புதிய சிற்பத்தைத் திறந்து வைத்தார் திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இயேசு மற்றும் புனித வின்சென்ட் தே பவுல் ஆகியோரின் உள்தூண்டல்கள் மிகுந்த மனத்தாழ்மையுடன் நம்மை பெரிய கனவு காண்பதற்கு வழிகாட்டுகின்றன என்று புனித வின்சென்ட் தே பவுல் சபையின் தலைவர் Tomaž Mavrič கூறியுள்ளார்.
நவம்பர் 09, இப்புதனன்று தனது புதன் மறைக்கல்வி உரையை நிகழ்த்துவதற்கு முன்பு, புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் இல்லமற்றவர்களின் துயர நிலையை எடுத்துரைக்கும் "புகலிடம்" (Sheltering) என்ற பொருள்படும் புதிய சிற்பத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்து வைத்த திருநிகழ்வு குறித்துப பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் Mavrič.
இந்தச் சிற்பத்தின் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த தே பவுல் அனைத்துலக அமைப்பின் FHA ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான Mark McGreevy அவர்கள், இந்தச் சிற்பம் நம்மைச் சுற்றியுள்ள இல்லமற்ற மக்களைப் பற்றி விழிப்புடன் இருக்கத் தூண்டுகிறது என்றும், இந்தப் பிரச்சனையை நாம் தீர்க்க முயல்வதற்கு முன்பு, இது குறித்து நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தச் சிற்பத்தை வடிவமைத்த கனடா நாட்டைச் சேர்ந்த Timothy Schmalz, கடந்த 25 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். உரோம் மற்றும் வத்திக்கானில் உள்ள கோவில்கள் உட்பட உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள பெரிய அளவிலான வெண்கலச் சிற்பங்கள் இவரால் செதுக்கப்பட்டவை. இவரது கலைப்படைப்புகளில் பெரும்பாலானவை இல்லமற்ற நிலை, வறுமை, புலம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட சமூக நீதிக்கான பிரச்சினைகளில் கவனம் செலுத்துகின்றன.
இது உலகளாவிய இல்லமற்றவர்களின் நிலையை வெளிச்சமிட்டுக் காட்டும் விதமாகப் புனித வின்சென்ட் தே சபையின் ‘இல்லமற்ற’ (Homeless Alliance) கூட்டமைப்பின் (FHA) ஒரு முன்முயற்சியாக அமைந்துள்ளது.
நவம்பர் 13, வரும் ஞாயிறன்று, கொண்டாடப்படும் ஏழைகளின் 6வது உலக தினத்திற்குச் சில நாட்களுக்கு முன்னதாகவே இப்புதிய சிற்பம் திருத்தந்தையால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது, இல்லமற்ற ஒருவரை பறக்கும் புறா ஒன்று போர்வையால் மூடுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இரக்கத்தின் யூபிலி ஆண்டுக் கொண்டாட்டத்தின் நிறைவைக் கொண்டாடுவதற்காக இந்நாள் நிறுவப்பட்டது. 2017 முதல், ஒவ்வொரு ஆண்டும் பொதுக்காலத்தின் 33வது ஞாயிற்றுக்கிழமை இந்நாள் சிறப்பிக்கப்படுகிறது. இன்று உலகமனைத்திலும் 120 கோடி பேர் இல்லமற்றவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்