குரலற்றவர்களின் குரலாக இருங்கள் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சமூகத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்களைப் பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் வழியாக, தூதரக உறவுகளுக்கான உங்களின் பணிகள், நமது உலகின் இருள்படர்ந்துள்ள பகுதிகளில் ஒளி ஏற்றவும், விளிம்புநிலையில் உள்ளவர்களை மைப்பகுதிக்குக் கொண்டுவரவும், குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கவும் உதவுட்டும் என்று தூதரக அதிகாரிகளிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 15, இவ்வியாழனன்று பணி நியமன ஆவணங்களை வழங்குவதற்காக வந்த பெலிஸ், பஹாமஸ், தாய்லாந்து, நார்வே, மங்கோலியா, நைஜர், உகாண்டா மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்த புதிய தூதரக அதிகாரிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துலக மக்களின் நலனைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் பாடுபடும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுப் பணியில், குறிப்பாக உலக நலவாழ்வுடன் தொடர்புடைய தொடர்ச்சியான பிரச்சினைகள் மற்றும் உலகெங்கினும் வன்முறை மோதல்கள் வேரூன்றியுள்ள இந்த நாள்களில், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளும் தூதரக உறவுப் பணிகளும் முன்னெப்போதையும் விட அதிகமாகத் தேவைப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகவே, நீங்கள் இல்லாமல் அனைத்து மக்களின் மாண்பையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கவும், நீடித்த அமைதிக்காக நீதி, நல்லிணக்கம் மற்றும் உரையாடலை மேம்படுத்தவும், நமக்காகவும் எதிர்கால தலைமுறையினருக்காகவும் நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைப் பேணிக்காக்கவும் முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏழைகள், நோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் இளையோர், குறிப்பாக பெண்குழந்தைகள், தங்கள் திறனை உணர்ந்து கொள்வதற்கான போதிய வாய்ப்புகள் அடிக்கடி வழங்கப்படாதவர்கள், சமூகத்தில் மறக்கப்பட்டோர் அனைவரும் முழுமையாக பங்கேற்பதிலிருந்து விலக்கிவைக்கப்படும் பேராபத்தில் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பணியாளர்களாய் வாழ்ந்திடவேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்