தேடுதல்

தூய ஆவி தரும் மகிழ்வை அறிவிப்பதில் சோர்வடையவேண்டாம்

கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்றுள்ள நாம் அனைவரும் தூய ஆவியாரைப் பெற்று இறைவாக்கினர்கள் ஆகின்றோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் 6, இஞ்ஞாயிறன்று, மனாமாவிலுள்ள திருஇதய ஆலயத்தில், ஆயர்கள், அருள்பணியாளார்கள், துறவியர், குருமாணவர்கள் மற்றும் மேய்ப்புப் பணியாளர்கள் ஆகியோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்திய இறைவழிபாடு மற்றும் அதனைத் தொடர்ந்து வழங்கிய மூவேளை செப உரை. “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” (யோவா 7:37-38) என்ற இறைவார்த்தை இந்த பஹ்ரைன் நிலம் பற்றி என்னைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. மிகப்பெரிய பாலை நிலத்தில் ஒரு சில இடங்களில் ஊற்றெடுக்கும் தூய்மையான தண்ணீர் பாய்ந்தோடிச் சென்று வளமை சேர்க்கிறது. இதன் அடிப்படையில் மேலோட்டமாகப் பார்த்தால், நமது மனிதநேயம் பல்வேறு வகையான பலவீனங்கள், அச்சங்கள், சவால்கள் மற்றும் தனிப்பட்ட அல்லது சமூகப் பிரச்சனைகளால் வறண்டு கிடக்கிறது. ஆனால், நம் ஆன்மாவின் உள்ளாழத்தில், இதயத்தின் நெருக்கத்தில், தூய ஆவியாரின் அமைதி நிறைந்த நன்னீர் பாய்கிறது என்பதை நாம் உணர முடியும்.

தூய ஆவியார் எப்போதும் நமது வாழ்வை மீட்டெடுக்கின்றார். என்பதை இயேசு நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார். இதுவே அவர் நமக்கு வாக்களிக்கும் புது வாழ்வின் ஊற்று. இதுவே தூய ஆவியாரின் கொடை. இதுவே, நமக்குள் இருக்கும் கடவுளின் மென்மையான, அன்பான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் இருத்தலாக அமைந்துள்ளது. நாம் நமது சொந்த தகுதியால் அல்லது வெறுமனே ஒரு மத நபிக்கையைப் பின்பற்றுவதால் கிறிஸ்தவர்கள் அல்ல, மாறாக  தூய ஆவியாரின் வாழ்வளிக்கும் தண்ணீர் திருமுழுக்கில் நமக்குக் கொடுக்கப்பட்டதால், நாம்  கடவுளின் அன்பான குழந்தைகளாகவும், ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளாகவும், ஒரு புதிய படைப்பாகவும் மாறுகின்றோம். எல்லாமே கடவுளின் அருளிலிருந்து ஊற்றெடுக்கின்றன, அனைத்தும் தூய ஆவியாரிடமிருந்தே வருகின்றன. இதன் அடிப்படையில் தூய ஆவியானவர் அருளும் மூன்று கொடைகள் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். அவைகள் முறையே மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் இறைவாக்குரைத்தல்

தூய ஆவியார் மகிழ்வின் ஊற்று

முதலாவதாக, தூய ஆவியார் மகிழ்வின் ஊற்றாக இருக்கின்றார். நம்மை ஒருபோதும் கைவிடாதவர்தான் தூய ஆவியார். அவர் தனது அமைதி நிறைந்த உடனிருப்பால் நம்மை ஆறுதல்படுத்துபவர், அன்புடன் நம்முடன் பயணிப்பவர், போராட்டங்களிலும் சிரமங்களிலும் நம்மை ஆதரிப்பவர், நமது அழகான கனவுகள் மற்றும் உள்ளத்தின் ஆழமான ஆசைகளை ஊக்குவிப்பவர், மற்றும் வாழ்க்கையின் அதிசயங்களையும் அழகையும் நமக்குத் திறப்பவர். தூய ஆவியார் அருளும் இந்த மகிழ்ச்சியைக் கண்டுணர்ந்து அதனை சமூகத்தில் அனுபவித்த உங்கள் அனைவருக்கும், நான் சொல்வது, இந்த மகிழ்ச்சியைக் காப்பாற்றுங்கள். உண்மையில், இது இன்னும் உங்களில் அதிகமாக வளரட்டும். இந்த மகிழ்வைப் பிறருக்குக் கொடுப்பதன் வழியாகத்தான் அதனை வளர்ச்சியடையச் செய்ய முடியும். கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது இயற்கையாக ஒருவரை ஒருவர் தொற்றிகொள்ளக்கூடியது. ஏனென்றால், மகிழ்வின் நற்செய்தி நம்மைக் கடந்து கடவுளின் அன்பின் அழகைப் பகிர்ந்து கொள்ளச் செய்கிறது. மகிழ்வின் நற்செய்தியை மிகுந்த ஆர்வமுடன் மேய்ப்புப்பணி வழியாகவும், குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கு, மற்றும் அருள்பணித்துவ மற்றும் துறவற வாழ்வுக்கான தேவஅழைத்தல்களை வளர்ப்பதன் வழியாகவும் பரப்புவது முக்கியம். கிறிஸ்தவ மகிழ்ச்சியை நாம் நமக்குள்ளேயே வைத்துக் கொள்ள முடியாது. நம்மைச் சுற்றி அதனை பரப்பத் தொடங்கிய உடனேயே அது பெருகி வளரத் தொடங்கிவிடும்.

தூய ஆவியார் ஒற்றுமையின் ஊற்று

இரண்டாவதாக, தூய ஆவியார் ஒற்றுமையின் ஊற்றாக இருக்கின்றார். தூய ஆவியாரைப் பெறுபவர்கள் அனைவரும் இறைத்தந்தையின் அன்பைப் பெற்று,  அவரது பிள்ளைகளாக்கப்படுகிறார்கள் (காண்க உரோ 8:15-16), மேலும், கடவுளின் பிள்ளைகள் என்பது, ஒருவருக்கொருவர் உடன்பிறந்த உணர்வுநிலை கொண்டோர் என்பதாகிறது. அப்படியென்றால், பிரிவுகள், சண்டை சச்சரவுகள், அவதூறுகள், வதந்திகள் போன்ற ஊனியல்பின் செயல்களுக்கும், சுயநலச் செயல்களுக்கும் இனி இடமளிக்க முடியாது. உலகப் பிளவுகள், மற்றும், இன, கலாச்சார மற்றும் மத வழிபாட்டு வேறுபாடுகள், தூய ஆவியாரின் ஒன்றுபடுத்தும் பண்பை  காயப்படுத்தவோ அல்லது சமரசம் செய்யவோ முடியாது. மாறாக, அவருடைய பற்றியெரியும் தணல் நம்மிடம் துலங்கும் உலக ஆசைகளை சுட்டெரித்து, நமது வாழ்வில் இயேசுவின் கனிவான மற்றும் இரக்கமுள்ள அன்பைத் தூண்டுகிறது.  இந்தத் தூய அன்பின் வழியாகவே நாம் ஒருவரை ஒருவர் அன்பு கூர முடியும். இதன் காரணமாகவே, உயிர்த்த இயேசுவின் ஆவியார் அவரது சீடர்கள் மீது இறங்கியபோது, ​​அனைத்து வகையான சுயநலங்களையும் எதிர்க்கும் வகையில் ஒன்றிப்பு மற்றும் உடன்பிறந்த உணர்வு நிலையின் தோற்றுவாயாக மாறுகிறார். ஆகவே, நமது பல்மத மற்றும் பலசமயக் கலாச்சாரச் சூழல்களில் தூய ஆவியார் அருளும் இந்த ஒன்றிப்பை ஊக்கப்படுத்தி வளர்ப்போம்.

தூய ஆவியார் இறைவாக்குரைத்தலின் ஊற்று

மூன்றாவதாக, தூய ஆவியார் இறைவாக்குரைத்தலின் ஊற்றாக இருக்கின்றார். மீட்பின் வரலாறு முழுவதும் இறைவாக்கினர்களை அடிப்டையாகக் கொண்டு அமைந்துள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம். இறைவாக்கினர்கள் அனைவரும் தூய ஆவியாரிடமிருந்து ஒரு உள் ஒளியைப் பெறுகிறார்கள். இது அவர்களை எதார்த்தத்தின் கவனமுள்ள மொழிபெயர்ப்பாளர்களாக மாற்றுகிறது. வரலாற்றின் தெளிவற்ற போக்கின் மத்தியில் கடவுளின் உடனிருப்பை உணர்ந்து அதை மக்களுக்குத் வெளிப்படுத்தத் தூண்டுகிறது. இறைவாக்கினர்களின் வார்த்தைகள் அடிக்கடி கசப்பானவைகளாக அமைந்திருக்கும். காரணம், அவர்கள் மக்களின் இதயங்களில் பதுங்கியிருக்கும் தீய திட்டங்களை வெளிப்படுத்துகிறார்கள்.  அவர்களின் தவறான மனித மற்றும் மதச் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். மேலும் மக்கள் அனைவரையும் அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைக்கிறார்கள். நமக்குள்ளும் இந்த இறைவாக்குரைக்கும் செயல் இருக்கிறது. கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்றுள்ள நாம் அனைவரும் தூய ஆவியாரைப் பெற்று இறைவாக்கினர்கள் ஆகின்றோம். ஆகவே, நாம் தீமையை வெறுப்பவர்களாகவும், அமைதியை விரும்புபவர்களாகவும் தூய்மையான கரங்களைக் கொண்டர்வர்களாகவும் வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். எல்லா வகையான சுயநலம், வன்முறை மற்றும் சீரழிவுக்கு எதிரான அன்பு, நீதி மற்றும் அமைதி ஆகியவை கடவுளின் இறையாட்சியை அமைதியுடன், ஆனால், உறுதியுடன் கட்டியெழுப்புவதற்கு நமது அன்றாடச் சூழ்நிலைகளில் நற்பேறுகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் திறனை இறைவாக்குரைத்தல் செய்கிறது. அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, உங்கள் ஆன்மிக மற்றும் திருஅவைப் பயணத்தில் நீங்கள் உறுதியுடனும் மகிழ்ச்சியுடனும் நிலைத்திருக்க உங்களை ஊக்குவிக்கிறேன். அரேபியாவின் அன்னையாக விளங்கும் புனித கன்னி மரியா, தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்டு நிறை அன்பிலும் மகிழ்விலும் நம் அனைவரையும் ஒன்றிணைந்திருக்கச் செய்வாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2022, 14:01