தேடுதல்

எப்போதும் அன்பு கூரவும்... எல்லோரையும் அன்பு கூரவும்..!

எல்லை கடந்து நாம் எல்லோரையும் அன்பு செய்யும்போது நமது அணுகுமுறைகள், உறவுமுறைகள், எண்ணங்கள், நம்பிக்கைகள் எல்லாமே வித்தியாசம் கொண்டதாக இருப்பதை நாம் உணரமுடியும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் 5, இச்சனியன்று பஹ்ரைன் தேசிய அரங்கத்தில் நிகழ்ந்த திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை. அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, “அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது” (எசா 9:7) என்று இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். வரப்போகும் மெசியா உண்மையில் வல்லமையுள்ளவராக இருப்பார், போர் நடத்தி மற்றவர்களை ஆளும் தளபதியாக அல்ல, மாறாக அமைதியின் அரசராக இருப்பார் என்கின்றார். மெசியாவின் ஆட்சி என்பது வன்முறையிலிருந்து வருவதல்ல, அது உண்மை அன்பிலிருந்து வருவது. இதுதான் கிறிஸ்துவின் வலிமை. இதுதான் கிறிஸ்துவின் அன்பு. கிறிஸ்துவின் பெயரில் நாமும் பிறரை நிபந்தனையற்ற முறையில் அன்பு செய்வதற்கு அதே வலிமையைத் தருகின்றார்.

‘எப்போதும் அன்பு கூரவும்’

‘எப்போதும் அன்பு கூரவும்’, ‘எல்லாரையும் அன்பு கூரவும்’ என்ற இரண்டு கண்ணோடத்தில் இயேசுவின் அன்பு குறித்து நாம் இப்போது சிந்திப்போம்.  முதலாவதாக, எல்லோரையும் அன்பு கூர இயேசு நம்மை அழைக்கிறார் (காண்க மத் 5:38-48). அதாவது, எப்பொழுதும் அவருடைய அன்பில் நிலைத்திருக்கவும், நாம் எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அந்த அன்பை செயல்படுத்தவும் அழைக்கப்படுகிறோம். இதனைச் செயல்படுத்துவது எளிதானது என்று இயேசு கூறவில்லை. அது உண்மையிலேயே சவால் நிறைந்தது. நம் உறவுகளுக்குள் அன்புக்கும் வெறுப்புக்கும் இடையே நாள்தோறும் போராட்டம் நடப்பதை இயேசு அறிந்திருக்கிறார். நம் இதயங்களுக்குள்ளும், ஒளிக்கும் மற்றும் இருளுக்கும் இடையே நாள்தோறும் மோதல் நிகழ்கிறது. நமது பல தீர்மானங்கள் மற்றும் ஆசைகளுக்கு மத்தியில், பாவம் நிறைந்த பலவீனம் நம்மை அடிக்கடி  தீமை செய்ய இழுக்கிறது என்பதையும் இயேசு அறிந்திருக்கிறார். எனவேதான், நமக்குள் மோதல், அடக்குமுறை மற்றும் பகைமை நிறைந்திருக்கிறது என்று இயேசு தெளிவுபடுத்துகிறார்.

இப்படிப்பட்ட தீமைகள் நிறைந்த சூழ்நிலையில், எல்லாவற்றையும் மீறி, எப்போதும், உண்மையான அன்பில் நிலைத்திருக்குமாறு இயேசு தனது சீடர்களிடம் கேட்கின்றார். தீமை செய்பவரை எதிர்க்காமல், பகைவரை அன்பு செய்வதற்கான ஒரு புதிய வழியைத் துணிவுடன் எடுத்துக்காட்டுகிறார். நம்மையே நாம் சீர்தூக்கிப் பார்த்து உலகளாவிய உடன்பிறந்த உணர்வுநிலையை உறுதியாகவும் துணிவுடனும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தீமை நிகழ்ந்தாலும் நன்மையில் விடாமுயற்சியுடன் நிலைத்து நின்று பழிவாங்குதல், ஆயுதப்போக்கை விரும்புதல், இதயத்தில் பகைமையின் உணர்வை வளர்த்தல் ஆகிய தீமையின் சக்தியை உடைத்தெறியவேண்டும் என்றே இயேசு விரும்புகின்றார். நமது வாழ்வில் எப்போதும் கருத்துவேறுபாடுகள், பதட்டமான தருணங்கள், மோதல்கள் மற்றும் எதிரெதிர் கண்ணோட்டங்கள் ஆகியவை இருக்கும், ஆனால் அமைதியின் அரசராகிய இயேசுவைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் அமைதிக்காக உழைக்க வேண்டும். விண்ணகத்தின் கடவுளுக்கு மகிமையைக் கொடுப்பதற்கும் இப்பூமிக்கோளத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் இதுவே இயேசு காட்டும் உன்னதமான வழி என்பதை உணர்வோம்.

‘எல்லோரையும் அன்பு கூரவும்’

இப்போது, ‘எல்லோரையும் அன்பு கூருங்கள்’ என்பது குறித்துச் சிந்திப்போம். அன்பு கூரவேண்டும் என்பது மிகவும் முக்கியம் என்றாலும், நம்மைச் சுற்றியுள்ளோர், நம்முடன் வாழ்வோர் என நமது அன்பு குறுகிய எல்லைக்குள் அடங்கிவிடாமல் நாம் எல்லை கடந்து எல்லோரையும் அன்பு கூர இயேசு நம்மை அழைக்கிறார்.  எல்லை கடந்து நாம் எல்லோரையும் கூரும்போது நமது, அணுகுமுறைகள், உறவுமுறைகள், தொடர்புகள், எண்ணங்கள், நம்பிக்கைகள் எல்லாமே வித்தியாசம் கொண்டதாக இருப்பதை நாம் உணரமுடியும். நாம் இறைத்தந்தையின் அன்பு நிறைந்த குழந்தைகளாகவும், உடன்பிறந்த உணர்வுகொண்ட ஒரு உலகத்தை உருவாக்கவும் விரும்பினால், நம் பகைவர்களையும் கூட அன்பு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். இது உண்மையிலேயே  சவால் நிறைந்தது. நம் விண்ணகத் தந்தை நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். அவ்வாறே நாமும் பகைவர்கள் நண்பர்கள் என எல்லோரிடத்திலும் அன்பு கூரவேண்டும்.

இத்தகைய வழியில் எல்லோரையும் அன்புசெய்யும் திறமையை, மாற்றம் தரும் இயேசுவின் இறைவார்த்தையிலிருந்தும் அவருடைய உடைந்த திருவுடலிலிருந்தும் நாம் பெற்றுக்கொள்கிறோம். இதுவே நமது கிறிஸ்தவ வாழ்வில் நமக்கு நிறைமகிழ்வை அளிக்கிறது. அன்பான சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அனைவரும் இந்த பஹ்ரைன் மண்ணில் அன்பு மற்றும் அமைதியின் விதைகளாக இருப்பதற்காகவும், உடன்பிறந்த உணர்வுநிலைக்கு நீங்கள் மகிழ்வின் சாட்சிகளாக இருப்பதற்காகவும் நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். அரேபியாவின் அன்னையும் இயேசுவின் தாயுமான புனித கன்னி மரியா உங்களின் வாழ்க்கைப் பயணத்தில் உங்களின் வழித்துணையாக இருந்து உங்களை என்றும் பாதுகாப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2022, 14:48