தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை பிரான்சிஸ்: அமைதி ஆர்வலர்களாக இருங்கள்

உலகில் 1914 முதல் 1918ஆம் ஆண்டு வரை ஒரு போர், பின்னர், 1939 முதல் 1945ஆம் ஆண்டு வரை இன்னொரு போர், தற்போதைய போர் என ஒரு நூற்றாண்டில் மூன்று உலகப் போர்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகில் 1914 முதல் 1918ஆம் ஆண்டு வரை ஒரு போர், பின்னர், 1939 முதல் 1945ஆம் ஆண்டு வரை இன்னொரு போர், தற்போது உக்ரைன் உட்பட உலகின் பல பகுதிகளில் இடம்பெற்றுவரும் போர் என, ஒரு நூற்றாண்டில் மூன்று உலகப் போர்கள் என்று மிகுந்த வேதனையோடு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பஹ்ரைனில் நான்கு நாள்கள் கொண்ட தனது 39வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நவம்பர் 06 இஞ்ஞாயிறன்று நிறைவுசெய்து உரோம் நகருக்குத் திரும்பிய விமானப் பயணத்தில் தன்னோடு பயணம் செய்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பஹ்ரைனின் மனாமா இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் இஞ்ஞாயிறு காலையில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும், மேய்ப்புப்பணியாளர்களுக்கு ஆற்றிய உரையில், உக்ரைன் மற்றும் எத்தியோப்பியாவில், திருத்தந்தை அமைதிக்கு அழைப்புவிடுத்ததைக் குறிப்பிட்டு கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது, பேரரசுகள் பலவீனமாக உணர்கையில், வலிமையுடையோராய் ஆவதற்குப் போர் தொடுக்கின்றன மற்றும், ஆயுதங்களையும் விற்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய உலகில் இடம்பெறும் மிகப்பெரும் பேரிடர், ஆயுத தொழிற்சாலை என்றும், ஓராண்டுக்கு ஆயுதங்களைத் தயாரிக்காமல் இருந்தால், உலகின் பசியைப் போக்கிவிடலாம் என்று என்னிடம் கூறப்பட்டது, இது உண்மையா என்பது எனக்குத் தெரியாது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்குமுன்னர் ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து இத்தாலியின் ஜெனோவாவுக்கு ஒரு கப்பல் நிறைய ஆயுதம் வந்தது, அவற்றை மற்றொரு பெரிய கப்பலில் ஏமன் நாட்டிற்கு ஏற்றுமாறு பணிக்கப்பட்டதை, ஜெனோவாவிலுள்ள தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர், இது நல்லதோர் அடையாளம் எனவும் திருத்தந்தை பாராட்டினார். 

ஏமனில் சிறாருக்கு உணவு இல்லை, மியான்மாரின் Rohingya இனத்தவர் போரினால் அந்நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர், மியான்மாரில் இடம்பெறுவதும் பயங்கரமானது, என்றுரைத்துள்ள திருத்தந்தை, எத்தியோப்பியாவில் கையெழுத்திடப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தோடு அங்கு போர் நிறுத்தப்படும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு
விமானப் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு

உக்ரைனில் போர் நிறுத்தப்படுவதற்கு, வத்திக்கான், குறிப்பாக திருப்பீடச் செயலகம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது என்றும், பன்னாட்டு உறவுகளின் திருப்பீடச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள் இதற்காக பணியாற்றி வருவதை அறிவேன் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இரஷ்ய மக்கள் மீது தான் கொண்டிருக்கின்ற நன்மதிப்பையும் எடுத்துரைத்துள்ளார்.

இன்றுவரை நமக்கு உள்தூண்டுதலாக இருக்கின்ற இரஷ்யாவின் Dostoevsky அவர்கள், கிறிஸ்தவத்தைப் பற்றி கிறிஸ்தவர்கள் நினைப்பதற்குத் தூண்டுதலாக இருந்து வருகிறார் எனவும் திருத்தந்தை தன் பேட்டியில் குறிபிட்டுள்ளார்.

கெய்ரோவின் அல்-அசார் மசூதியின் பெரிய குரு அல் தாயிப் அவர்களுடன் உள்ள உறவு, புலம்பெயர்ந்தோர் விவகாரம், சிறார்க்கெதிரான உரிமை மீறல் போன்ற தலைப்புகளில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரிவான பதில்களை அளித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2022, 15:51