தேடுதல்

அனைத்துலக ஐரோப்பிய ஆய்வுகள் நிறுவனத்தின் உறுப்பினர்களை சந்திக்கும் திருத்தந்தை அனைத்துலக ஐரோப்பிய ஆய்வுகள் நிறுவனத்தின் உறுப்பினர்களை சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

அமைதிக்காகத் தீவிரமாக உழைக்க வேண்டும் : திருத்தந்தை

போர் என்பது பயங்கரமானது. இருப்பினும், நாம் அமைதிக்கான முயற்சிகளை கைவிடக்கூடாது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனிதர்களிடையே அமைதி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைத்துள்ளதால், அதற்காக நாம் துரிதமாக உழைக்க வேண்டும் என்றும், கடவுளிடம் உருக்கமாக மன்றாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 26, இவ்வியாழன்று, அனைத்துலக ஐரோப்பிய ஆய்வுகள் நிறுவனத்தின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துலக கலாச்சாரங்களின் மையமாக இருக்கும் உரோமைக்கு அவர்களை வாழ்த்தி வரவேற்பதாகவும் கூறினார்.

உலகளாவிய மக்களின் வாரிசாக இருக்கும் புனித பேதுருவின் தலைமைப் பீடமானது,  எல்லா மக்களின்  அங்கலாய்ப்புகள், ஏக்கங்கள்,  முயற்சிகள் மற்றும் ஒரு சிறந்த வாழ்க்கையை அடைவதற்கான அவர்களின் சிரமங்களை எப்போதும் கவனித்து, இயேசு தம் சீடர்களுக்கு வாக்குறுதியளித்த அமைதியை அவர்கள் அடைவதை உறுதிசெய்ய முயல்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த அமைதியானது, வெறும் மனித வழிகளால் அடையக்கூடியதாக மட்டுமல்லாமல், நமக்கு சவால் விடுவதாகவும் அமைந்துள்ளது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைதியை அடைவதற்காக நாம் துரிதமாக உழைக்கவேண்டும் என்றும் இறைவனிடம் உருக்கமாக மன்றாட வேண்டும் என்றும் அவர்களிடம் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு போரும் உலகை, அது கண்டுபிடித்ததை விட மோசமான நிலையில் விட்டுச் செல்கிறது என்றும்,  போர் என்பது அரசியல் மற்றும் மனிதநேயத்தின் தோல்வி, வெட்கக்கேடானது, தீய சக்திகளுக்கு முன் தோல்வியடைவது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர் என்பது பயங்கரமானது என்றாலும், அமைதிக்கான முயற்சிகளை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது, இந்தப் போர் எற்படுத்தும் பாதிப்பிலிருந்து புதிதாக ஏதாவது ஒன்று பிறக்கலாம் என்றும், இந்தத் தோல்வியிலிருந்த நமது வாழ்க்கைக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது இறைவேண்டல், நம்பிக்கையில் பிறந்த அன்பு மற்றும் பணிகள் வழியாகத்  தீர்வுகளை கண்டு உடன்பிறந்த உறவு மற்றும் உண்மையான மனிதநேயம் கொண்டு வெறுப்பையும் நிராகரிப்பையும் அகற்ற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2023, 13:56