தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

உள்ளார்ந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு குடும்பம் – திருத்தந்தை

நன்றியுணர்வின் வெளிப்பாடாக கடவுள் தரும் அன்பளிப்பாக குடும்பத்தின் மகிழ்ச்சி வெளிப்படுகின்றது. - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

குடும்ப வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, வேதனை, கடினமான சூழல் போன்றவற்றைக் கொண்டிருந்தாலும் குடும்பமாக ஒன்றிணைந்து இருப்பதில் உள்ளார்ந்த மகிழ்ச்சியைக் கொண்டுள்ளது எனவும், இதற்காக உழைக்கும் அமைப்பின் குரல், செயல்பாட்டின் குரலாக ஒலிக்கின்றது எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

டிசம்பர் 02, வெள்ளியன்று வத்திக்கானின் புனித கிளமெந்தினா அறையில் இத்தாலிய குடும்ப சங்கங்களின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 300 பேரை சந்தித்துப் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள், மகிழ்ச்சி, துன்பம், வருத்தம் போன்றவற்றைக் கொடுத்தாலும், நன்றியுணர்வின் வெளிப்பாடாக கடவுள் தரும் அன்பளிப்பாக குடும்பத்தின் மகிழ்ச்சி வெளிப்படுகின்றது எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

கடவுள், முன்னோர், பெற்றொர் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கும் மகிழ்ச்சியின் இடமாக குடும்பங்கள் திகழ்கின்றன என்றும், அம்மகிழ்ச்சியில் நிலைக்க நிலையான மாதிரியைப் பயன்படுத்த வேண்டும் என்றும், உலக மாதிரிகளைப் பின்பற்ற முயலாமல், எளிமையுடனும்  பணியார்வத்துடனும் முன்னேற நாள்தோறும் முயற்சிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பினரைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.  

அன்பை அடிப்படையாகக் கொண்ட குடும்பம், தனதுக் குடும்பத்தைப் போலவே அருகில், வீட்டிற்கு வெளியில் என்ன நடக்கிறது என்பதிலும், பிறரது நலனில் அக்கறை மற்றும் கவனத்தை செலுத்துவதிலும் வளர வேண்டும் என வலியுறுத்திய திருத்தந்தை, இவ்வாறு ஏற்படும் உறவு,  பிறரை வரவேற்கவும் ஆதரவு கொடுக்கவும் வழிவகை செய்யும் எனவும் கூறியுள்ளார்.

குடும்பமாக வாழ்தல் என்பது சான்றுள்ள வாழ்வு என்றும், அர்ப்பணத்துடன் பணி செய்ய நம்மை உருவாக்கும் இடம் என்றும் கூறிய திருத்தந்தை, வாழ்க்கைத்துணையினர் ஒருவர் மற்றொருவருடனும், குழந்தைகளுடனும், உரையாடலை மேற்கொள்ளவும், ஆலயத்திற்குக் குடும்பமாகச் செல்லவும், நேரம் ஒதுக்கி வாழும்படிக் கேட்டுக் கொண்டார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2022, 15:52