16ஆம் பெனடிக்ட் ஒரு சிறந்த சீர்திருத்த சிந்தனையாளர்: திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருஅவையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் ஆன்மிக உடனிருப்பும் செப உதவியும் மிகப்பெரும் துணையாக இருக்கின்றன என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 1, இவ்வியாழன்று, Ratzinger விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற கர்தினால்கள், ஆயர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மாநிலப் பிரதிநிதிகளிடம் உரையாற்றியபோது இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை பெனடிக்ட் உடனான தனது தனிப்பட்ட உடன்பிறந்த உணர்வு கொண்ட சந்திப்புகள் அளவில்லாமல் தொடர்கின்றன என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவரது இறையியல் பணியின் பங்களிப்பு, மற்றும், பொதுவாக அவரது சிந்தனையின் பங்களிப்பும் தொடர்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு இத்தருணம் முக்கியமானதாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் தொடங்கப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவை அண்மையில் நாம் நினைவு கூர்ந்தோம். அதில் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒரு நிபுணராகப் பங்கேற்றார் மற்றும் சில ஆவணங்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார் என்றும், பின்னர் புனித இரண்டாம் ஜான் பால் அவர்களுடன் உடனிருந்து உலகளாவிய திருஅவையின் மேய்ப்புப் பணியாளராக அதனை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு அவர் அழைக்கப்பட்டார் என்றும் பெருமிதத்துடன் அவரை நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவைச் சார்ந்த ஆவணங்களை ஆழமாகப் படித்தறிவதற்குப் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் நமக்குப் பெரிதும் உதவியுள்ளார் என்றும், தொடர்ச்சியான இறையியல் சீர்திருத்தம் ஒன்றையும் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளார் என்றும் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கல்வி மற்றும் கற்பித்தல் ஆகிய துறைகளில் அருள்தந்தை Michel Fédou மற்றும் பேராசிரியர் Weiler ஆற்றிய குறிப்பிடத்தக்கப் பணிகளுக்காக அவர்களுக்கு அங்கீகாரம் வழங்க இன்று நாம் கூடியுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவை வெவ்வேறு துறைகளாக இருப்பினும், இரண்டும் Joseph Ratzinger-ஆல் உருவாக்கப்பட்டது என்றும், அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த விருதுகள், நன்கு தகுதியான அங்கீகாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, அர்ப்பணிப்பு, படிப்பு மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கையின் உயர்படிப்பினைகளை வழங்குகின்றன என்றும், இது அனைவரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்ற நமது பேரார்வத்தைத் தூண்டுகிறது என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விழாவில் அருள்பணியாளர் Michel Fédou மற்றும் பேராசிரியர் Joseph Halevi Horowitz Weiler ஆகிய இருவருக்கும் Ratzinger விருது வழங்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்