தேடுதல்

பயம் என்னும் பரிசு புத்தக அட்டைப்படம் (la paura come un dono) பயம் என்னும் பரிசு புத்தக அட்டைப்படம் (la paura come un dono)  

பயம் ஆன்மாவைத் தடுத்து நிறுத்துகிறது – திருத்தந்தை

நாம் என்ன செய்கிறோம் எப்படி செய்கிறோம் என்பதை கவனமாக எடைபோடும், தாய் போல நம்மை எச்சரிக்கும் பயம் - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

தவறு செய்ய நான் பயப்படுகின்றேன், ஆனால் அதிகப்படியான பயம் உண்மையான கிறிஸ்தவம் அல்ல என்றும், பயம் என்பது தவறு செய்யாமல் நம்மை வழிநடத்தும், நாம் என்ன செய்கிறோம் எப்படி செய்கிறோம் என்பதை கவனமாக எடைபோடும், தாய் போல எச்சரிக்கும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 25 அன்று San Paolo பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் பயம் ஒரு பரிசு என்ற புத்தகமானது உளவியலாளர் Salvo Noé உடன் திருத்தந்தை நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பாக வெளிவர உள்ள நிலையில் அப்புத்தகத்தில், பயம் ஆன்மாவைத் தடுத்து நிறுத்துகிறது என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தொடங்கி, தலைமைத்துவப்பணியில் அவரது எண்ணங்கள், அச்சங்கள், உணர்வுகள் பற்றியும், புலம்பெயர்ந்தோர், ஓரினச்சேர்க்கையாளர்கள், தொழில், சுற்றுச்சூழல் நட்புறவு, சமூகப்பணி, அருள்பணித்துவ பயிற்சி,மற்றும் அதுசார்ந்த முறைகேடுகளைத் தடுப்பது போன்ற தலைப்புகளிலும் இவ்வுரையாடலை நிகழ்த்தியுள்ளார்.

நானும் சில நேரங்களில் தவறு செய்ய பயப்படுகிறேன், ஆனால் அதிகப்படியான பயம் கிறிஸ்தவம் அல்ல" என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அருள்பணித்துவ பயிற்சி என்பது நம்மிடம் இருக்கும் பல வரம்புகளுக்கும் உளவியல் குறைபாடுகளுக்குமான புகலிடம் அல்ல என்றும், மூத்த அருள்பணியாளர்கள், அர்ப்பணிக்கப்பட்டவர்கள், உதவியுடன்  மனிதநேயமும் ஆற்றலும் கொண்ட வல்லுநர்களை உருவாக்க வழிவகுக்கும் இடம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

புனிதமான அதிகாரிகளை அல்ல. மாறாக மக்களை எதிர்கொண்டு ஆதரவு, மனித நெருக்கம் மற்றும் நம்பிக்கையின் சாட்சிகளாக அவர்களைச்  சந்திக்கும் அருள்பணியாளர்களை உருவாக்கும் இடம் அருள்பணித்துவ பயிற்சி இல்லம் என்றும்   குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஓரினச்சேர்க்கையாளர்கள்

தந்தையாம் கடவுள் அவரது பிள்ளைகள் யாரையும் மறுக்கவில்லை, மாறாக நெருக்கம், கருணை மென்மை கொண்டு செயல்படுகின்றார் எனவும், யாரையும் தீர்ப்பிடாது, ஓரங்கட்டாது, ஒவ்வொருவரையும் அன்புடன் அணுகி திறந்த இதயத்துடன் அன்பு செய்து ஒன்றுபடுத்துகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

புலம்பெயர்ந்தோர், சுற்றுச்சூழல் நட்புறவு, கிறிஸ்தவத்திற்கு எதிரான அதிகமான பயம், திருஅவை, தெருவோரப்பணி என்பன போன்றவற்றைக் குறித்தும் அவ்வுரையாடலில் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2023, 13:39