மியான்மார், பெரு, உக்ரைனில் இடம்பெறும் வன்முறை குறித்து கவலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
மியான்மாரில் இடம்பெற்றுவரும் வன்முறைகள், குறிப்பாக, அண்மை நாள்களில் பழம்பெருமை வாய்ந்த விண்ணேற்பு அன்னை மரியா ஆலயம் உட்பட வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டு வருவது மிகுந்த கவலை தருகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறினார்.
சனவரி 22, இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரையாற்றிய பின்னர், மியான்மார், பெரு, காமரூன், மற்றும் உக்ரைன் நாடுகளில் இடம்பெறும் வன்முறை குறித்து ஆழ்ந்த கவலையோடு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மியான்மார் நாட்டின் மிகவும் பழமை வாய்ந்த மற்றும், முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான Chan Tharலுள்ள விண்ணேற்பு அன்னை மரியா ஆலயம் குண்டுவீச்சால் அழிக்கப்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, மியான்மாரின் பல நகரங்களில் துயருறும் மக்களோடு தன் உடனிருப்பைத் தெரிவித்தார்.
மியான்மாரில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறை விரைவில் முடிவுறவேண்டும் மற்றும், மன்னிப்பு, அன்பு, அமைதி ஆகியவற்றின் பாதைக்கு வழிகள் திறக்கப்படவேண்டும் என கெஞ்சிக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அவ்வளாகத்தில் கூடியிருந்த மக்கள் எல்லாரையும் மியான்மார் நாட்டிற்காக அன்னை மரியாவிடம், அருள்மிகப் பெற்ற மரியே வாழ்க என்ற செபத்தை செபிக்குமாறு கூறிச் செபித்தார்.
மேலும், மியான்மார் இராணுவம் அண்மையில் முக்கிய ஆலயம் ஒன்றைத் தாக்கியிருப்பது மற்றும் அந்நாட்டில் இடம்பெறும் வன்முறை ஆகியவை குறித்து அந்நாட்டு கர்தினால் சாரலஸ் மாங் போ உட்பட பல்மதத் தலைவர்கள் கவலை தெரிவித்திருப்பதோடு, நாட்டில் அமைதி நிலவவும் உருக்கமாக விண்ணப்பித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்