தேடுதல்

பஹ்ரைனில் திருத்தூதுப் பயண நிறைவு

பஹ்ரைன் அரசர் Hamad bin Isa Al Khalifa, அரசுரிமை இளவரசரான பிரதமர் Salman bin Hamad Al Khalifa, அரசரின் மூன்று மகன்கள், பேரப்பிள்ளை, அல் அசார் மசூதியின் பெரிய குரு அல் தாயிப் போன்ற பலர் திருத்தந்தைக்குப் பிரியாவிடை அளித்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

மனாமாவின் தொன்மைமிக்க இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் வழிபாட்டை நிறைவுசெய்து, அங்கிருந்து 27 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அவாலியின் சாஹிர் விமானத்தளம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அரச குடும்பத்தினரின் அறையில் பஹ்ரைன் அரசர் Hamad bin Isa Al Khalifa, அரசுரிமை இளவரசரான பிரதமர் Salman bin Hamad Al Khalifa, அரசரின் மூன்று மகன்கள், பேரப்பிள்ளை, அல் அசார் மசூதியின் பெரிய குரு அல் தாயிப் போன்ற பலர் திருத்தந்தைக்குப் பிரியாவிடை அளித்தனர். அரசு மரியாதையுடன் திருத்தந்தையை அனைவரும் உரோம் நகருக்கு வழியனுப்பி வைத்தனர். Gulf விமானம் போயிங் 787ல் உள்ளூர் நேரம் பகல் 1.16 மணிக்கு உரோம் நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. இத்துடன் அவரது 39வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது. பாரசீக வளைகுடாப் பகுதியில், இரண்டாவது நாட்டுக்கு மேற்கொண்ட இந்த நான்கு நாள் திருத்தூதுப் பயணத்தில் கிறிஸ்தவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார் மற்றும் பல்சமய உரையாடலை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  இவர் இத்திருத்தூதுப் பயணத்தில் பஹ்ரைன் தேசிய அரங்கத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் 111 நாடுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் பேர் பங்குபெற்றனர். இதுவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 58 நாடுகளில் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இவ்விமானப் பயணத்தில் தன்னோடு பயணம் மேற்கொண்ட பன்னாட்டு செய்தியாளர்கள் சந்திப்பையும் திருத்தந்தை நடத்தியுள்ளார்.  5 மணி 35 நிமிட நேர இவ்விமானப் பயணத்தில் வழியில் தான்  கடந்துவந்த நாடுகளின் தலைவர்களுக்கு ஆசிர்நிறைந்த தந்திச் செய்திகளையும் திருத்தந்தை அனுப்பினார்.  இஞ்ஞாயிறு உரோம் நேரம் மாலை 4.36 மணிககு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமானத்தளம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை.

உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில திருத்தந்தை நன்றி செபம்
உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில திருத்தந்தை நன்றி செபம்

விமானத்தளத்திலிருந்து வத்திக்கானுக்குத் திரும்பும் போது, உரோம் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று அன்னை மரியாவுக்கு நன்றி தெரிவித்தார். வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குவதற்குமுன்பும், அதை முடித்து திரும்பும்போதும் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று அன்னை மரியாவிடம் செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு மாலை திருத்தந்தை அப்பெருங்கோவிலுக்குச் சென்றது 101வது தடவையாகும்.    

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2022, 16:45