தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

உக்ரைன் மக்களின் துயரம் எனது துயரம் – திருத்தந்தை

இறப்பு, துன்பம், பசி, தாகம் போன்றவற்றால் பாதிக்கப்படும் உக்ரைன் மக்கள் சிலுவையில் துன்புற்ற இயேசுவை அடையாளப்படுத்துகின்றார்கள். திருத்தந்தை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒன்பது மாதப் போரினால் உக்ரைன் மக்கள் துணிச்சல், வலிமை, நம்பிக்கை,   உடையவர்களாக துன்பத்தில் செபிக்கும் மக்களாக,  உலகத்தாரால் அடையாளம் காணப்படுகின்றனர் என்றும், உக்ரைன் மக்களின் துயரம் தனது துயரம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் உக்ரைன்-இரஷ்யா போர் தொடங்கி 9 மாதங்கள் நிறைவுற்ற நிலையில் உக்ரைன் மக்களின் நிலை குறித்து வருந்தி அவர்களுக்காக அனுப்பிய செய்தியில் இவ்வாறுக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

உக்ரைன் மக்களை நினைத்து செபிக்காத நாளில்லை என்றும், அவர்களின் வலி, துன்பத்தை தனது துன்பம் மற்றும் வலியாக நினைத்து பார்ப்பதாகவும், இதயம் நிறை செபத்துடனும் உடன்பிறந்த உறவுடனும் அவர்களோடு உடன் இருப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஏவுகணைகள், துப்பாக்கி, குண்டு போன்றவை ஏற்படுத்தும் பேரழிவுகளால், இறப்பு, துன்பம் பசி, தாகம் போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்கள் சிலுவையில் துன்புற்ற இயேசுவை அடையாளப்படுத்துகின்றார்கள் எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

போரினால் குழந்தைகளை இழந்த பெற்றோர்,  பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், கணவனை இழந்த பெண்கள், இளையோர், முதியோர் என அனைவரையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை,  கட்டவிழ்க்கப்பட்ட இப்போரினால் இறந்த அனைவரும் கடவுளின் அருகில் இருந்து நாட்டின் அமைதி நிலைக்காக செபிக்கின்றார்கள் எனவும் எடுத்துரைத்துள்ளார்.

சூரிய உதயத்திற்கு பதிலாக மறைவைக் காண்பது போல இருளிலும் குளிரிலும் வாடும் உக்ரைன் மக்கள் கூடிய விரைவில், வெளிச்சத்தையும் கதகதப்பையும் தரும் நெருப்பைப் பெறவேண்டும் என்று தான் தினமும் செபிப்பதாகவும் கூறியுள்ளார், துன்புறும் உக்ரைன் மக்களுக்கு உதவும் தன்னார்வ அமைப்புக்கள், பணியாளர்கள், நிறுவனத்தார் அனைவரையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதி
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதி

உக்ரைன் மக்களின் துயர நிலை 

எதிர்காலக் கனவுகளை விட, நாட்டைக் காக்கும் கனவுடன் தைரியமாக ஆயுதம் ஏந்த வேண்டிய இளைஞர்கள், கணவனை இழந்து துன்புறும் மனைவிகள், கண்ணியத்துடனும் உறுதியுடனும் அமைதியாக தியாகம் செய்பவர்கள், அன்புக்குரியவர்களை பாதுகாக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும் பெரியவர்கள், அமைதியான சூரிய அஸ்தமனத்திற்குப் பதிலாக போரின் இருண்ட இரவில் தள்ளப்பட்டவர்கள், வன்கொடுமைக்கு ஆளானவர்கள்,  இதயங்களில் அதிக துன்பத்தை சுமக்கும் பெண்கள், உடலிலும் உள்ளத்திலும் காயம்பட்ட மக்கள், கடினமான சோதனைகளை எதிர்கொள்பவர்கள் போன்ற அனைவருடனும் பாசத்துடனும் போற்றுதலுடனும் நெருக்கமாக இருப்பதாக கூறியுள்ளார் திருத்தந்தை.

சோகமான காலங்களில் நாட்டை ஆளவும், அமைதிக்கான தொலைநோக்கு முடிவுகளை எடுக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தலைவர்களுக்கு கடமை இருக்கிறது என்று கூறிய திருத்தந்தை, அதிகமான துன்பம் மற்றும் சோகத்தை அனுபவித்தாலும், உக்ரேனிய மக்கள் ஒருபோதும் சோர்வடையவில்லை,  கைவிடப்படவில்லை எனவும், அவர்களை தியாகத்தின் மக்கள் எனவும் குறிப்பிட்டார்.

இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்பட இருக்கும் கிறிஸ்மஸ், திருக்குடும்பம் அனுபவித்த துன்பங்களை எடுத்துரைக்கும் எனவும்,  பிறக்க இருக்கும் கிறிஸ்து மனிதரிடமிருந்து அல்ல கடவுளிடமிருந்து வந்த ஒளி எனவும் பூமியிலிருந்து அல்ல விண்ணகத்திலிருந்து வந்த ஒளி எனவும் எடுத்துரைத்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2022, 12:47