பஹ்ரைன் தீவு நாடு – ஒரு முன்தூது
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான்கு நாள்கள் கொண்ட, தனது 39வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவரும் பஹ்ரைன், மேற்கு ஆசியாவிலுள்ள ஒரு சிறிய தீவு நாடாகும். இம்முடியாட்சி நாடு, பாரசீக வளைகுடாவில், ஐம்பது இயற்கையான தீவுகளையும், 33 செயற்கைத் தீவுகளையும் கொண்டிருக்கின்றது. இத்தீவுகள், அந்நாட்டின் 83 விழுக்காட்டு நிலப்பகுதியைக் கொண்டுள்ளன. கத்தார் நாட்டிற்கும், சவுதி அரேபியாவின் வடகிழக்கு கடற்கரைக்கும் இடையேயுள்ள பஹ்ரைன் நாடு, கடல்வழியாக அமைக்கப்பட்டுள்ள, அரசர் Fahd பாலம் மூலம் சவுதி அரேபியாவோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆசியக் கண்டத்தில், மாலத் தீவுகள் மற்றும், சிங்கப்பூருக்கு அடுத்து பரப்பளவில் மூன்றாவது சிறிய நாடாகவும் பஹ்ரைன் உள்ளது. 2020ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பஹ்ரைனின் 15 இலட்சத்திற்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில், ஏழு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அந்நாட்டு குடிமக்களாவார்கள். இந்நாட்டின் தலைநகரான மனாமா, பெரிய நகரமுமாகும்.
மெசபத்தோமியா மற்றும், சிந்து சமவெளியோடு தொடர்புடைய மிக முக்கியமான, கி.மு.3300லிருந்து கி.மு.1200 வரையுள்ள வெண்கலக் கால வர்த்தக மையமான பழங்கால Dilmun கலாச்சாரத்தைக் கொண்டிருந்த பகுதி பஹ்ரைன். இப்பகுதி, பழங்காலத்திலிருந்து முத்துச்சிப்பிகளை எடுக்கும் தொழிலுக்குப் புகழ்பெற்றிருந்தது. பஹ்ரைன் முதலில் அசீரியர்கள் மற்றும் பபிலோனியர்களால் ஆளப்பட்டு வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகில் மிக சிறந்த முத்து ஆபரணங்கள் கிடைக்கும் இடமாகவும் பஹ்ரைன் இருந்தது. கி.பி.628ஆம் ஆண்டில், இறைவாக்கினர் முகமதுவின் காலத்தில் இஸ்லாம் மதத்தின் நல்தாக்கத்தைக் கொண்டிருந்த பகுதிகளில் ஒன்றாகவும் பஹ்ரைன் விளங்கியது. அராபியர்களின் ஆட்சிக்குப்பின்னர், பஹ்ரைனை போர்த்துக்கீசிய பேரரசு, 1521ஆம் ஆண்டிலிருந்து, Safavid பரம்பரையைச் சேர்ந்த முதலாம் Shah Abbasஆல் வெளியேற்றப்படும்வரை, அதாவது 1602ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தது. 1783ஆம் ஆண்டில் Bani Utbah அராபிய பூர்வீக இனத் தலைவர், பஹ்ரைனை, Nasr Al-Madhkurரிடமிருந்து கைப்பற்றினார். அதிலிருந்து பஹ்ரைனை Al Khalifa அரச குடும்பம் ஆட்சி செய்து வருகிறது. அதன் முதல் தலைவராக Ahmed al Fateh என்பவர் பொறுப்பேற்றார்.
1800களில் பஹ்ரைன் பிரித்தானியர்களோடு மேற்கொண்ட ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, அந்நாடு பிரித்தானியாவின்கீழ் வந்தது. பின்னர் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பஹ்ரைன் சுதந்திரம் அடைந்தது. அமீரகமாக இருந்த பஹ்ரைன், 2002ஆம் ஆண்டில் இஸ்லாமிய முடியாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் அப்பகுதியில் தொடங்கிய அரபு வசந்தத்தால் தூண்டப்பட்டு, அரசுக்கு எதிராகப் போராட்டங்களையும் அந்நாடு எதிர்கொண்டது. பஹ்ரைனில் பெரும்பான்மை மக்கள் ஷியா இஸ்லாம் பிரிவைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், பஹ்ரைனை ஆட்சிசெய்யும் அரசர் அல் கலீஃபாவின் குடும்பம் சுன்னி இஸ்லாம் பிரிவைச் சார்ந்தது. அந்நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
பாரசீக வளைகுடாப் பகுதியில் எண்ணெய்வளப் பொருளாதாரத்தை முதலில் வளர்த்த நாடு பஹ்ரைன் ஆகும். அதன் பயனாக, பஹ்ரைனில் வங்கிகள் மற்றும், சுற்றுலாத்துறை வளப்படுத்தப்பட்டன. உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ளன. மனிதவள மேம்பாடு குறியீட்டில் பஹ்ரைன் 35வது இடத்தில் உள்ளது. பொருளாதார வருவாயை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடாக, பஹ்ரைனை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இந்நாடு, ஐக்கிய நாடுகள் நிறுவனம், அணிசேரா நாடுகள் அமைப்பு, அரபு கூட்டமைப்பு, இஸ்லாமிய ஒத்துழைப்பு மற்றும், வளைகுடா ஒத்துழைப்பு அவை ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.
பெயர் காரணம்
Bahrayn என்பதற்கு "இரு கடல்கள்" என்று அர்த்தமாகும். ஆயினும் "இது கடலுக்குரியது" என்பதே பஹ்ரைன் என்பதற்குச் சரியான அர்த்தம் என்று மத்தியகால இலக்கணயியலாளர் ஜவஹரி அவர்கள் கூறியிருக்கிறார். இந்த அர்த்தம் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளதால் இது பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இக்காலத்தில் பஹ்ரைனின் "இரு கடல்கள்" என்பவை, அத்தீவின் கிழக்கு மற்றும் மேற்கு வளைகுடாவும், வடக்கு மற்றும், தெற்கு கடலும் ஆகும். இக்கடலின் மேற்பகுதி தண்ணீர், உப்பாகவும், தரைப்பகுதி தண்ணீர், நந்நீராகவும் உள்ளன. பஹ்ரைனின் வடக்கு கடலில் உப்புத்தண்ணீருக்கு மத்தியில் நீர்க்குமிழிகளாக நல்ல தண்ணீர் வருகிறது. இது சுற்றுலாப் பயணிகளால் அதிகம் நோக்கப்பட்டு வருகிறது. மத்திய காலம் வரை பஹ்ரைன் என்பது, தென் ஈராக், குவைத், அல்ஹாசா, கத்திப், மற்றும் பஹ்ரைனை உள்ளடக்கிய கிழக்கு அரேபியா பகுதி என்று கருதப்பட்டது.
பஹ்ரைனின் வளங்கள், பல்லுயிரினங்கள்
பஹ்ரைனில் எண்ணெய், எரிவாயு மற்றும் மீன் ஆகிய வளங்கள் அதிகம். அந்நாட்டின் மொத்த பரப்பளவில் ஏறத்தாழ 92 விழுக்காடு பாலைநிலமாக, பஞ்சமும், தூசிப் புயலும் அடிக்கடி ஏற்படுகின்றது. 2.8 விழுக்காட்டுப் பகுதியே வேளாண்மைக்கு ஏற்றதாகும். கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும். பஹ்ரைன் தீவுக்கூட்டங்களில் 330க்கும் மேற்பட்ட பறவையினங்கள் வாழ்கின்றன. அவற்றில் 26 இனங்கள், அந்நாட்டிலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர் காலத்தில் இலட்சக்கணக்கான பறவைகள் பாரசீக வளைகுடா வழியாக கடந்துசெல்கின்றன. 18 வகையான பாலூட்டிகள் மட்டுமே பஹ்ரைனில் உள்ளன.
பஹ்ரைனில் திருஅவை
பொதுவாக முஸ்லிம்களே பெரும்பான்மையினராக உள்ள அரபு நாடுகளில் கிறிஸ்தவர்கள், பெரும்பாலும் வெளிநாட்டவர்களாகவே உள்ளனர். பஹ்ரைன் வளைகுடா நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. 1930களில் பஹ்ரைனில் பெட்ரோலிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்களும், தொழிலாளர்களும், தூதரக அலுவலகர்களும் குடியேறத் தொடங்கினர். அதிலிருந்து அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முதலில் அந்நாட்டிற்கு அருகிலுள்ள மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கத்தோலிக்கர் குடியேறத் தொடங்கினர். ஆயினும் அந்நாடு இருக்கும் பகுதியில் எண்ணெய் வளம் அதிகரித்தற்குப்பின்பு ஆசிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் அந்நாட்டில் வேலைசெய்வதற்காகச் சென்றனர். அதன் பயனாக தற்போது பஹ்ரைனில் ஏறத்தாழ எண்பதாயிரம் கத்தோலிக்கர் உள்ளனர்.
பஹ்ரைனில் கத்தோலிக்க சமுதாயம்
இப்போது பஹ்ரைன் மக்கள் தொகையில் எழுபது விழுக்காட்டினர் முஸ்லிம்கள். ஏறத்தாழ 15 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இக்கிறிஸ்தவர்களில் அதிகமானோர் வேலை செய்யும் நோக்கத்தில் அந்நாடு சென்ற வெளிநாட்டவர் ஆவார்கள். இவர்களில் பெரும்பான்மையினோர், ஈராக், துருக்கி, சிரியா, லெபனோன், எகிப்து, பாலஸ்தீனம், ஜோர்டன், இலங்கை, இந்தியா, பிலிப்பீன்ஸ் மற்றும், சில மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதேநேரம், வளைகுடா நாடுகளில், அந்நாடுகளையே பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்தவர்கள் உள்ள சில நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று. இந்நாடு யூதர்கள் மற்றும் இந்துக்களையும் ஏற்றுள்ளது. எனவே இந்நாடு சமய சகிப்புத்தன்மைக்கு ஒரு பழமையான மரபையும் கொண்டிருக்கிறது.
சமய சகிப்புத்தன்மை
பஹ்ரைனில் இஸ்லாம் அதிகாரப்பூர்வ மதமாகவும், ஷாரியா இஸ்லாமியச் சட்டத்தை அடிப்படையாகக்கொண்ட சட்ட அமைப்பும் இருந்தபோதிலும், கிறிஸ்தவ மற்றும், ஏனைய. மதத்தவருக்கு வழிபாட்டுச் சுதந்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்நாட்டில் ஷியா மற்றும், சுன்னி இஸ்லாம் மதப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு இடையே தொடர்ந்து பதட்டநிலைகள் இருந்தபோதிலும் அந்நாடு சமய சகிப்புத்தன்மை, மற்றும், பல்சமய உரையாலுக்குத் திறந்தமனமும் கொண்டிருக்கிறது. இதற்கு அந்நாட்டிலுள்ள இரு கத்தோலிக்க ஆலயங்கள் உட்பட முஸ்லிம் அல்லாத மதத்தவர்க்கு பல வழிபாட்டுத்தலங்கள் உள்ளதே சான்றாகும்.
முதல் கத்தோலிக்க ஆலயம்
வளைகுடாப் பகுதியில் இந்நவீன காலத்தில் முதல் கத்தோலிக்க ஆலயம் பஹ்ரைனில் கட்டப்பட்டது. அதுவே 1939ஆம் ஆண்டில் மனாமாவில் கட்டப்பட்ட திருஇதய ஆலயமாகும். அண்மை ஆண்டுகளில் அவாலி மாநகராட்சியில் 9,000 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டாவது ஆலயம் கட்டப்பட்டது. 2013ஆம் ஆண்டில் பஹ்ரைன் அரசர் Hamad bin Isa al-Khalifa அவர்கள் அவ்வாலயம் கட்டுவதற்கு நிலத்தை வழங்கினார். இந்த அரேபிய நமதன்னை பேராலயம் அப்பகுதியிலுள்ள மிகப் பெரிய ஆலயமாகும். இப்பேராலய அடிக்கல்லுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவின் செங்கல் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், திருப்பீடத்திற்கும் பஹ்ரைனுக்கும் இடையே தூதரக உறவுகளும் நல்ல நிலையில் உள்ளன.
பஹ்ரைன் அரசர் மற்றும், தலத்திருஅவையின் அழைப்பின்பேரில் அந்நாடு சென்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம், அமைதி, உடன்பிறந்த உணர்வு, பல்சமய உரையாடல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. இந்நோக்கத்தோடு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபிப்போம். எகிப்து, ஈராக், கஜகஸ்தான், அஜர்பைஜான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு திருத்தந்தை ஏற்கனவே திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பஹ்ரைனுக்கு திருத்தந்தை ஒருவர் சென்றிருப்பது இதுவே முதன்முறையாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்