தேடுதல்

அவாலியில் முதல் நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்

ஆசியக் கண்டத்தில் மூன்றாவது சிறிய தீவு நாடான பஹ்ரைனில் முஸ்லிம்கள் எழுபது விழுக்காடு, கிறிஸ்தவர்கள் 15 விழுக்காடு, இந்துக்கள் 10 விழுக்காடு, மற்றும் ஏனைய மதத்திவரும் உள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

மக்கள் அனைவரும் அமைதியிலும் நல்லிணக்கத்திலும், ஒருவர் ஒருவரை மதித்தும் ஒன்றிணைந்து வாழவேண்டும், உலகில் மக்களைக் கொலைசெய்கின்ற ஆயுதங்கள் கைவிடப்படவேண்டும், அவற்றின் சப்தங்கள் கேட்கப்படவே கூடாது. மதங்களுக்கிடையே நாடுகளுக்கு இடையே உரையாடல் இடம்பெறவேண்டும். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்த அவரது குரல், நவம்பர் 03, இவ்வியழனன்று பஹ்ரைன் நாடெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. இவ்வியாழன் பஹ்ரைன் நேரம் மாலை 4.45 மணியளவில் அந்நாட்டின் அவாலியிலுள்ள சாஹிர் விமானத்தளம் சென்றிறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. கத்தோலிக்கத் திருஅவையின் தனித்துவமிக்க தலைவரான திருத்தந்தை ஒருவர், தங்களது நாட்டிற்கு முதன் முறையாக வந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நினைத்து, அந்நாட்டு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மகிழ்வதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகளில் தெளிவாக காண முடிந்தது. “தந்தை திருத்தந்தை” என்றே பஹ்ரைன் மக்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றுள்ளனர். ஆசியக் கண்டத்தில் மூன்றாவது சிறிய தீவு நாடான பஹ்ரைனில் முஸ்லிம்கள் எழுபது விழுக்காடு, கத்தோலிக்கர் 11 விழுக்காடு, ஏனையக் கிறிஸ்தவர்கள் 15 விழுக்காடு. இந்துக்கள் 10 விழுக்காடு. இவர்கள் தவிர ஏனைய மதத்தவரும் வாழ்ந்து வருகின்றனர் மேலும், இந்நாட்டில் நீண்ட காலமாக பல்வேறு மதங்களின் வழிபாட்டுத் தலங்களும்  இருப்பது, வளைகுடா நாடான பஹ்ரைனில், சமய சகிப்புத்தன்மை நிலவுவதற்குச் சான்றாக உள்ளது. இன்னும், இந்நாட்டில் அரபு, அதிகாரப்பூரவ மொழியாக இருந்தாலும், ஆங்கிலம், உருது, ஹிந்தி, தமிழ், தகாலோ மற்றும், பிற மொழிகளும் பேசப்படுகின்றன.

அவாலியில் முதல் நாள் நிகழ்வுகள்

இவ்வியாழன் உள்ளூர் நேரம் மாலை 6.10 மணியளவில், பஹ்ரைனின் அவாலித் தீவிலுள்ள சாஹிர் அரச மாளிகையில் அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மாளிகையில் பஹ்ரைன் அரசர் முகமது பின் ஈசா சல்மான் அல் கலிஃபா அவர்களைச் சந்தித்தார். மூன்று தலைப்புக்களை மையப்படுத்திய இத்திருத்தூதுப்பயணத்தைக் குறிக்கும் பாப்பிறை பதக்கம் ஒன்றை அரசருக்கு அன்பளிப்பாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதற்குப்பின்பு அம்மாளிகையில் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் இந்நிகழ்வில், பஹ்ரைன் முடியாட்சி நாட்டின் தலைவரான அரசர் அல் கலிஃபா அவர்கள் திருத்தந்தையை வரவேற்று அரபு மொழியில் உரையாற்றினார்.

அரசர் அல் கலிஃபாவின் வரவேற்புரை

பஹ்ரைனில் திருத்தந்தை பிரான்சிஸ்
பஹ்ரைனில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொன்மையான கலாச்சாரங்களும், சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் மற்றும், அமைதியான வாழ்வும் நிலவும் இப்பூமிக்கு தாங்கள் வருகை தந்திருப்பது நினைத்து பெருமையடைகின்றோம். இதற்கு முதலில் அல்லாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தங்களின் ஆசிர்நிறைந்த மற்றும், வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தால் மகிழ்வடைகிறோம். மனித உடன்பிறந்த உணர்வு, நல்லிணக்கம் மற்றும், ஒன்றிணைந்த வாழ்வுக்கு மேற்கொண்டுவரும் முயற்சிகள் உள்ளிட்ட தங்களின் தனித்துவமிக்க பண்புகளால் வளைகுடாப் பகுதியிலுள்ள மக்கள் தங்களை மிகவும் அன்புகூர்கின்றனர். இத்தகைய பண்புகள் வளர எங்களது அரபு நாடும் ஒத்துழைப்பைத் தருகின்றது. இவ்வாறு பஹ்ரைன் அரசர் வரவேற்புரையாற்றியபின்னர், திருத்தந்தையும் அந்நாட்டிற்கான தன் முதல் உரையை வழங்கினார். அந்நாட்டின் “உயிர்துடிப்பின் இலச்சினை”யாக இருக்கின்ற “வாழ்வின் மரம்” என்பதை மையப்படுத்தி திருத்தந்தை உரையாற்றினார்.

சாஹிர் அரச மாளிகையில் பஹ்ரைனின் அரசு அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகளுக்கு உரையாற்றியபின்னர், அங்கிருந்து திருத்தூது நிர்வாகத் தலைமையிடத்திற்குச் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் பஹ்ரைனில் முதல் நாள் பயண நிகழ்வுகளை நிறைவுக்குக் கொணர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2022, 16:00