பஹ்ரைனில் 2வது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த 39 வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளாகி. நவம்பர் 4, இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு, அவாலியின் திருத்தூது நிர்வாகத் தலைமையிடத்தில் அவர் தனியாக திருப்பலி நிறைவேற்றினார். அதற்குப்பின்பு, சாஹிர் அரச மாளிகையின் Al-Fida வளாகத்திற்குச் சென்ற திருத்தந்தையை, பஹ்ரைன் அரசர், எகிப்தின் அல்-அசார் முஸ்லிம் பெரிய குரு ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அம்மூவரும், அங்குள்ள தோட்டத்தில் அமைதியின் மரம் ஒன்றை நட்டனர். அதற்குப்பின்னர், கிழக்கு மற்றும் மேற்குக்கும் இடையே மனித நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, பஹ்ரைன் அரசரின் முயற்சியால், உரையாடலுக்கான பஹ்ரைன் மன்றம் நடத்திய இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இறைவேண்டலோடு தொடங்கிய இம்மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், முதலில் பஹ்ரைன் அரசர் அல் கலிஃபா அவர்களும், அவருக்குப்பின், அல்-அசாரின் பெரிய குரு அகமது அல் தாயிப் அவர்களும் உரையாற்றினர்.
பெரிய குரு அகமது அல் தாயிப்
மனித சமுதாயத்திற்கெதிராய் இன்றைய உலகில் நடக்கின்ற அனைத்துக் கொடூரங்களுக்கும் முக்கிய காரணம் நீதியின்மையே. மனிதரின் உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையே சமத்துவநிலை காக்கப்படவேண்டும் என்ற கடவுளின் திட்டம் கடைப்பிடிக்கப்படாததால் இன்று உலகமும், இயற்கையும் துன்புறுகின்றன. உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினர் உலகின் பாதியளவு செல்வத்தைக் கொண்டுள்ளனர். நூறு பேர் மட்டும் வைத்திருக்கும் சொத்து, 400 கோடிப் பேர் வைத்திருக்கும் சொத்துக்கும் அதிகம். இத்தகைய சூழலில் இப்பூமிக்கோளத்தின் நலனை எவ்வாறு காக்க முடியும். இவ்வாறு பல்வேறு கேள்விகளை எழுப்பிய பெரிய குரு அல் தாயிப் அவர்கள், மனிதருக்கிடையே நிலவ வேண்டிய உறவுகள் குறித்து குர்ஆன் புனித நூலிலிருந்து மேற்கோள் காட்டி தன் உரையை நிறைவுசெய்தார்.
பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 200 தலைவர்கள் பங்குபெற்ற இந்நிகழ்வில், இவ்விருவரும் ஆற்றிய உரைகளுக்குப் பின்னர், திருத்தந்தையும் தன் உரையைத் தொடங்கினார். மதத்தலைவர்கள் மனித சமுதாயத்திற்கு உதவும் கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்பதை வலியுறுத்தி திருத்தந்தை உரையாற்றினார். போருக்கு எதிராக குரல் கொடுத்த திருத்தந்தை, பெண்கள் அங்கீகரிக்கப்படல், சிறாரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படல், குடியுரிமை குறித்த கருத்தியல், உண்மையான மத சுதந்திரம் போன்றவை குறித்து உரையாற்றினார். சாஹிர் அரச மாளிகையின் Al-Fida' வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த, தங்கப் புத்தகம் எனப்படும் விருந்தினர் நோட்டிலும் கையெழுத்திட்டார்.
"இரு கடல்களின் நிலமாகிய" பஹ்ரைன் முடியாட்சி நாட்டிலிருந்து உன்னதரான கடவுளிடம் வேண்டுகிறேன். மனித சமுதாயம், உடன்பிறந்த உணர்வின் திசைமானியை மீண்டும் கண்டுணர்ந்து, சந்திப்புப் பாதையைத் தொடர்வதன் வழியாக, போரின் கொந்தளிக்கும் கடலிலிருந்து, நல்லிணக்கத்தின் அமைதி நிறைந்த கடலில் கால்பதிப்பதாக என்று திருத்தந்தை அந்த தங்க புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
Al-Fida' வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குப்பின்னர், திருத்தூது நிர்வாகத் தலைமையகம் சென்று மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். நவம்பர் 04, இவெவள்ளி உள்ளூர் நேரம் மாலை நான்கு மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம், இவ்வெள்ளி மாலை 6.30 மணிக்கு, அதே மையத்தில், எகிப்தின் அல் அசார் மசூதியின் பெரிய குருவை தனியே சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவர்கள் இருவரும், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி அபு தாபியில், உலக அமைதி மற்றும், பொதுவான நல்லிணக்க வாழ்வுக்கு அழைப்புவிடுக்கும் மனித உடன்பிறந்த உணர்வு ஏட்டில் கையெழுத்திட்டனர். இவ்வேடு, கிறிஸ்தவர்க்கும் இஸ்லாமியர்க்கும் இடையே உரையாடலை ஊக்குவிக்கும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்