நவம்பர் 13, 2022: 6வது உலக வறியோர் நாள்
மேரி தெரேசா: வத்திக்கான்
வறியோர், என்றென்றுமுள்ள ஒரு வாழ்வுக்கு நமக்கு உறுதிகூறுகின்றனர், அன்பில் செல்வராய் மாறுவதற்கு அவர்கள், ஏற்கனவே நமக்கு உதவிவருகின்றனர், நாம் எதிர்த்துப் போராடவேண்டிய மிக மோசமான வறுமை, நம்மிடம் அன்பு இல்லாத வறுமையே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 12, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.
நவம்பர் 13, இஞ்ஞாயிறன்று 6வது வறியோர் உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதை மையப்படுத்தி, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 13, இஞ்ஞாயிறு, உரோம் நேரம் காலை பத்து மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆறாவது வறியோர் உலக நாள் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார்.
கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறாகிய, திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலம் 33வது ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில் வறியோர் உலக நாள் 2017ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு
மேலும், வீடற்றவர், புலம்பெயர்ந்தோர், கைவிடப்பட்ட வயதுமுதிர்ந்தோர் போன்றோருக்கு உதவிவருகின்ற உலகளாவிய சான் எஜிதியோ கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, இவ்வறியோர் உலக நாளை, உலகில் துயருறும் அனைவரோடும் சிறப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மற்றும், அது உருவாக்கியுள்ள பொருளாதாரப் பாதிப்புக்களால், மக்கள் தங்களின் வாழ்வில் கடுந்துயர்களை எதிர்கொண்டுவரும் இக்காலக்கட்டத்தில், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, இம்மக்களோடு தன் தோழமையுணர்வை வெளிப்படுத்தும் பல்வேறு திட்டங்களால் இவ்வுலக நாளைச் சிறப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பங்கெடுக்கும் மதிய உணவில் ஏறத்தாழ நூறு ஏழைகளோடு இவ்வமைப்பும் கலந்துகொள்ளும் என்றும், இஞ்ஞாயிறன்று, இத்தாலி உட்பட ஐரோப்பா, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, மற்றும், ஆசியாவின் பல நகரங்களில் இவ்வமைப்பினர் கைவிடப்பட்ட வயதுமுதிர்ந்தோருடன் வறியோர் உலக நாளைச் சிறப்பிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்