தேடுதல்

ஊர்பி எத் ஓர்பி செய்தி: ஆண்டவரின் பிறப்பு, அமைதியின் பிறப்பு

இயேசுவின் பிறப்பு, நம் வாழ்விலும் உலகிலும் அமைதியின் பாதையை நமக்குக் காட்டுகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா வத்திக்கான்

உலகெங்கும் வாழ்கின்ற வத்திக்கான் வானொலியின் தமிழ் நெஞ்சங்களே, உங்கள் எல்லாருக்கும் எமது இதயங்கனிந்த கிறிஸ்மஸ் பெருவிழா நல்வாழ்த்துக்கள். பிறந்திருக்கும் உலக மீட்பராம் இயேசு பாலன், நுகர்வுக் கலாச்சாரத்தில் விரைந்துகொண்டிருக்கும் நம் சமுதாயத்தின் மத்தியில் கடவுளின் உடனிருப்பை நமக்குக் காட்டுகிறார். இயேசு கொணரும் அன்பு அமைதி மற்றும், மகிழ்வு உங்கள் அனைவரிலும் நிரம்புவதாக. இவ்வாண்டு கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்க உரோம் நகர் வந்திருந்த திருப்பயணிகள் மற்றும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வழக்கத்திற்குச் சற்று அதிகமாகவே இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டபின் இப்பெருவிழாவை உரோம் நகரில் சிறப்பிக்க மக்கள் ஆவலோடு இருந்திருப்பதே இதற்குக் காரணம் என்று கூறலாம். டிசம்பர் 25, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் பகல் 12 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஊர்பி எத் ஓர்பி செய்தி (Urbi et Orbi) மற்றும், சிறப்பு ஆசிரைப் பெறுவதற்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தையும் அதற்கு வெளியேயும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிலமணி நேரங்களுக்குமுன்பே காத்திருந்தனர். சரியாக பகல் 12 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்தில் வந்து நின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்வளாகத்தில் காத்திருந்த மக்களை கையசைத்து வாழ்த்தினார். பின்னர் வளாகத்தில் அணிவகுத்து நின்றிருந்த இத்தாலிய காவல்துறை மற்றும், சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பினர்,  திருத்தந்தைக்கு நாட்டுப்பண்களை இசைத்து மரியாதை செலுத்தினர் அதற்குப்பின்பு உரோம் வாழ் மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கு கிறிஸ்மஸ் பெருவிழா நல்வாழ்த்துக்கள் எனக் கூறி தன் ஊர்பி எத் ஓர்பி செய்தியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஊர்பி எத் ஓர்பி செய்தி

 “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” (லூக்.2:14) என அன்று வானதூதர்கள் பெத்லகேம் இடையர்களுக்கு, இயேசுவின் பிறப்பு குறித்து அறிவித்தனர். கன்னி மரியாவிடம் பிறந்த ஆண்டவர் இயேசு, இந்த அமைதி என்ற கொடையோடு, நம்பிக்கை மற்றும், பற்றுறுதியில் நீங்கள் வளரும்வண்ணம், கடவுளின் அன்பை உங்கள் எல்லாருக்கும் கொணர்வாராக.

இப்பெருவிழா நாளில் பெத்லகேம் நோக்கி நம் கண்களை உயர்த்துகிறோம். ஆண்டவர் தொழுவத்தில் இவ்வுலகுக்கு வந்தார், மற்றும், அவர், விலங்குகளுக்காக உள்ள தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார். ஏனெனில், மரியா தம் மகன் இயேசுவைப் பெற்றெடுக்க காலம் வந்தபோதும்கூட அவரின் பெற்றோரால் ஓர் அறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் நம் மத்தியில் அமைதியிலும், இரவின் இருளிலும் வந்தார் ஏனெனில், இறைவார்த்தைக்கு  குறிப்பிட்ட இடமோ அல்லது உரத்த மனிதக் குரல்களோ தேவையில்லை. அவரே இறைவார்த்தையாக, நம் பாதையை ஒளிர்விக்கும் ஒளியாக, வாழ்வுக்குப் பொருள் கொடுக்கிறார், நற்செய்தி நமக்குக் கூறுவதுபோல், “உண்மையான ஒளியாகிய அவர், அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் ஒளியாக உலகிற்கு வந்தார்”  (யோவா.1:9).

இயேசு நம் மத்தியில் பிறந்திருக்கிறார், கடவுள் நம்மோடு இருப்பவராக அவர் இருக்கிறார். நம் இன்ப, துயரங்கள், நம் நம்பிக்கைகள், அச்சங்கள், என அனைத்திலும் நம்மோடு பகிர்ந்துகொள்ள நம் வாழ்வில் உடன்பயணிக்க அவர் வருகிறார். ஆதரவற்ற குழந்தையாக அவர் வருகிறார். ஏழையின் மத்தியில் ஏழையாக, அனைத்தும் தேவைப்பட்டவராக, குளிரில் பிறந்த அவர், வெதுவெதுப்பு மற்றும், குடியிருப்புக்காக நம் மனித இதயங்களின் கதவுகளை தட்டுகிறார்.   

ஒளியால் சூழப்பட்டிருந்த பெத்லகேம் இடையர்கள் போன்று, கடவுள் நமக்களிக்கும் அடையாளத்தைப் பார்ப்பதற்குப் புறப்படுவோமாக. நாம் கொண்டாடும் ஒருவரின் பிறப்பை மறக்கடிக்கும், ஆன்மிகச் சோம்பல் மற்றும், மேலோட்டமான பகட்டான விடுமுறையை வெற்றிக்கொள்வோமாக. இறைமகன் நமக்காகப் பிறந்துள்ள மாபெரும் நிகழ்வைத் தியானிப்பதைவிட, நம் இதயங்களை மழுங்கடித்து, அலங்காரங்கள் மற்றும், பரிசுப்பொருள்களுக்கு அதிகநேரம் நம்மைச் செலவழிக்க வைக்கும் காரியங்களைப் புறந்தள்ளுவோமாக.

ஊர்பி எத் ஓர்பி செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்
ஊர்பி எத் ஓர்பி செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவே நம் அமைதி   

அன்புச் சகோதரர் சகோதரிகளே, நம் கண்களை பெத்லகேம் நோக்கித் திருப்புவோம், அமைதியின் இளவரசரின் முதல் வலுவற்ற அழுகையை உற்றுக்கேட்போம். உண்மையில் இயேசுவே நம் அமைதி. அந்த அமைதி, உலகம் தர இயலாதது. அது, தம் மகனை இவ்வுலகுக்கு அனுப்பியதன் வழியாக, இறைத்தந்தையாம் கடவுள், மனித சமுதாயத்தின் மீது வழங்கிய அமைதியாகும். “ஆண்டவரின் பிறப்பு, அமைதியின் பிறப்பு” என்று, புனித பெரிய சிங்கராயர் கூறியிருக்கிறார். (மறையுரை 26, 5).

இயேசு கிறிஸ்து அமைதியின் வழியுமாவார். அவர், தம் மனிதப்பிறப்பு, பாடுகள், மரணம் மற்றும், உயிர்ப்பால், தன்னையே முடக்கிக்கொண்டுள்ள ஓர் உலகிலிருந்து வழிநடத்திச் செல்லும் பாதையைத் திறந்துவிட்டுள்ளார். பகைமை மற்றும், போரின் இருள்சூழ்ந்த நிழலால் நசுக்கப்பட்டுள்ள ஓர் உலகில், உடன்பிறந்தஉணர்வு மற்றும் அமைதியில் வாழ்வதற்குத் திறந்த மற்றும், சுதந்திரமான பாதையை அவர் திறந்துவிட்டுள்ளார். அந்தப் பாதையை நாம் பின்ற்றுவோம். ஆயினும், அவ்வாறு பின்தொடர, இயேசுவின் பின்னால் நம்மால் நடக்க திறனைப் பெறவேண்டும். நம்மைக் கீழேவிழத்தாட்டும் மற்றும், நம் பாதையைத் தடைசெய்யும் சுமைகளை நம்மிலிருந்து அகற்றுவோம்.

அமைதியின் பாதையைத் தடுக்கும் எதிர்மறை சக்திகள்

நம் சுமைகள் என்ன? கடினமான பாரமாக இருப்பது எது? இயேசுவின் பிறப்பை ஏற்று, அதனை வரவேற்பதிலிருந்து அரசன் ஏரோதையும் அவரது அவையையும் தடைசெய்த, பதவி, பணம், ஆணவம், வெளிவேடம், போலித்தனம் போன்ற அதே எதிர்மறை சக்திகளே, பெத்லகேமுக்குச் செல்வதிலிருந்து நம்மைத் தடுத்து நிறுத்துகின்றன. கிறிஸ்மஸின் திருவருளிலிருந்து நம்மை ஒதுக்குகின்றன. அமைதிப் பாதையின் நுழைவாயிலை அடைத்துவிடுகின்றன. உண்மையில், மனிதசமுதாயத்தைத் தொடர்ந்து வதைக்கும் போரின் பனிக்காற்றை, அமைதியின் இளவரசரும் நமக்குக் கொடுத்துள்ளார் என்பதை கவலையோடு நாம் ஏற்கவேண்டும்.

இயேசுவின் மற்றும் அமைதியின் பிறப்பாக கிறிஸ்மஸ் இருக்க விரும்பினால், பெத்லகேமை நோக்குவோம், மற்றும், நமக்காகப் பிறந்துள்ள குழந்தையின் திருமுகத்தைத் தியானிப்போம். அந்த சிறிய மற்றும், எளிமையில் உலகெங்கும் அமைதிக்காக ஏங்கும் எல்லாச் சிறாரின் முகங்களைக் காண்போம்.

உக்ரைனில் அமைதிக்காக...

உக்ரைனில் பத்து மாதங்களாக இடம்பெற்றுவரும் போரின் கொடுமையால், இந்த கிறிஸ்மஸ் நாளில் இருளிலும், கடுங்குளிரிலும் வாழ்கின்ற நம் உக்ரேனியச் சகோதரர் சகோதரிகள், மற்றும், தங்களின் வீடுகளைவிட்டு தொலைவில் வாழ்கின்றவர்களின்  முகங்களையும் பார்ப்போம். துன்புறும் எல்லாருக்கும் வெளிப்படையான தோழமையுணர்வு காட்டுவதற்கு ஆண்டவர் நம்மைத் தூண்டுவாராக. ஆயுதங்களின் இடிமுழக்கம் கேட்காமல் இருக்கச் செய்யவும், அறிவற்றதனமான இப்போரை உடனடியாக முடிவுக்குக் கொணரவும் அதிகாரத்தைக் கொண்டிருப்போரின் மனங்களை ஆண்டவர் ஒளிர்விப்பாராக. உலகப்போக்கில் சிந்திக்கும் வழிகளால் நடத்தப்பட்டு மற்ற ஆலோசனைகளில் கவனம்செலுத்துவதற்கு நாம் விரும்புவது கவலை தருகிறது. ஆயினும் திருக்குழந்தையின் குரலுக்குச் செவிமடுப்பவர் யார்?   

துயருறும் உலகின் மற்ற பகுதிகளில் அமைதிக்காக..

ஊர்பி எத் ஓர்பி செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்
ஊர்பி எத் ஓர்பி செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

நம் காலம் உலகின் மற்ற பகுதிகளிலும் அமைதியின் மிகக் கடுமையான பஞ்சத்தையும்,  இந்த மூன்றாம் உலகப் போரின் எதிர்விளைவுகளையும் சந்தித்துவருகிறது. போரின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள, சிரியாவையும், அண்மை மாதங்களில்கூட வன்முறையும், முரண்பாடுகளும் அதிகரித்துள்ள புனித பூமியையும் நினைத்துப் பார்ப்போம். இயேசு பிறந்த புனித பூமியில், இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனியர்களுக்கு இடையே ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு உரையாடல் மற்றும், ஏனைய நடவடிக்கைகள் இடம்பெறுமாறு ஆண்டவரை வேண்டுவோம். மத்தியக் கிழக்கில் வாழ்கின்ற கிறிஸ்தவ சமூகங்களை குழந்தை இயேசு பேணிப் பாதுகாப்பாராக. அதனால் பல்வேறு மதத்தவருக்கிடையே உடன்பிறந்த உணர்வுள்ள நல்லிணக்க வாழ்வின் அழகை அங்குள்ள ஒவ்வொரு நாடும் அனுபவிக்கும். குறிப்பாக, லெபனோன் நாடு, உலகளாவிய சமுதாயத்தின் உதவியோடும், உடன்பிறந்தஉணர்வு மற்றும், தோழமையுணர்வில் பிறக்கின்ற வல்லமையோடும் நாட்டை கட்டியெழுப்ப குழந்தையாம் கிறிஸ்து உதவுவாராக. போர் மற்றும், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சாஹெல் பகுதியின் மக்கள் மற்றும், பூர்வீக இனத்தவர்க்கிடையே அமைதியான நல்லிணக்கம் உருவாக அப்பகுதியை கிறிஸ்துவின் ஒளி ஒளிரச்செய்வதாக. ஏமன், மியான்மார், மற்றும், ஈரானில் இரத்தம் சிந்துதல் முடிவுற்று, நிலையான போர்நிறுத்தத்திற்கு ஆண்டவரின் ஒளி இட்டுச் செல்வதாக. பல்வேறு அமெரிக்க நாடுகளில் நிலவும் அரசியல் மற்றும், சமூகப் பதட்டநிலைகள் ஒழிந்து அமைதியை உருவாக்க அனைத்து அரசியல் தலைவர்களையும் நன்மனம் கொண்ட அனைவரையும் ஆண்டவர் தூண்டுவாராக. குறிப்பாக ஹெய்ட்டியில் நீண்டகாலமாகத் துன்புறும் மக்களை நினைக்கின்றேன்.         

பசியால் வாடுவோரை நினைத்துப் பார்க்க...

இப்பெருவிழா நாளில் உணவு உண்ண நாம் அமர்ந்திருக்கையில், “ரொட்டியின் வீடு எனப்பொருள்படும் பெத்லகேமிலிருந்து நம் கண்களைத் திருப்பாதிருப்போம். பெருமளவான உணவுகள் வீணாக்கப்படல் மற்றும், வளங்கள் ஆயுதங்களுக்குகெனப் பயன்படுத்தப்பட்டுவரும்போது பசியால் வாடும் அனைவரையும் குறிப்பாக சிறாரை நினைத்துப் பார்ப்போம். உக்ரைன் போர்  இச்சூழலை மேலும் கவலைக்குள்ளதாக ஆக்கியிருக்கும்வேளை, போர், மக்கள் எல்லாரையும், குறிப்பாக, ஆப்கானிஸ்தான் மற்றும், ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளில் பசிக்கொடுமையில் மக்களை வைத்துள்ளது. ஒவ்வொரு போரும் பசிக்கொடுமைக்கு காரணமாகியுள்ளது, உணவை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது, மற்றும், உணவு விநியோகத்தைத் தடைசெய்கிறது என்பதை அறிவோம். அரசியலில் பொறுப்புள்ளவர்கள் முதல் அனைவரும், உணவை, அமைதியின் ஒரு கருவியாக அமைப்பதற்குத் தங்களையே அர்ப்பணிப்பதற்கு அமைதியின் இளவரசரிடமிருந்து இந்நாளில் கற்றுக்கொள்வோமாக. நம் அன்புறவுகளோடு நாம் விழாக்கொண்டாடுகையில், பொருளாதார நெருக்கடியால் துன்புறும் இக்காலத்தில் வேலைவாய்ப்பின்மை மற்றும், வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள் பற்றாக்குறைவால் துயருறுவோரை நினைத்துப் பார்ப்போம்.

புலம்பெயர்ந்தோரை வரவேற்றல்

அன்புச் சகோதரர் சகோதரிகளே, புறக்கணிப்பால் நோயுற்றுள்ள இன்றைய ஓர் உலகுக்குள் உண்மை ஒளியாகிய இயேசு இன்று வந்துள்ளார். பலநேரங்களில் ஏழைகளுக்கு நாம் செய்வதுபோல, இந்த உலகம் அவரை வரவேற்கவில்லை, அவரைப் புறக்கணிக்கிறது, சில வசதி, உணவு மற்றும், குளிராடைகளுக்காக பல புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் நம் கதவுகளைத் தட்டுகின்றனர். விளிம்புநிலையில் இருப்போர், தனிமையில் வாழ்வோர், கைவிடப்பட்டோர், நோயாளிகள், வயதுமுதிர்ந்தோர், கைதிகள் போன்றோரை மறக்காதிருப்போம்.  

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் தம்மை வெளிப்படுத்தாமல் தூய்மை, மற்றும், திறந்தமனம் கொண்டோருக்குத் தம்மை வெளிப்படுத்திய கடவுளின் எளிமையை   (காண்க.மத்.11:25) பெத்லகேம் நமக்குக் காட்டுகிறது. இடையர்கள் போன்று, நம் மீட்புக்காக மனிதனான கடவுளின் இந்நிகழ்வால் வியப்படைய நம்மை அனுமதிப்போம். அவர் தம்மையே ஏழையாக்கிய அனைத்து நன்மைத்தனத்தின் ஊற்று. கடவுளின் அன்பால் ஆழமாக இயக்கப்பட நம்மை அனுமதிப்போம். தம் நிறைவில் நம்மைப் பங்குதாரர்களாக்கும்வண்ணம் தம் மகிமையை விடுத்து தம்மையே தாழ்த்திய இயேசுவைப் பின்பற்றுவோம்.  

இவ்வாறு தன் ஊர்பி எத் ஓர்பி செய்தியை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின்னர் உரோம் நகருக்கும் உலகுக்கும் அளிக்கும் ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை ஆசிரைத் தொடங்குவதற்குமுன், இச்சிறப்பு ஆசிரை தக்க ஆன்மிகத் தயாரிப்போடு பெறுவோருக்குப் பரிபூரண பலன் உண்டு.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஊர்பி எத் ஓர்பி செய்தியும் ஆசிரும் உலகெங்கும் ஏறத்தாழ 170 ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பப்பட்டது.

ஊர்பி எத் ஓர்பி செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்
ஊர்பி எத் ஓர்பி செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

மேலும், டிசம்பர் 24, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 7.30 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் .திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றினார். அத்திருப்பலியில் சிறார் மலர்க்கொத்துக்களுடன் திருப்பலியின் பவனியின்போது வந்து குழந்தை இயேசுவுக்கு மலர்களை அர்ப்பணித்தனர். திருப்பலி முடிந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சிறாரோடு திருப்பூட்டறைக்குச் சென்றார். இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரையும் ஆற்றினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதுபோன்று, அமைதி ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மனிதரிலிருமிருந்து தொடங்கவேண்டும். நாம் அமைதியின் கருவிகளாகச் செயல்படுவோம்.

திருத்தந்தையின் கிறிஸ்மஸ் திருப்பலி 241222
திருத்தந்தையின் கிறிஸ்மஸ் திருப்பலி 241222

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 December 2022, 15:28