திருத்தந்தை: கடவுள் அனுப்பும் அனைத்தையும் அன்போடு ஏற்கவேண்டும்
கிறிஸ்மஸ் பெருவிழா காலத்தில் இருக்கிறோம். உரோம் மாநகரில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் கிறிஸ்மஸ் குடில்கள், மற்றும், கிறிஸ்மஸ் மரங்கள் மின்விளக்குகளால் மின்னிக்கொண்டிருக்கின்றன. பல நாடுகளின் ஏராளமான சுற்றுலா மற்றும், திருப்பயணிகளை நகரமெங்கும் காண முடிகின்றது. 2022ஆம் ஆங்கில ஆண்டு இன்னும் ஓரிரு நாள்களில் நம்மிடமிருந்து விடைபெறவிருக்கின்ற இந்நேரத்தில் இப்பயணிகளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆசிர் மற்றும் வாழ்த்தோடு புதிய 2023ஆம் ஆண்டைத் தொடங்கும் ஆவலில் டிசம்பர் 28, இப்புதன் காலையில் வத்திக்கானின் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்தனர். திருஅவையின் மறைவல்லுநரான புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அதாவது புனித பிரான்சிஸ் சலேசியார் இறைபதம் சேர்ந்ததன் 400ஆம் ஆண்டை மையப்படுத்தி இப்பயணிகளுக்கு இவ்வாண்டின் இறுதி பொது மறைக்கல்வியுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். (லூக்.2,15-16)
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். உங்களுக்கு மீண்டும் எனது கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். இத்திருவழிபாட்டுக் காலம், கிறிஸ்மஸ் பேருண்மை குறித்து நிதானமாகத் தியானிக்க நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்று ஆயரும் திருஅவையின் மறைவல்லுநருமான புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் இறைபதம் சேர்ந்ததன் 400ஆம் ஆண்டாகும். இந்த நான்காம் நூற்றாண்டு தொடர்பாக, இப்புனித ஆயரின் சில சிந்தனைகள் குறித்து இன்று நாம் சிந்திப்போம். ஜெனீவாவின் ஆயரான இவரின் பண்புகளில் வெளிப்படும், “அனைத்தும் கடவுளுக்கு உரியது” என்ற தலைப்பில், இன்று ஒரு புதிய திருத்தூது மடலை வெளியிடுவதில் மகிழ்கிறேன். திருஅவையில் அனைத்துமே அன்புக்கு உரியது, அனைத்தும் அன்பில் வாழ்கிறது, அன்பு வழியாக அனைத்தும் நடைபெறுகிறது, மற்றும், அன்பிலிருந்தே வருகிறது என இப்புனிதர், இறையன்பு குறித்த தனது ஆய்வுகட்டுரையில் எழுதியிருக்கிறார். புனித பிரான்சிஸ் டி சேல்சின் தோழமையில் இயேசுவின் பிறப்புப் பேருண்மை பற்றி இன்று நாம் சற்று ஆழமாகத் தியானிக்க முயற்சிப்போம்.
புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்களுக்கு கிறிஸ்மஸ் பேருண்மை என்பது, கடவுள் நம் மத்தியில் இருப்பவராக, கிறிஸ்துவின் உண்மையான தனித்துவத்தின் அடையாளமாக, தீவனத்தொட்டியின் ஏழ்மை மற்றும், எளிமை நோக்கி நம் கண்களைத் திருப்பச் செய்கிறது. நம் பலவீனங்கள், நம் பாவங்கள், மற்றும், இதயத்தின் இறுக்கமான நிலை ஆகியவற்றை அறிந்திருக்கும் கடவுள், புதிதாகப் பிறந்துள்ள குழந்தையாக நம் உலகுக்குள் வந்துள்ள அவர், தமது அன்புப் பிணைப்பால் தம்மிடம் நம்மை ஈர்க்கிறார். இவ்வாறு இயேசுவின் பிறப்பு, சுதந்திரமான, அருள்நிறைந்த மற்றும், உண்மையிலேயே அன்பாதரவற்றவராக கடவுளை வெளிப்படுத்துகிறது. உலகச் செல்வங்கள் மற்றும், அதிகாரம் ஆகியவற்றிலிருந்து முழுவதும் விடுபட்டு மகிழ்வோடு அவரைப் பின்பற்றுவதன் வழியாக, நம் இதயங்களுக்குள் ஆண்டவரை வரவேற்கவேண்டும் எனவும், பாலன் இயேசு போன்று, எதற்கும் ஆசைப்படாமல், கடவுள் நமக்கு அனுப்பும் அனைத்தையும் கடவுளின் அன்புப் பராமரிப்பில் முழுநம்பிக்கை வைத்து, அன்போடு ஏற்கவேண்டும் எனவும் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் நமக்குக் கற்றுத் தருகிறார். பெத்லகேமின் எளிமையான தீவனத் தொட்டி, உலகின் மீட்பரான பெத்லகேம் குழந்தையில் மனுஉருஎடுத்த கடவுளின் எல்லையற்ற அன்பைப் பின்பற்றுவதற்கு நம்மைத் தூண்டுவதாக. கடவுள் நம்மைக் கவர்வதற்கு விரும்பும் வழி அன்பாகும். கடவுளின் அன்பு, தனக்குமட்டுமே உரியது என்ற தன்னலநோக்குடையது அல்ல. அவரது அன்பு, தூய்மையான கொடை, மற்றும், தூய்மையான அருளாகும். அவரது அன்பு அனைத்தும் நமக்காக, நம் நன்மைக்காக உள்ளது.
இவ்வாறு புனித பிரான்ஸ் டி சேல்ஸ் அவர்கள், கிறிஸ்மஸ் பேருண்மை குறித்து கூறியிருப்பதை எடுத்துரைத்து இவ்வாண்டின் இறுதி மறைக்கல்வியை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், அமைதியில் திருஅவைக்கு ஆதரவளித்துவரும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு உங்கள் எல்லாரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடல்நலம் மிகவும் குன்றியுள்ள அவருக்கு ஆண்டவர் ஆறுதளிக்குமாறும், தன் வாழ்வின் இறுதிவரை திருஅவை மீதுள்ள அன்புக்குச் சான்றுபகர்வதில் அவரை ஆண்டவர் பேணிக்காக்குமாறும் அவருக்காகச் செபியுங்கள் என்று கூறினார். பின்னர், போரினால் கடுமையாய்த் துன்புறும் உக்ரேனியர்களுக்காகவும், அந்நாட்டில் அமைதி நிலவவும் செபிக்குமாறும் கூறினார் திருத்தந்தை. இறுதியில், புனித கிறிஸ்மஸ் மற்றும், பதிய ஆண்டு, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்வு மற்றும் அமைதியை நிரம்பக்கொணர்வதாக என்று வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார். திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்