திருவருகைக் காலம், வாழ்வில் கடவுளின் இருத்தலை உணரவைக்கிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
திருவருகைக் காலம், நம் தினசரி வாழ்வில் கடவுளின் இருத்தல் குறித்து எப்போதும் விழிப்பாயிருக்கவும், அவ்வாழ்வில் அவரை வரவேற்கவும், அயர்வுநிலையிலிருந்து விழித்தெழவும் நமக்கு அழைப்புவிடுக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியுள்ளார்.
திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறாகிய நவம்பர் 27, இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவர் நம்மோடு இருப்பதற்கு வருகிறார் என்பதை இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் (மத்.24:37-44) நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று கூறினார்.
இதுவே நம் எதிர்நோக்கின் அடித்தளம் எனவும், உண்மையில், இதுவே நம் வாழ்வின் கடுந்துயரமான நேரங்களில்கூட ஆறுதலளிக்கவேண்டும் எனவும் திருத்தந்தை கூறினார்.
ஆண்டவர் நமக்கு அருகில் இருக்கிறார்
ஆண்டவர் தம்மை நமக்கு நெருக்கமாக வைத்து, அவர் நம் வாழ்வில் எப்போதும் நம்மை சந்திக்கிறார் என்றும், தமது அரவணைப்பில் நம்மை வரவேற்க காலத்தின் முடிவில் அவர் வருவார் என்றும் கூறியத் திருத்தந்தை, ஆண்டவர் நம்மை எவ்வாறு சந்திக்க வருகிறார், மற்றும், அவரை நாம் எவ்வாறு அறிந்து வரவேற்கிறோம்? என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.
ஆண்டவர் நம்மைச் சந்திக்கிறார்
ஆண்டவர் நம் வாழ்வில் எப்போதும் உடனிருக்கிறார் என்பதை அடிக்கடி கேட்கிறோம், ஆனால், ஆண்டவரின் அந்த இருத்தலை வியப்பான மற்றும், புதுமையான அடையாளத்தால் நாம் தேடுவதால், அந்த உண்மையை மறந்துவிடுகிறோம் என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவரின் வருகை நாம் நினையாத நேரத்தில் வரும், மற்றும், நோவா காலத்தில் நடந்ததுபோல, அன்றாட வாழ்வில் சாதாரண வழியில் அவரது வருகை இருக்கும் என்பதை, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு நமக்குச் சொல்கிறார் என்றார்.
நம் தினசரி வாழ்வில் கடவுளின் இருத்தல்
நம் வாழ்வில் மிகச் சாதாரண மற்றும், பொதுவான சூழல்களில் கடவுள் தம்மை மறைத்து வைத்திருக்கிறார், எனவே வியத்தகு நிகழ்வுகளுக்காக காத்திராமல், இந்த உண்மையில் நாம் தொடர்ந்து விழிப்பாயிருக்கவேண்டும் எனவும், தேவையில் ஒருவரை நாம் சந்திக்கும்போது, அல்லது, தினசரி வாழ்வின் சோர்வான தருணங்களின்போதுகூட இது நிகழலாம், அச்சமயத்தில் நம்மை அழைக்கின்ற, நம்மிடம் பேசுகின்ற மற்றும், நம் செயல்களைத் தூண்டுகின்ற அவரைக் காண்கின்றோம் என்று திருத்தந்தை கூறினார்.
ஆண்டவரை அறிய, அவரை வரவேற்க
ஆண்டவரை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும், மற்றும், அவரை வரவேற்க முடியும் என்பதை விளக்கிய திருத்தந்தை, அதற்கு நாம் விழிப்பாயிருக்கவேண்டும், ஆயத்தமாய் இருக்கவேண்டும், தயாராக இருக்கவேண்டும் என இயேசு எச்சரிக்கை விடுக்கிறார் என்றார்.
நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை மக்கள் எதையும் அறியாதிருந்ததுபோல், நம்மிலும் ஆண்டவரின் வருகையை உணராத மற்றும், அதற்கு தயார் நிலையில் இல்லாத ஆபத்து உள்ளது என்றும் கூறியத் திருத்தந்தை, விழிப்பாயிருங்கள் மற்றும், ஆயத்தமாய் இருங்கள் என்று கூறினார்.
நாசரேத்தின் தாழ்மையான மற்றும், மறைந்த வாழ்வில் கடவுளின் இருத்தலை அறியத் தெரிந்த மற்றும், அவரை தன் வயிற்றில் வரவேற்ற புனித கன்னி மரியா நமக்கு உதவுவாராக என்று தன் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்