தேடுதல்

அருள்பணி Sabino Maffeo சே.ச. அருள்பணி Sabino Maffeo சே.ச. 

100வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் அருள்பணி சபினோவுக்கு வாழ்த்து

நூறு வயது காணும் அருள்பணி சபினோ அவர்கள் வத்திக்கான் வானொலியில் தொழில்நுட்பத் துறையின் தலைவராக (1973–1985) 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 01, இச்செவ்வாயன்று தனது நூறாவது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் இயேசு சபை அருள்பணி Sabino Maffeo அவர்களுக்கு தன் நல்வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணி சபினோ அவர்கள், அனைவரையும் அன்புகூரவும், பணியாற்றவுமென இயேசு சபையில் சேர்ந்து, இச்செவ்வாயன்று 85 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார் என்றும், இவர் தன் நீண்ட கால வாழ்வில், திருப்பீடத்தோடு சில சிறப்பான தொடர்புகளை வைத்திருந்தார் என்றும், உரோம் இயேசு சபை மாநிலத்தின் தலைவராகவும் (1968–1973) பணியாற்றி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணி சபினோ அவர்கள், வத்திக்கான் வானொலியில் தொழில்நுட்பத் துறையின் தலைவராக (1973–1985) 12 ஆண்டுகள், பின்னர் காஸ்தெல் கந்தோல்ஃபோவில் அமைந்துள்ள வத்திக்கான் வானியியல் ஆய்வு மையத்தில், வரலாறு மற்றும், காப்பகப் பொறுப்பாளராக (1985–2017) பணியாற்றியதையும் திருத்தந்தை பாராட்டியுள்ளார்.

அருள்பணி சபினோ அவர்கள், இறைவனின் கரங்களில் பிரமாணிக்கமுள்ள கருவியாக, மிகுந்த மகிழ்ச்சி, பிறரன்பு மற்றும், சேவையுணர்வோடு பணியாற்றியவர் என்று கூறியுள்ள திருத்தந்தை, உரோம் இயேசு சபையினரின் புனித பீட்டர் கனிசியோ இல்லத்தில் திருஅவை, மற்றும், இயேசு சபைக்காகச் செபித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

அருள்பணி சபினோ அவர்களை, தனக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் அன்னை மரியா வழியாக இறையருளை இறைஞ்சி தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளிப்பதாக, தன் வாழ்த்துச் செய்தியை முடித்துள்ளார்.

அருள்பணி சபினோ அவர்கள், 1922ஆம் ஆண்டு இத்தாலியின் நேப்பிள்ஸ் நகருக்கருகில் Somma Vesuvianaவில் பிறந்தார். இவர், தனது 15வது வயதில் 1937ஆம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்தார். உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும், இறையியல் கல்வியை முடித்து, 1953ஆம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருப்பொழிவுசெய்யப்பட்டார். இவர் 1957ஆம் ஆண்டில் உரோம் மற்றும், பிளாரன்ஸ் பல்கலைக்கழகங்களில் இயற்பியலில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2022, 14:57