தேடுதல்

அரேபியா நமதன்னை பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு அரேபியா நமதன்னை பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு 

அரேபியா நமதன்னை பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு

கிறிஸ்தவர்களாகிய நம் மத்தியில் நாம் ஒன்றிப்புடன் வாழாதவரை கடவுளின் அன்புக்கு நாம் சாட்சிகளாக இருக்கமுடியாது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 4, இவ்வெள்ளி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 39வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாள். இந்நாளின் உள்ளூர் நேரம் மாலை 5.45 மணிக்கு, பஹ்ரைனின் அவாலியிலுள்ள அரேபியாவின் நமதன்னை பேராலயத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 2021ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அப்பேராலயத்தில் அமைதிக்காக கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு ஒன்றை திருத்தந்தை தலைமையேற்று நிறைவேற்றினார். மேலும், திருத்தந்தை, அரேபியாவின் அன்னை மரியாவிடம் செபித்துக்கொண்டிருந்தபோது, மூன்று சிறார் அன்னை மரியாவுக்கு மலர்களை அர்ப்பணித்தனர். இவ்வழிபாட்டில் கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் உட்பட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளோடு உலகின் அமைதிக்காக இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை. இவ்வழிபாட்டில் பன்மைத்தன்மையில் ஒற்றுமை, சான்று வாழ்வு ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருத்தந்தை மறையுரை ஒன்றும் ஆற்றினார்.

இவ்வழிபாட்டில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் அமைதிக்காகச் செபித்தனர். பின்னர் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அமைதிக்காகச் செபித்த செபம் பாடலாகப் பாடப்பட்டது. அதோடு இச்செப வழிபாடும் நிறைவுபெற்றது. மேலும், "தம் பிள்ளைகளை கனிவோடு பராமரித்துவரும் அரேபியாவின் அன்னை மரியா, இப்பேராலயத்திற்கு வருபவர்கள், மற்றும் அவரிடம் மன்றாடுபவர்களோடு துணைநிற்பாராக. அவர்களைப் பாதுகாப்பாராக. வளைகுடாப் பகுதியிலுள்ள கிறிஸ்தவச் சமுதாயங்களின் பாதையை மிகுந்த நம்பிக்கையோடு அன்னை மரியாவின் கரங்களில் அர்ப்பணிக்கின்றேன்" என்று அப்பேராலயத்தின் விருந்தினர் நோட்டிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்டார்.

அரேபியா நமதன்னை பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு
அரேபியா நமதன்னை பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு

டுவிட்டர் செய்திகள்

இந்த அண்மை ஆண்டுகளில் பல்வேறு கிறிஸ்தவச் சபைகளைச் சார்ந்த மறைசாட்சிகள் எத்தனை பேர்! வானில் ஒரே விண்மீன் கூட்டத்தை உருவாக்கியுள்ள அவர்கள் அனைவரும், வரலாற்றின் பாலைநிலம் வழியாக பயணம் மேற்கொள்ளும் நம் பாதையை வழிநடத்துவார்களாக. கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் ஒரே இலக்கைக் கொண்டிருக்கிறோம். கடவுளில் முழு ஒன்றிப்பை ஏற்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம் என்பதே அந்த இலக்கு.

கிறிஸ்தவர்களாகிய நாம், கடவுள் விரும்புகின்ற, நம் மத்தியில் ஒன்றிப்புடன் வாழாதவரை கடவுளின் அன்புக்கு நாம் சாட்சிகளாக இருக்கமுடியாது. எல்லாரையும் சென்றடைய விரும்பும் தூய ஆவியாரின் பெயரில் சான்று பகர்வதற்குத் திறந்தமனம் கொண்டிராவிட்டால், நாம் எல்லாரும் ஒன்றித்திருக்க முடியாது.

நம் கருவிகள், இறைவேண்டல் மற்றும், உடன்பிறந்த உணர்வுமாகும்.  இவையே நம் பணிவுள்ள, அதேநேரம் பலனுள்ள கருவிகள். அமைதி என்ற பெயர்கொண்ட எல்லாம்வல்ல இறைவனுக்குத் தகுதியற்றவர்களாக வாழும் குறுக்குவழிகளால் சோதிக்கப்பட நம்மை அனுமதிக்கக் கூடாது. வன்முறை, போர் மற்றும், ஆயுத வர்த்தகத்தை வளர்ப்பவர்களால் கடவுளின் பெயர் அவமதிக்கப்படுகின்றது.

அரேபியா நமதன்னை பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு
அரேபியா நமதன்னை பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு

கடவுளே அமைதியின் ஊற்று, மற்றும், போர், காழ்ப்புணர்வு அல்லது வன்முறையை அவர் ஒருபோதும் கொணர்வதில்லை. அவரில் நம்பிக்கை வைக்கும் நாம், சந்திப்பு, பொறுமையோடுகூடிய நல்லிணக்கத்திற்கு வழியமைக்கும் பேச்சுவார்த்தை, உரையாடல் ஆகியவை வழியாக அமைதியை ஊக்குவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். இதுவே அமைதியான நல்லிணக்கத்தின் பிராணவாயு.

இவ்வாறு திருத்தூதுப் பயணம் (#ApostolicJourney) என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குறுஞ்செய்திகளையும் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். அமைதியுடன்கூடிய நல்லிணக்கம், கிறிஸ்தவ ஒன்றிப்பு, சான்று வாழ்வு போன்றவற்றுக்கு பஹ்ரைனில் அழைப்புவிடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டுக்கான தனது நான்கு நாள் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து நவம்பர் 06, இஞ்ஞாயிறு மாலையில் வத்திக்கான் வந்துசேர்வார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2022, 20:00