தேடுதல்

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இறுதி வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இறுதி வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ்.   (ANSA)

தீமையைத் துறக்குமாறு கடவுள் நமக்கு அறிவுறுத்துகிறார்

இறைவன் நமக்கு முன் வைத்துள்ள ஒற்றுமையின் பாதையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போரும் அநீதியும் எங்குத் தோன்றினாலும் கிறிஸ்தவர்கள் அதனை எதிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஜனவரி 25, இப்புதனன்று நினைவுகூரப்பட்ட புனித பவுலடியாரின் மனமாற்றத் திருநாளில் நிறைவுக்கு வந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இறுதிநாளில் தான் வழங்கிய மறையுரையில் இவ்வாறு அறிவுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துரோகத்தால் விளையும் வன்முறைக்கு முன் நம்மிடம் நிலவும் அலட்சியத்தாலும், புரிதலின்மையாலும் ஆண்டவர் இயேசு மிகவும் துயரத்திற்கு உள்ளாகிறார் என்றும் கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இறுதிநாளைக்  குறிக்கும் வண்ணம், புனித பவுல் பெருங்கோவிலில் நிகழ்த்தப்பட்ட மாலை வழிபாட்டில், கிறிஸ்தவ மதத்தின் அனைத்துப் பிரிவினரும் (denominations) ஒன்றிணைந்து நடக்கவேண்டிய பாதையை இயேசு ஆண்டவர் நம் கண்முன் வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

மனமாற்றத்திற்கு அழைப்புவிடுக்கும் வாசகங்களை மையப்படுத்தி தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "சோகமான மற்றும் கவலைக்குரிய செய்தி அறிக்கைகள் நிறைந்த இந்த நாள்களில் கிறிஸ்துவில் ஒரே சகோதரர் சகோதரிகளாக ஒன்றிணைவதன் மகிழ்ச்சியை இன்று நாம் கொண்டாடுகிறோம் என்று சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் மையக்கருத்தான 'நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்' என்பது குறித்து விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமையைத் துறக்குமாறு கடவுள் நமக்கு அறிவுறுத்துவதோடு, நாம் மனமாற்றம் பெறவும் தூண்டுகிறார் என்றும் எடுத்துரைத்தார்.

இறைவன் தூபத்தையும் காணிக்கைகளையும் விரும்புவதில்லை, ஆனால் ஏழைகள் உதவி பெற வேண்டும், அனாதைக்கு நீதி வழங்கப்பட வேண்டும், கைம்பெண்களின் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றே விரும்புகின்றார் என்பதை இறைவாக்கினரான எசாயா நூலிலிருந்து எடுத்துக்காட்டி விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2023, 14:26