தேடுதல்

செய்தியாளர் விமானப் பயணத்தில் சந்திப்பு செய்தியாளர் விமானப் பயணத்தில் சந்திப்பு 

எல்லாரையும் ஏற்கும் பஹ்ரைனின் திறந்த மனநிலைக்கு பாராட்டு

ஒரு சமுதாயம் முன்னோக்கிச் செல்வதற்கு, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும், இல்லையேல் நாம் நலிந்தவர்களாக மாறிவிடுவோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

பஹ்ரைன் முடியாட்சி நாட்டில், இனம், மதம், மொழி என்ற வேறுபாடின்றி அனைவரும் மதிக்கப்படுவதற்குத் தேவையான திறந்தமனது இருப்பதையும், இந்நாட்டில் பிலிப்பீன்ஸ், இந்தியாவின் கேரளா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பலர் வாழ்வதையும் பணியாற்றுவதையும் கண்டு வியந்தேன் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நவம்பர் 03, இவ்வியாழனன்று பஹ்ரைன் வளைகுடா நாட்டில் நான்கு நாள் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை, நவம்பர் 06 இஞ்ஞாயிறு பஹ்ரைன் நேரம் பகல் 1.16 மணிக்கு அத்திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து உரோம் நகருக்கு மேற்கொண்ட விமானப் பயணத்தில், பஹ்ரைன் செய்தி நிறுவனத்தின் Fatima Al Najem அவர்கள் இத்திருத்தூதுப் பயணம் குறித்து கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார்,

உக்ரைன் உள்ளிட்ட உலகில் இடம்பெறும் பல போர்கள், கெய்ரோவின் அல்-அசார் மசூதியின் பெரிய குரு அல் தாயிப் அவர்களுடன் உள்ள உறவு, பெண்களுக்கு சமத்துவம், அவர்களின் உரிமைகள் உறுதிசெய்யப்படல், புலம்பெயர்ந்தோர் விவகாரம், சிறார்க்கெதிரான உரிமை மீறல் என பல்வேறு தலைப்புகளில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலளித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பஹ்ரைன் திருத்தூதுப் பயணத்தின் நோக்கம்

இஸ்லாமியரோடு பல்சமய உரையாடலிலும், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களோடு கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலிலும் ஈடுபடுவது, உண்மையிலேயே முக்கிய நோக்கமாக இருந்ததால், இத்திருத்தூதுப் பயணம், சந்திப்பின் பயணமாக இருந்தது என்றுரைத்துள்ள திருத்தந்தை, அல் தாயிப் அவர்கள் முன்வைத்த கருத்துருக்கள், இஸ்லாமுக்குள் ஒற்றுமை, கிறிஸ்தவர்களோடும், ஏனைய மதத்தவரோடும் ஒற்றுமை என, எல்லாருக்கிடையேயும் ஒற்றுமையை வலியுறுத்துவதாக இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

படைப்பு மற்றும், அதனைப் பராமரிப்பது குறித்து முஸ்லிம் மூத்தோர் அவை கூறியவை என்னை மிகவும் கவர்ந்தன என்று கூறியுள்ள திருத்தந்தை, மனித உடன்பிறந்த உணர்வு குறித்து மூன்றாண்டுகளுக்குமுன் வெளியிடப்பட்ட ஏடு, Fratelli tutti அதாவது அனைவரும் உடன்பிறந்தோர் என்ற திருமடலுக்கு அடிப்படையாக அமைந்தது என்றும், அந்த ஏடு இன்றைய காலக்கட்டத்திற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

லெபனோன் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு

லெபனோன் நாட்டின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, லெபனோன் ஒரு நாடு அல்ல, அது ஒரு செய்தி, லெபனோன் நம் அனைவருக்கும் மிகப்பெரிய ஒரு செய்தியைக் கொண்டிருக்கின்றது, அதனாலேயே அந்நாட்டின் தற்போதைய நிலைமை கவலை தருகின்றது என்று கூறியுள்ளார்.

லெபனோனுக்காகச் செபியுங்கள், செபமும் ஒரு நண்பன், செய்தியாளர்களாகிய நீங்கள், லெபனோனின் நிலைமையைக் கண்ணுற்று, அந்நாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இவ்வேளையில், லெபனோன் அரசியல்வாதிகள், சுயநலனைக் கைவிட்டு, ஓர் இணக்கத்திற்கு வரவேண்டும் என அழைப்புவிடுக்கிறேன் என்றுரைத்துள்ள திருத்தந்தை, முதலில் அவர்கள், கடவுளுக்கும், பின்னர் நாட்டிற்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பெண்களின் உரிமைகள்

விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு
விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு

பெண்களின் மாண்பு, சமுதாயத்திலும், பொதுத் துறைகளிலும் அவர்கள் தங்களின் இடத்தைக் கொண்டிருக்க உரிமை  உட்பட மனிதரின் அடிப்படை உரிமைகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் ஒரு தொடர் போராட்டம் என்பதே உண்மை எனவும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பெண்கள் தங்களின் சொந்த வழியைக் கொண்டிருக்கின்றனர், அது ஆண்களின் வழி அல்ல எனவும், ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

வத்திக்கானில் பல்வேறு துறைகளில் பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, வாழ்வுக்கான பாப்பிறை கழகத்தில், மனிதாபிமானம்கூடுதலாக இருக்கவேண்டும் என்பதற்காக, அங்கு Marianna Mazzuccato என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு பொருளாதார வல்லுனரை இணைத்துள்ளேன் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சமுதாயம் முன்னோக்கிச் செல்வதற்கு, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படவேண்டியது முக்கியம், இல்லையேல் நாம் நலிந்தவர்களாக மாறிவிடுவோம் என்று எச்சரிக்கைவிடுத்த திருத்தந்தை, இதற்கு உலக அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.   

ஆணாதிக்கம் உள்ள ஒரு சமுதாயத்திலிருந்து நான் வந்துள்ளேன், அர்ஜென்டீனியர்கள் எப்போதும் ஆணாதிக்கம் உள்ளவர்கள், இந்நிலை, மனித சமுதாயத்தைக் கொலைசெய்கிறது எனவும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களின் உரிமைகளுக்காக மட்டுமன்றி, அவர்களுக்குச் சமவாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும், ஏனென்றால் மாற்றம் இடம்பெறுவதற்கு நமக்கு உதவும்வண்ணம், சமுதாயத்தில் பெண்களை நாம் கொண்டிருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2022, 15:46