தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

உடன்பிறந்த உறவு நிலையை கட்டியெழுப்பும் வழிகளைத் தேடுங்கள்

தூய ஆவியாரை வரவேற்பதன் வழியாக முதிர்ச்சியடைந்த மனநிலையில் அநீதியின் அனைத்து வடிவங்களையும் அகற்றவும், ஒன்றிணைந்த நிலையில் நம் காலத்தின் சவால்களுக்கான பதில்களைத் தேடவும் அவர் நம்மை ஊக்குவிக்கிறார் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இளையோரே, போரின் அழிவுகளுக்கு மத்தியில், கடவுள் மற்றும் மனிதகுலத்தின் மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.  

2022, டிசம்பர் 28 முதல் 2023 ஜனவரி 1-ஆம் தேதி, ஜெர்மனியிலுள்ள Rostock நகரத்தில் நடைபெறும் 45-வது Taizé கிறிஸ்தவக் குழுமத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் இளையோருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பாவில் போர் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் நீங்கள் கவலையும் துயரமும் அடைந்திருக்கிறீர்கள் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி மற்றும் உடன்பிறந்த உறவு நிலையை கட்டியெழுப்புவதற்கான வழிகளைத் தேடும்விதத்தில் நீங்கள் இக்கூட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்.

நம்மைச் சூழ்ந்துள்ள தீமைகள் மற்றும் சில நேரங்களில் நம் இதயங்களில் குடியிருக்கும் தீமைகள் பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமென அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதகுலத்திற்கு இப்போர் ஏற்படுத்தி வரும் துயரங்களால் நாம் விரக்தியடைந்துவிடாமல் கடவுள்மீது முழுமையான நம்பிக்கைக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"அக வாழ்வும் ஒற்றுமையும்" என்ற தலைப்பில் அமைந்துள்ள இவ்வாண்டுக் கூட்டத்தின்  மையப்பொருளைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் உடனிருப்பால் வலுவூட்டப்பட்ட மனித ஒற்றுமையை கடைப்பிடிப்பதன் வழியாக இவ்வுலகை மாற்றுவதற்கு கடவுள் எவ்விதத்தில் செயலாற்ற முடியும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய வரலாற்றுச் சூழலில் இளையோரில் பலர் கவலையுடனும் சில நேரங்களில் பயத்துடனும் வாழ்கின்றனர் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து முயற்சிகளையும் தடுக்கும் மற்றும் தனிமைப்படுத்தும் பயத்தை எதிர்க்க இயேசு எப்படித் தன் சீடர்களைத் தயார் செய்தார் என்றும் விளக்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2022, 14:40