த கரிசனைக் கொண்டிருந்தார். அவர் மக்களின் கண்களை உற்றுநோக்கினார், அவர்கள் உதவிக்காக கூக்குரலிடுவதைக் கேட்டார், அவர்கள் அருகில் சென்று அவர்களைத் தொட்டுக் குணப்படுத்தினார். இயேசுவின் இச்செயல்கள் தேவையில் இருப்போருக்குத் தேவையான அளவிற்கு நாம் உதவிடவேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.

இளையோரே, வெளியில் நிகழ்பவற்றைவிட உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். நீங்களும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாழ்க்கையும் ஒரு பெரிய கொடை என்பதை உணருங்கள். அமைதியான நிலையில் உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் நிகழ்பவற்றைக் குறித்து கடவுளுடன் பேசுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் சந்திக்கும் நபர்களைப் பற்றியும், உங்கள் பயணத்தில் அவர் உங்களுக்குத் துணையாகக் கொடுத்தவர்களைப் பற்றியும் அவரிடம் உரையாடுங்கள். அவர்களின் முகங்களையும், மகிழ்ச்சியையும், துயரங்களையும்  அவரிடம் கொண்டு வாருங்கள், ஏனென்றால் உறவுகள் இல்லாமல் இறைவேண்டல் இல்லை, அன்பு இல்லாமல் மகிழ்ச்சி இல்லை.

திருஇருதயப் பள்ளியில் இளையோர் சந்திப்பு
திருஇருதயப் பள்ளியில் இளையோர் சந்திப்பு

உடன்பிறந்த உணர்வுநிலையை வளர்த்திடுங்கள்

இரண்டாவதாக உடன்பிறந்த உணர்வுநிலையை வளர்க்க உங்களை அழைக்கின்றேன். தவறான எண்ணங்கள் மற்றும் கருத்தியல் தடைகளைத் தாண்டி, தொடர்புகளை ஏற்படுத்தி நட்பையும் உறவையும் வளர்த்துக் கொள்வதில் மிகவும் திறமைகள் கொண்ட நீங்கள், உடன்பிறந்த உணர்வுநிலையின் விதைகளைத் தொடர்ந்து விதையுங்கள். ஏனென்றால் உடன்பிறந்த உணர்வுநிலையில் மட்டுமே நம் உலகத்திற்கு எதிர்காலம் இருக்கும் என்பதால் நீங்கள் எதிர்காலத்தை உருவாக்குபவர்களாக இருப்பீர்கள். சகோதரர் சகோதரிகளாக வாழ்வது என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் கொடுக்கப்பட்ட உலகளாவிய அழைப்பு. இதனைச் செயல்படுத்த வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது, மாறாக, உறுதியான செயலூக்கமே தேவைப்படுகிறது.

வாழ்க்கையில் முடிவுகளை எடுக்கும் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்

திருஇருதயப் பள்ளியில் இளையோர் சந்திப்பு
திருஇருதயப் பள்ளியில் இளையோர் சந்திப்பு

மூன்றாவதாக, வாழ்க்கையில் முடிவுகளை எடுக்கும் சவாலை ஏற்றுக்கொள்ள உங்களை அழைக்கின்றேன் வாழ்க்கையில் சவால்கள் இல்லாமல் எதுவுமே இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இத்தகைய சவால்கள் நிறைந்த சூழலில் சரியாக முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாகப் பல்வேறு சாலைகள் சந்திக்கும் ஒரு இடத்திற்கு நீங்கள் வரும்போது, எந்தச் சாலையில் பயணிப்பது என்பதை நீங்கள் சரியாகாத் தீர்மானிக்கவேண்டியிருக்கும். இங்கே முடிவெடுக்கும் திறன் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நீங்கள் ஆலோசனைக்காக இணையத்திற்குச் செல்வதற்கு முன், எப்போதும் வாழ்க்கையில் நல்ல ஆலோசகர்களையும், உங்களுக்கு வழிகாட்டும் மற்றும் உதவக்கூடிய புத்திக்கூர்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட நபர்களைத் தேடுங்கள். அன்புள்ள இளையோரே, எங்களுக்கு நீங்கள் தேவை. உங்கள் படைப்பாற்றல், கனவுகள் மற்றும் உங்களின் துணிச்சல், ஈர்ப்பு மற்றும் புன்னகை, மகிழ்ச்சி மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் கொண்டு வரக்கூடிய பேராற்றல் ஆகியவை எங்களுக்குத் தேவை. திருத்தந்தையாக, நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்: திருஅவை உங்களுடன் இருக்கின்றது, உங்கள் ஒவ்வொருவருவரையும் அது மிகவும் விரும்புகின்றது, இதனால் நாம் புதுப்பிக்கப்படவும், புதிய பாதைகளை தேர்வுசெய்யவும், புதிய மொழிகளை ஆய்ந்தறியவும், மேலும் நாம் அதிகம் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும், விருந்தோம்பலில் சிறந்தவர்களாகவும் மாற முடியும். பெரிய கனவு காணவும், வாழ்க்கையை முழுமையாக வாழவும் துணிவை இழக்காதீர்கள்! பரிவின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு அதனை பரப்புரை செய்யுங்கள் உடன்பிறந்த உணர்வு நிலையின் வெற்றியாளராக மாறுங்கள். கடவுளின் உண்மையுள்ள படைப்பாற்றல் மற்றும் நல்ல ஆலோசகர்களால் வழிநடத்தப்படுவதன் வழியாக வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளுங்கள். உங்களை என் இதயத்தில் சுமந்து உங்களுக்காக இறைவேண்டல் செய்கின்றேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2022, 14:59