தேடுதல்

ஒற்றுமை மற்றும் சான்று வாழ்வின் அவசியம்

கடவுளைப் போற்றிப் புகழ்வதில் ஒற்றுமை உணர்வுடனும், பிறரன்புச்செயல்களில் சான்றுள்ள வாழ்வையும் உறுதிப்படுத்தி, ஒற்றுமை மற்றும் சான்று வாழ்வு இரண்டும் வாழ்க்கைக்கு மிக அவசியம் என்பதை உணர்ந்துகொள்வோம். திருத்தந்தை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ உட்பட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளோடு உலகின் அமைதிக்காக பஹ்ரைனின் அவாலியிலுள்ள அரேபியாவின் நமதன்னை பேராலயத்தில்  இறைவேண்டல் செய்த திருத்தந்தை ஒற்றுமை சான்று வாழ்வு பற்றிய மறையுரையை அங்கு கூடியிருந்த்த மக்களுக்கு வழங்கினார்.

"பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே!” என்றனர்.” (திருத்தூதர்பணிகள் 2:9-11).

அன்பான சகோதர சகோதரிகளே, இந்த இறைவார்த்தைகள் இன்று நமக்காக எழுதப்பட்டதாகத் தெரிகிறது. பல மொழி பேசும் மக்கள், இடம், வெவ்வேறு சடங்குகள், கடவுளின் மகத்தான செயல்கள் போன்றவற்றால் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். எருசலேமில், பெந்தக்கோஸ்து நாளில், சீடர்கள் பல இடங்களிலிருந்து வந்திருந்தாலும், அனைவரும் ஒரே ஆவியில் ஒன்றுபட்டதாக உணர்ந்தனர். பல்வேறு வகையான தோற்றமும் மொழிகளும் பிரச்சனை அல்ல, வளம் என்பதை உணர்ந்து நாம் இங்கு ஒன்றாகக் கூடியிருக்கின்றோம்.

செப வழிபாட்டில்திருத்தந்தை
செப வழிபாட்டில்திருத்தந்தை

ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நாம் எல்லாரும்  (1கொரி12:13). எதிர்பாராத விதமாக நம்முடைய பிரிவுகளால், இயேசுவின் புனித உடலைக் காயப்படுத்துகின்றோம். ஆனாலும் எல்லா உறுப்புகளையும் ஒன்றாக இணைக்கும் தூய ஆவியானவர், நம்முடைய பிரிவுகளை விட பெரியவர் என்பதை உணர்ந்து நம்மை ஒன்றுபடுத்துவது நம்மைப் பிரிப்பதை விட அதிகமாக உள்ளதா என்பதையும், ஆவியின் தூண்டுதலின்படி பயணிக்கிறோமா இல்லை நம் சொந்த ஆசைக்கு இட்டுச் செல்லப்படுகின்றோமா என்றுக் கண்டறிய முயலுவோம். கடவுளின் உதவியால், நம்மிடையே முழுமையான ஒற்றுமையை மீட்டெடுப்போம்.

பெந்தக்கோஸ்துப் பற்றித் தியானிக்கும்போது, ​​​​நமது ஒற்றுமை பயணத்திற்கு உதவியாகத் தோன்றும் இரண்டு விஷயங்களான வேற்றுமையில் ஒற்றுமை மற்றும்  சான்றுள்ள வாழ்வுப் பற்றிக் கூறவிரும்புகின்றேன்.

பன்முகத்தன்மையில் ஒற்றுமை.

பெந்தெகொஸ்தே நாளில், ஒரே இடத்தில் ஒன்றாக கூடிஇருந்த சீடர்கள் ஒவ்வொருவர் மீதும் தூயஆவி  தங்கியிருந்தார். அவர்கள் தனித்தனியாக கடவுளை வணங்கும்போதோ, பிறருக்கு நன்மை செய்யும்போதோ, தூய ஆவி வரவில்லை. மாறாக அவர்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்தபோது, ​​தூய ஆவி ஆற்றலால் அவர்களை நிறைத்தார். இதனால் கடவுள் பணிக்கான கதவுகள் அகலமாக அவர்களுக்குத் திறக்கப்பட்டன. கடவுளின் அற்புதமான செயல்கள் நம் மத்தியில் இவ்வாறு நிறைவேற்றப்பட கிறிஸ்தவ மக்களாகிய நாம் ஒன்று சேர அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் சிறிய மந்தையாகிய பஹ்ரைன் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளவும், ஒற்றுமையின் அவசியத்தை உணரவும் உதவுகின்றது. இந்தத் தீவுக்கூட்டத்தில் தீவுகளுக்கு இடையே இருக்கும் உறுதியான இணைப்பு நம்மிடையே இருக்கவும், தனிமைப்படுத்தப்படாமல், உடன்பிறந்த உறவோடும் ஒன்றுபடுவோம். கடவுளைப் போற்றிப்புகழ்வதனால் தூய ஆவி நம்மில் ஒற்றுமையை வளர்க்க உதவுகின்றார். கிறிஸ்தவர்களின் ஒருமைப்பாட்டின் அடையாளமாம் கடவுளைப் போற்றிப் புகழ்வதில் விடாமுயற்சியுடன் இருக்கமுயல்வோம். ஒற்றுமை என்பது ஒரே மாதிரியான தன்மையை அல்ல மாறாக பன்முகத்தன்மையைத் தழுவி, நமது வேறுபாடுகளுடன் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதையே வலியுறுத்துகின்றது. இது   கிறிஸ்தவ வாழ்வுப்பயணத்தின் ஆற்றலாகவும் திகழ்கின்றது.

அரேபிய அன்னை ஆலயத்தில் கூடியிருந்தோர்
அரேபிய அன்னை ஆலயத்தில் கூடியிருந்தோர்

சான்று வாழ்வு.

பெந்தக்கோஸ்து நாளில், தூய ஆவியின் அனுபவம் தொடக்க கால கிறிஸ்தவர்களான  திருத்தூதர்களை உலகிற்குச் செல்லவும், கிறிஸ்துவின் சாட்சிகள் என்பதை வார்த்தைகளை விட செயலில் வெளிப்படுத்தவும் வழிவகுத்தது. கிறிஸ்தவ நம்பிக்கை, உரிமை கேட்டுப்பெறவேண்டிய சலுகை அல்ல, மாறாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய பரிசு. கிறிஸ்தவர்களின் அடையாளம், அடிப்படை சான்றுவாழ்வு என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். கிறிஸ்தவர்கள் "குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் வாழ்வதில்லை, வித்தியாசமான மொழியைப் பயன்படுத்துவதில்லை, மாறாக வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் அனைவரையும் அன்பு செய்து அவர்கள் வாழ்கின்ற பகுதியே தாய் நாடாகக் கருதுபவர்கள்.  பஹ்ரைனில் வசிக்கும் உங்களில் பலர் பிற இடங்களிலிருந்து வரும் சகோதர சகோதரிகளுக்கு உங்களின் பொறுமை, மகிழ்ச்சி, சாந்தம், இரக்கம் மற்றும் உரையாடல் மனப்பான்மை ஆகியவற்றால் செய்யும் பணிகளால் கிறிஸ்துவின் உடனிருப்பை  சான்றுவாழ்வாக வெளிப்படுத்துகின்றீர்கள் .

அமைதி.

ஒற்றுமை கடவுளைப் போற்றிப் புகழ்வதை பலப்படுத்துகின்றது. சான்றுவாழ்வு,  நாம் செய்யும் பிறரன்புச் செயல்களை உறுதிப்படுத்துகிறது. ஒற்றுமை மற்றும் சான்று வாழ்வு இரண்டும் வாழ்க்கைக்கு மிக  அவசியம். அன்பின் கடவுள் விருப்பத்திற்கு ஏற்ப நாம் நமக்குள் ஒன்றுபட்டால் மட்டுமே,  நாம் அவருக்கு உண்மையான  சாட்சிகளாக இருக்க முடியும்.  நம் நலன்கள் மற்றும் நமது சமூகங்களின் எல்லைகளை விரிவுபடுத்தாமல், சான்றுவாழ்வு வாழாமல், ஒற்றுமையாக இருக்க முடியாது. ஒவ்வொரு மொழி பேசுபவரையும் தூய ஆவி ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் சான்று வாழ்வு வாழ இவ்வுலகிற்கு அனுப்புகிறார். நமது இந்த பயணத்தை கடவுளிடம் ஒப்படைப்போம், நமது ஒற்றுமை மற்றும் அமைதிப் பயணத்தின் வேகத்தை அதிகப்படுத்தவும், புதிய பெந்தக்கோஸ்து நாளில் அவருடைய ஆசீர் நம்மீது அதிகமாக பொழியச் செய்யவும் அருள்வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2022, 12:25