தேடுதல்

உரையாடல் மற்றும், அமைதியின் பஹ்ரைன் திருத்தூதுப் பயணம்

போர்களும் பிரிவினைகளும் நிறைந்துள்ள ஓர் உலகில், உரையாடல் மற்றும், உடன்பிறந்த உணர்வின் திருப்பயணமாக பஹ்ரைன் திருத்தூதுப் பயணம் அமைந்திருந்தது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 09, இப்புதன் காலையில் உரோம் நகரின் காலநிலை அதிகக் குளிரும் அதிக வெப்பமும் இல்லாமல் இதமாக இருந்ததால் இப்புதன் இத்தாலி நேரம் காலை ஒன்பது மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பொது மறைக்கல்வியுரை வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்றது. பொதுவாக, திருத்தந்தையர் வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டு வத்திக்கானுக்குத் திரும்பியபின்னர், அதையடுத்து வருகின்ற புதன் பொது மறைக்கல்வியுரையில் தாங்கள் மேற்கொண்ட அப்பயணம் பற்றிக் கூறுவது வழக்கத்தில் இருந்துவருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், நவம்பர் 06 இஞ்ஞாயிறன்று முடித்துத் திரும்பிய பஹ்ரைன் வளைகுடா நாட்டுத் திருத்தூதுப் பயணம் குறித்த தன் பசுமையான நினைவுகளைத் இப்புதனன்று திருப்பயணிகளிடம் எடுத்தியம்பினார். திருத்தந்தை தன் உரையை இத்தாலியத்தில் தொடங்கியவுடன், ஒரு சிறுவனும் சிறுமியும் திருத்தந்தையின் அருகில் சென்றனர். அவர்களின் தலையை வருடியவாறே அவ்விருவரையும் தன் அருகில் அமரவைத்துக்கொண்ட திருத்தந்தை, வளாகத்தில் அமர்ந்திருந்த திருப்பயணிகளிடம், இச்சிறார் எவ்வித அனுமதியும் கேட்கவில்லை, எவருக்கும் அஞ்சாமல் இங்கு வந்துள்ளனர், இச்சிறாரின் இச்செயல், எவ்வளவு சுதந்திரத்தோடு நாம் கடவுளின் அருகில் செல்லவேண்டும் என்பதை உணர்த்துகின்றது என்றுரைத்து தன் உரையைத் தொடர்ந்தார்.

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்....அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள் (எசா.2:2,4).

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, காலை வணக்கம். மூன்று நாள்களுக்கு முன்னர் பஹ்ரைன் முடியாட்சி நாட்டில் எனது திருத்தூதுப் பயணத்தை முடித்து திரும்பினேன். இந்நேரத்தில் இத்திருத்தூதுப் பயணத்தில் இறைவேண்டலோடு உடன்பயணித்த அனைவருக்கும் நன்றிகூற விழைகின்றேன். எனக்கு இனிய வரவேற்பளித்த பஹ்ரைன் அரசர், அரசு அதிகாரிகள், தலத்திருஅவை அதிகாரிகள், அந்நாட்டு மக்கள், மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோர் போன்ற எல்லாருக்கும் எனது நன்றியை புதுப்பிக்க விரும்புகிறேன். கிறிஸ்தவ நாடுகள் பல இருக்க, இஸ்லாமியரைப் பெரும்பான்மையாகக்கொண்ட இச்சிறிய நாட்டிற்கு திருத்தந்தை ஏன் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார் என்ற கேள்வி உங்களில் எழலாம். அதற்கு, உரையாடல், சந்திப்பு, பயணம் ஆகிய மூன்று சொல்லாடல்களால் பதில்கூற விரும்புகிறேன். அமைதிக்காகப் பணியாற்றும் பல்வேறு மதத் தலைவர்களை ஒன்றிணைத்த உரையாடலுக்கான பன்னாட்டு கூட்டம் பஹ்ரைனில் நடைபெற்றதையொட்டி இத்திருத்தூதுப் பயணமும் இடம்பெற்றது. உண்மையில், உரையாடல் என்பது அமைதியின் பிராணவாயுவாகும். இது, மனங்களையும் இதயங்களையும் சந்திப்புக்குத் திறக்கின்றது. இது, வன்முறை மற்றும், பிரிவினையின் சுவர்களை உடைத்தெறிகின்றது. போர் மற்றும், கலவரங்களால் சிதைந்துபோயுள்ள நம் உலகில், சமய மற்றும், பொதுநலத் தலைவர்களும், நன்மனம்கொண்ட அனைவரும், குறுகிய சுயநல ஆதாயங்களைக் கடந்து தங்கள் பார்வையைச் செலுத்தவும், மனிதக் குடும்பம் அனைத்திற்கும் ஒன்றிப்பு மற்றும், அமைதியைத் தேடவுமான சவாலை எதிர்கொள்கின்றனர். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பஹ்ரைனில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உரையாடல், சந்திப்பு, மற்றும், உடன்பிறந்த உணர்வுள்ள ஒத்துழைப்புக்கு நம்பிக்கையளிக்கும் பயணத்தில், கூடுதலாக ஓர் அடி எடுத்துவைப்பதாக இருந்தது. பஹ்ரைனில் நான் பயணம் மேற்கொண்ட நாள்களில், கிறிஸ்தவத் தலைவர்களோடு இணைந்து அமைதிக்காக இறைவேண்டல் செய்யவும், பஹ்ரைன் மற்றும், ஏனைய வளைகுடாப் பகுதிகளிலிருந்து வந்திருந்த கத்தோலிக்கச் சமுதாயத்திற்குத் திருப்பலி நிறைவேற்றவும் முடிந்தது. ஒருவர் ஒருவரோடு அதிகமாகத் தொடர்புகொள்வதன் வழியாக, நம் உறவு எல்லைகளை விரிவுபடுத்துவோம் என இக்கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டேன். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ முப்பதாயிரம் கத்தோலிக்கர் இத்திருப்பலியில் பங்குபெற்றனர். இக்கத்தோலிக்கர் தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கையை மகிழ்ச்சியோடு சான்றுபகர்வதில் உறுதிப்படுத்தப்பட அரேபியா அன்னை மரியா அவர்களுக்கு உதவுவாராக. அனைத்து மத நம்பிக்கையாளர்களும் அமைதி, புரிந்துணர்வு மற்றும், உடன்பிறந்த உறவுகொண்ட நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான பாதையில் உறுதியாய் நிலைத்திருக்க அவ்வன்னை உதவுவாராக. உடன்பிறந்த உணர்வு, மற்றும், அமைதியின் பயணத்தில் முன்னேறிச் செல்லவேண்டிய தேவை அனைவருக்கும் தேவைப்படுகின்றது. இப்பயணத்தில் நம் அன்னை மரியா நமக்கு உதவுவாராக.   

புதன் மறைக்கல்வியுரை 091122
புதன் மறைக்கல்வியுரை 091122

இவ்வாறு இப்புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனரக போர் ஆயுதங்களால் தாக்கப்படுவதால் கடுந்துன்பங்களை எதிர்கொள்ளும் உக்ரைன் மக்களுக்கு அமைதி கிடைக்குமாறு இறைவனை மன்றாடுவோம் என்று கேட்டுக்கொண்டார். மேலும், தொலைநோக்குப் பார்வை மற்றும், உரையாடலின் மனிதராகிய, 81 வயது நிரம்பிய சைப்ரசின் ஆர்த்தடாக்ஸ் பேராயர் 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்கள் நவம்பர் 07 இத்திங்களன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அவரின் ஆன்மா நிறையமைதி அடையச் செபிப்போம், கடவுள் உங்கள் எல்லாரையும் ஆசிர்வதிப்பாராக என்றுரைத்து, தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார். திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2022, 13:08