தேடுதல்

திருப்பீடத்தின் வட அமெரிக்கக் கல்லூரியைச் சேர்ந்தவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பீடத்தின் வட அமெரிக்கக் கல்லூரியைச் சேர்ந்தவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

உரையாடல், ஒற்றுமை மற்றும் பணிஆர்வத்துடன் வாழுங்கள்- திருத்தந்தை

கடவுளுடையக் குரலுக்குச் செவிசாய்த்து, அவருக்கும் அவருடைய மக்களுக்கும் எவ்வாறு பெருந்தன்மையோடும் முழு மனதுடன் சேவை செய்வது என்பதைக் கண்டறிய தனிப்பட்ட உரையாடல் செபம் தேவை - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசுவைப் பின்பற்றிய சீடர்களைப் போல அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் அனைவரும் உரையாடல், ஒற்றுமை மற்றும் பணி ஆர்வம் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 14, சனிக்கிழமையன்று, வத்திக்கானில் உள்ள புனித கிளமெந்தினா அறையில் திருப்பீடத்தின் வட அமெரிக்கக் கல்லூரி அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் மற்றும் அருள்பணியாளார்களைச் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் உள்ள முதல் சீடர்களை அழைத்தல் என்ற பகுதியை வாசித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருத்தூதர் அந்திரேயா போல உரையாடல், ஒற்றுமை மற்றும் பணிஆர்வம் கொண்டு மறைப்பணியாளர்களாகிய நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நற்கருணை ஆண்டவர் முன் உரையாடுங்கள்

என்ன தேடுகின்றீர்கள் என்று கேட்ட இயேசுவைப் பார்த்து,  நீர் எங்கே தங்கி இருக்கின்றீர் என்று கேட்ட முதல் சீடர்கள், வந்து பாருங்கள் என்ற இயேசுவின் பதிலினால் கவரப்பட்டனர் என்றும், இத்தகைய இயேசு, நற்கருணை முன் அவரோடு தனிப்பட்ட உரையாடல் செய்ய இன்று நம்மை அழைக்கின்றார் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மேலும் ஆன்மிகத் துணையுடன் கடவுளுடைய வார்த்தையை தியானித்து, அவருடனான உறவை தினசரி வளர்க்க வேண்டும் எனவும், இத்தகைய நேரங்களில்தான் நாம் அவருடைய குரலுக்குச் செவிசாய்த்து, அவருக்கும் அவருடைய மக்களுக்கும் எவ்வாறு பெருந்தன்மையோடும் முழு மனதுடனும் பணியாற்றுவது என்பதைக் கண்டறிய முடியும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

உருவாக்கத்திற்கு உதவும் ஒற்றுமை

அன்று இயேசுவோடு தங்கியிருந்த சீடர்கள், அவருடைய வார்த்தை, செயல் மற்றும் பார்வையிலிருந்து அவருக்கு எது முக்கியம் என்பதையும், இறைத்தந்தை அவரை  அனுப்பிய காரணம் என்ன என்பதையும் கண்டறிந்தனர் என்றும், நாமும் அது போல உடன்வாழ்பவரின்  மகத்துவம்,  கடவுளின் சாயல் மற்றும்  பொதுவாழ்க்கையின் இன்னல்களைத்  தாங்கும் திறன் பெற்று ஒற்றுமையோடு வாழ்வது அவசியம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருஅவையின் அடையாளமாகும் பணியார்வம்

கிறிஸ்துவுடனான உரையாடல் மற்றும் ஒற்றுமை, பணியாக மாறி அந்திரேயா தனது சகோதரர் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தது போல, நமது உரையாடலும் ஒற்றுமை உறவும் சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களை இயேசுவிடம் கொண்டு வந்து சேர்க்கும் பணியார்வம் கொண்டதாக இருக்கவேண்டுமென வலியுறுத்தினார் திருத்தந்தை.

இதனால் கல்வி தொண்டு, இரக்கம், ஆன்மீகம், மற்றும் உடல் உழைப்புடன் செய்யும் பணிகளால் திருஅவையின் அடையாளங்களாக நாம் திகழ முடியும் எனவும் மேலும் கூறினார் திருத்தந்தை.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2023, 13:37