தேடுதல்

இத்தாலிய தீயணைப்புப் படைவீரர்கள்  சந்திப்பு இத்தாலிய தீயணைப்புப் படைவீரர்கள் சந்திப்பு 

திருத்தந்தை: நல்ல சமாரியரின் முன்மாதிரிகையைப் பின்பற்றுங்கள்

தேவையில் இருப்போருக்கு உதவுவதற்கு தங்களையே அர்ப்பணித்துள்ள தீயணைப்புப் படைவீரர்கள், இயேசுவின் அன்புக்கட்டளையை காணக்கூடிய முறையில் வெளிப்படுத்தும் நல்ல சமாரியர் உவமையைப் பிரதிபலிக்கின்றனர் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

பேரிடர்கள் மற்றும், ஆபத்துக்கள் நிறைந்த சூழல்களில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பதற்கும், சமூகங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தங்களின் பாதுகாப்பையும் பொருட்படுத்தாது, மிகுந்த அர்ப்பணத்தோடு தன்னலமற்ற சேவையாற்றிவரும் தீயணைப்புப் படைவீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

டிசம்பர் 10, இச்சனிக்கிழமை நண்பகலில் வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்தாலிய தீயணைப்புப் படைவீரர்கள் மற்றும், அவர்களின் குடும்பத்தினர் என ஏறத்தாழ மூவாயிரம் பேரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் இத்தாலியின் இஸ்கியாத் தீவில் இடம்பெற்ற பெருவெள்ளம் உட்பட, நாட்டில் இடம்பெறும் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது அவர்கள் ஆற்றிவரும் சேவைகளுக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.   

தீயணைப்புப் படைவீரர்களின் பணிகளை கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அவர்கள் நல்ல சமாரியர் உவமையைப் பிரதிபலிக்கின்றனர் என்றும், அதிகத் தேவையில் இருப்போரைக் காணும்போது புறக்கணிப்பு அல்லது கடின இதயத்தை வெளிப்படுத்தும் பலர் மத்தியில், தன்னலம் பாராது உதவிசெய்யுமாறு நல்ல சமாரியர் நமக்குக் கற்றுத் தருகிறார் என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை.

இத்தாலிய தீயணைப்புப் படைவீரர்கள்  சந்திப்பு
இத்தாலிய தீயணைப்புப் படைவீரர்கள் சந்திப்பு

கடவுளின் பரிவன்பு மற்றும், கனிவை வெளிப்படுத்துகின்ற நல்ல சமாரியர், உடன்பிறந்த உணர்வாலே சிறந்ததொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் எனக் கூறுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, நற்செய்தி விழுமியங்களில் வேரூன்றியவர்களாய்,  தோழமையுணர்வின் நீண்டகால மரபைக் கொண்டிருக்கும் இத்தாலிய சமுதாயம் அதனைத் தொடர்ந்து காக்குமாறு கேட்டுக்கொண்டார்.

உடனிருப்பு, பரிவன்பு, கனிவு, சேவை, உடன்பிறந்த உணர்வு ஆகிய விழுமியங்களை ஒன்றுசேர வெளிப்படுத்தும் கிறிஸ்மஸ் பெருவிழா அண்மித்து வருகிறது என்றும், தீயணைப்புப் படைவீரர்கள் ஆற்றுவதுபோன்று, நம்மைப் போல் மனிதராகப் பிறந்த இறைமகன் இயேசுவும் ஆபத்தில் நம்மைக் காப்பாற்றி மீட்பளிக்கிறார், அவர் மனித சமுதாயத்தின் நல்ல சமாரியர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

தீயணைப்புப் படைவீரர்களின் மதிப்புமிக்க சேவைக்கு மீண்டும் நன்றி சொல்வதாக உரைத்த திருத்தந்தை,   தன் உறவினரான எலிசபெத்துக்கு உதவிசெய்ய விரைந்துசென்ற கன்னி மரியாவை முன்மாதிரிகையாக இருப்பாராக எனவும், இவர்களின் பாதுகாவலரான புனித பார்பராவின் பரிந்துரையை இவர்கள், மற்றும், இவர்களின் குடும்பங்களுக்காகவும் வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2022, 14:23